இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜேசன் ரோய் அடுத்த இரு போட்டிகளிலும் விளையாட மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

கடந்த 14 ஆம் திகதி சவுதம்டனில் இடம்பெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான உலகக் கிண்ணத் தொடரின் 19 ஆவது போட்டியில் ரோய் களத்தடுப்பில் ஈடுபட்டபோது அவரது தொடைப் பகுதி உபாதைக்குள்ளானது. 

இதனால் 8 ஆவது ஓவரிலேயே வெளியேறிய அவர் துடுப்பெடுத்தாடுவதற்கும் வரவில்லை. இந் நிலையில் நேற்றுமுன்தினம் ரோய்க்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டபோது அவரது தொடைப்பகுதியில் தசைநார் கிழிந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனால் ரோய் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் விளையாட மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் 25 ஆம் திகதி அவுஸ்திரேலிய அணியுடான போட்டியிலும் அவர் கலந்துகொள்வார என்பது இனிமேல்தான் தீர்மானிக்கப்படும். ரோய்க்குப் பதிலாக ஜேம்ஸ் வின்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். 

இதேவேளை இங்கிலாந்து  அணித் தலைவர் இயன் மோர்கனும் மேற்கிந்தியத்தீவுகளுடனான போட்டியில் உபாதைக்குள்ளான காரணத்தினால் அவரும் ஆப்கானிஸ்தான் அணியுடான போட்டியில் விளையாடுவது சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

மோர்கன் ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் விளையாடமால் போனால் பட்லர் தலைமைப் பொறுப்பையேற்று அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.