(ஆர்.விதுஷா)

புற்றுநோய்க்கான  மருந்து  கொள்வனவில்  பாரிய  மோசடிகள் இடம்பெற்றுள்ளன. ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட  அனைத்து  தரப்பினர்களிடத்திலும்  ஆதார  பூர்வமாக முறையிட்டுள்ளோம். 

 

இருப்பினும்  இதுவரையில்  தகுந்த  நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எதிர்வரும்  இரு வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படாவிடின்    நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்த  போராட்டத்தை  மேற்கொள்ளவுள்ளதாக  அரசாங்க  வைத்திய  அதிகாரிகள்  சங்கம்  எச்சரித்துள்ளது .  

அரசாங்க  வைத்திய  அதிகாரிகள்  சங்கத்தின் தலைமையகத்தில்  இன்று இடம்  பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.  

இதன் போது அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித் அளுத்கே கூறியதாவது  , 

சுகாதார அமைச்சருக்கு எதிராக  நாடு  தழுவிய  ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு  வருகின்றன. 

இந்த நிலையில் புற்றுநோயாளர்களின்  மருந்து  கொள்வனவில்  இடம் பெற்ற மோசடிகள் முக்கியமானதொரு  விடயமாகும்.  

இது  தொடர்பில்  சட்ட நடவடிக்கை  எடுக்குமாறு ஜனாதிபதி யிடத்தில் கடிதத்தினூடாக  தெரியப்படுத்தியிருக்கின்றோம்.  அதேபோல் , இலஞ்ச  ஊழல் ஆணைக்குழு  மற்றும்  குற்றவிசாரணைப்பிரிவிலும் முறைப்பாடளித்துள்ளோம். 

புற்று  நோயாளர்கள்  , கர்ப்பிணித்தாய்மார்கள் , சக்கரை  நோயாளர்கள் என பலரும் பாதிக்கும் வகையில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன.  ஆகவே மருந்து கொள்வனவு ஊழல்களை  நிறுத்தவதற்கு  உடனடி  நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டுமென அவர்கள் இதன் போது தெரிவித்துள்ளனர்.