தனது சகோதரனின் இரு பிள்ளைகளில் ஆண் பிள்ளையை கத்தியால் குத்தி காயப்படுத்தியும் பெண் பிள்ளையை கழுத்தறுத்துக் கொலை செய்துள்ள பெரியதந்தையொருவரின் கொடூரச் செயல் யாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காணிப் பிணக்கு காரணமாக பெரியதந்தையாரின் கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அத்தோடு குறித்த பெண்ணின் சகோதரர் வயிற்றில் கத்திக் குத்துக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூரச் சம்பவத்தை அரங்கேற்றியவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சரணடைந்தார். 

இந்தச் சம்பவம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலை கந்தேவேள் பாடசாலைக்கு முன்பாக இன்று முற்பகல் இடம்பெற்றது.

“காணிப் பிணக்கு காரணமாக உறவினர்களான அயலவர்கள் இருவருக்கு இடையே நீண்டகாலமாகப் பிணக்குக் காணப்பட்டது.

அதனைச் சாட்டாக வைத்து பெரிய தந்தையார் கத்தியுடன் சென்று கந்தேவேள் பாடசாலைக்கு முன்பாக வைத்து தனது சகோதரனின் மகனை வயிற்றில் குத்தியுள்ளார். அவர் நிலத்தில் சரிந்து வீழ்ந்தார்.

இதையடுத்து கத்தியால் குத்தியவர் துவிசக்கர வண்டியை எடுத்துக் கொண்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்குப் புறப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வழியில் தனது சகோதரனின் மகளைக் கண்டுள்ளார். அவரைக் கத்தியால் குத்த முற்பட்ட போது, அந்தப் பெண் குறித்த நபரை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டுத் தப்பி ஓடியுள்ளார்.

அந்தப் பெண்ணை பெரிய தந்தையார் துரத்திச் சென்றபோது அந்தப் பெண் தடுமாறி வீதியில் சரிந்து வீழ்ந்த போது அவரை கழுத்து அறுத்து பெரிய தந்தை கொலை செய்துள்ளார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.