ரோகித், கோலி, ராகுலின் வலுவான துடுப்பாட்டம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 336 ஓட்டங்களை குவித்துள்ளது.

ஐ.சி.சி 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 22 ஆவது போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்தியா, சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணியளவில் மான்செஸ்டரில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவுசெய்ய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

ஆரம்ப வீரர்களாக களமிறங்கி ரோகித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் நல்லதொரு ஆரம்பத்த‍ை பெற்றுக் கொடுக்க இந்திய அணி முதல் 5 ஓவரில் 20 ஓட்டத்தையும், 10 ஓவரில் 53 ஓட்டத்தையும் விக்கெட் இழப்பின்றி பெற்றுக் கொண்டது.

12 ஆவது ஓவரை எதிர்கொண்ட ரோகித் சர்மா அந்த ஓவரின் நான்காவது பந்தில் ஒரு ஆறு ஓட்டத்தையும், ஐந்தாவது பந்தில் ஒரு நான்கு ஓட்டத்தையும் விளாசி மொத்தமாக 34 பந்துகளில் 6 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் அடங்கலாக அரைசதம் கடந்தார்.

மறுமுணையில் ரோகித் சர்மாகவுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராகுல் 21 ஆவது ஓவரின் நன்காவது பந்து வீச்சில் ஒரு ஆறு ஓட்டத்தை விளாசித் தள்ளி மொத்தமாக 69 பந்துகளில் 3 நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஓட்டம் அடங்கலாக அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

எனினும் ராகுல் 23.5 ஆவது ஓவரில் வஹாப் ரியாஸுடைய பந்து வீச்சில் பாபர் அசாமிடம் பிடிகொடுத்து 57 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணியின் முதல் விக்கெட் 136 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்து.

தொடர்ந்து அணித் தலைவர் விரோட் கோலி களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க இந்திய அணி 26 ஓவரில் 150 ஓட்டங்களை கடந்ததுடன், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோகித் சர்மா 30 ஓவரில் மொத்தமாக 85 பந்துகளில் சதம் விளாசினார். 

இதன் பின்னர் இந்திய அணி 34.3 ஆவது ஓவரில் ஒரு விக்கெட்டினை இழந்த நிலையில் 200 ஓட்டங்களை பெற்றதுடன் ரோகித் சர்மா 38.2 ஆவது ஓவரில் மொத்தமாக 113 பந்துகளில் 14 நான்கு ஓட்டம், 3 ஆறு ஓட்டம் அடங்கலாக 140 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய பாண்டியாவுடன் விராட் கோலி கைகோர்த்தாட இந்திய அணி 40.2 ஓவரில் 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 250 ஓட்டங்களை பெற்றதுடன் 43.1 ஆவது ஓவரில் விரட் கோலி 51 பந்துகளில் அரைசதம் பெற்றார்.

அந்த ஓவரின் 5 ஆவது பந்தில் அதிரடி காட்ட ஆரம்பித்த பாண்டியா 26 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க தோனி ஆடுகளம் புகுந்தாட விராட் கோலி 43 ஆவது ஓரின் இறுதிப் பந்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 11 ஆயிரம் ஓட்டங்களை பூர்த்தி செய்தார்.

தோனி 45.1 ஓவரில் ஒரு ஓட்டத்துடன் அமீருடைய பந்து வீச்சில் ஆட்டமிழந்து நடையை கட்டினார். தொடர்ந்து 5 ஆவது விக்கெட்டுக்காக விஜய் சங்கர் களமிறங்க இந்திய அணி 45.4 ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 300 ஓட்டங்களை கடந்தது.

இந் நிலையில் 46.4 ஆவது ஓவரில் இந்திய அணி 305 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதனால், ஆட்டம் இடை  நிறுத்தப்பட்டது. கோலி 71 ஓட்டத்துடனனும், விஜய் சங்கர் 3 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

மழை முடிவடைந்ததும் இலங்கை நேரப்படி மாலை 7.10 மணியளவில் மீண்டும் போட்டி ஆரம்பன நிலையில் 47.4 ஆவது ஓவரில் விராட் கோலி 77 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார் (314-4).

இறுதியாக இந்திய அணி நிர்ணியிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 336 ஓட்டங்களை குவித்தது. ஆடுகளத்தில் விஜய் சங்கர் 15 ஓட்டத்துடனும் கேதர் யாதவ் 9  ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் அமீர் 3, வஹாப் ரியாஸ், ஹசன் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர். 

Photo credit : ICC