(செ.தேன்மொழி)

இரத்தினபுரி - பலங்கொடை பகுதியில் முகப்புத்தக நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வின்போது கைதுசெய்யப்பட்ட 51 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பலங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலிஹூல் ஓயா பகுதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இரத்தினபுரி கலால் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்புகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கலால் திணைக்கள ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கண்டி, மீரிகம, காவத்தை மற்றும் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 18 - 25 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 160 மில்லி கிராம் ஹெரோயின், 300 மில்லிகிரேம் கொக்கெய்ன், 50 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும், கஞ்சா 150 கிராமும் மற்றும் போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டன.

சந்தேக நபர்கள் இன்று பலங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், போதைப் பொருட்களை வைத்திருந்தவர்களுக்கு நீதிவான் 2000 ரூபா மற்றும் 2500 ரூபா தண்டபனம் செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.