ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 24 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து குல்படீன் நைய்ப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு மான்செஸ்டரில் ஆரம்பமாகவுள்ளது.

இங்கிலாந்து அணி, தென்னாபிரிக்கா, பங்களாதேஷ், மேற்கிந்தியத்தீவுகள் அணிகளை வீழ்த்தியுள்ளதுடன், பாகிஸ்தான் அணியுடன் மாத்திரம் தோல்வியை சந்தித்துள்ளது. 

துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு என்பவற்றில் சிறந்து விலங்கும் இங்கிலாந்து அணியின் ஜேசன் ரோய் உபாதை காரணமாக இப் போட்டியிலும் அடுத்தபோட்டியிலும் விளையாடமாட்டார். அதேபோல் இங்கிலாந்து அணியின் தலைவர் இயன்மோர்கனும் உபாதைக்குள்ளாகியுள்ளதால், இப் போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் விளையாடாத பட்சத்தில் அணியின் தலைமைப் பொறுப்பை பட்லர் ஏற்று வழிநடத்துவார். 

ஆப்கானிஸ்தான் அணி, அவுஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வி அடைந்து, பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடுவதில்லை. இது அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது. மொஹமட் நபி, ரஷித் கான் போன்ற சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் அந்த அணியில் அங்கம் வகிக்கின்றனர். சுழற்பந்து வீச்சு எடுபடும் இந்த ஆடுகளத்தில் அவர்கள் இங்கிலாந்து  சவால் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சர்வதேச ஒருநாள் உலகக் கிணண அரங்கில் இவ்விரு அணிகளும் இதுவரை ஒரு போட்டியில் மாத்திரம் மோதியுள்ளன. அப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.