சவூதி அரே­பி­யா­வா­னது  வளை­கு­டாவில் பிர­தான கப்பல் போக்­கு­வ­ரத்துப் பாதையில்  எண்ணெய் தாங்கிக் கப்­பல்கள் மீது  அண்­மையில் நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­க­ளுக்கு  ஈரானே காரணம் எனக் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளது.

 பிராந்­தி­யத்தில் பதற்­ற­நிலை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கின்ற நிலையில்  ஏதா­வது அச்­சு­றுத்­தல்கள் விடுக்­கப்­ப­டு­மானால் அதனை முறி­ய­டிக்க தனது நாடு தயங்­கப்­போ­வ­தில்லை என  சவூதி முடிக்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்மான் தெரி­வித்தார்.

ஓமா­னிய வளை­குடா பிராந்­தி­யத்தில் கடந்த வியா­ழக்­கி­ழமை இரு எண்ணெய் தாங்கிக் கப்­பல்கள்  தாக்­கு­தலுக்­குள்­ளா­கி­யி­ருந்தன. ஐக்­கிய அரபு இராஜ்­ஜிய கடற்­க­ரைக்கு  அப்பால் 4  எண்ணெய் தாங்கிக் கப்­பல்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்டு ஒரு மாத காலப் பகு­தியில் இந்தத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் இந்தத் தாக்­கு­த­லுக்கு ஈரானே காரணம் என அமெரிக்கா ஏற்­க­னவே குற்­றஞ் ­சா­ட்­டி­யி­ருந்த நிலையில் அதற்கு ஈரான் மறுப்புத் தெரி­வித்­துள்­ளது.

"நாங்கள்  இந்தப் பிராந்­தி­யத்தில் போரொன்றை விரும்­பவில்லை. ஆனால் எமது மக்­க­ளுக்கோ அன்றி எமது இறை­மைக்கோ அன்றி எமது பிராந்­தி­யத்தின்  ஒரு­மைப்­பாட்­டிற்கோ அன்றி  எமது முக்­கிய அக்­க­றை­க­ளுக்கோ  ஏதா­வது அச்­சு­றுத்தல் விடுக்­கப்­ப­டு­மானால் அதனைக் கையாள நாம் தயங்கி நிற்கப் போவ­தில்லை" என  சவூதி அரே­பிய முடிக்­கு­ரிய இள­வ­ரசர் பின் சல்மான்  பிராந்­திய அஷார்க் அல் அஸ்வத்  பத்­தி­ரி­கைக்கு அளித்த பேட்­டியில்  எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.

"ஈரா­னிய ஆட்­சி­யா­ளர்கள் தமது நாட்­டிற்கு ஜப்­பா­னிய பிர­த­மரால் மேற்­கொள்­ளப்­பட்ட விஜ­யத்­துக்கு மதிப்­ப­ளிக்­க­வில்லை.  அவ­ரது  (சமா­தான) முயற்­சி­க­ளுக்கு (எதி­ராக) பதி­ல­ளிக்கும் வகையில்  இரு எண்ணெய் தாங்கிக்  கப்­பல்கள் மீது அவ­ர்கள் தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர். அவற்றில் ஒரு  கப்பல் ஜப்­பா­னு­டை­ய­தாகும்"  என அவர் மேலும் தெரி­வித்தார்.

 இந்­நி­லையில் உலகின் மிகப் பெரிய சர்­வ­தேச கப்பல் சங்­க­மான  பிம்­கோவின்  கடல் பாது­காப்பு தொடர்­பான தலைவர் ஜக் லார்ஸன் நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை தெரி­விக்­கை­யில், பிந்­திய தாக்­குதல் சம்­ப­வங்கள் கார­ண­மாக  சில நிறு­வ­னங்கள் தமது கப்­பல்­க­ளுக்கு ஹொர்மஸ் நீரிணை மற்றும் ஓமான் வளை­குடா பிராந்­தியம் என்­ப­வற்­றுக்குள் பிர­வே­சிக்க வேண்டாம்  என உத்­த­ர­விட்­டுள்­ள­தாக  தெரி­வித்தார்.

அதே­ச­மயம்  கடந்த வியா­ழக்­கி­ழமை தாக்­கு­த­லை­ய­டு­த்து  சிறிய படகில் வரும் ஈரா­னிய படை­யினர்  அந்தக் கப்­பல்­க­ளி­லொன்றில் பொருத்­தப்­பட்­டி­ருந்த வெடிக்­காத  குண்டை அகற்­று­வ­தை காண்­பிக்கும்  காணொளிக் காட்­சி­யொன்றை  அமெ­ரிக்கா வெளியிட்­டுள்­ளது. 

 இந்தத் தாக்குதல்  அநேகமாக ஈரானால் நிச்சயமாக நடத்தப்பட்டுள்ளதாக பிரித்தானியா தெரிவித்திருந்த நிலையில் அந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் ஆஜராகி விளக்கமளிக்க தனது நாட்டிலுள்ள பிரித்தானிய தூதுவரை ஈரான் கோரியுள்ளது.