உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் இந்­தி­யா- பா­கிஸ்தான் போட்­டியைப் பார்க்க, இந்­திய கிரிக்கெட் அணியின் முன்­னணி வீர­ரான மஹேந்­திர சிங் தோனி தனது ரசி­க­ருக்கு இல­வ­ச­மாக டிக்கெட் வழங்கி வரு­கிறார் என்­கிற தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டியை நேரில் பார்க்க டிக்கெட் கிடைப்­பது என்­பது குதிரை கொம்­பா­கவே இருக்கும். ஆனால் பாகிஸ்­தானில் பிறந்து அமெ­ரிக்­காவில் உண­வகம் நடத்தி வரும் 63 வய­தான தீவிர கிரிக்கெட் ரசிகர் முக­மது பஷி­ருக்கு 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­யி­லி­ருந்து இந்­தி­யா­–பா­கிஸ்தான் மோதலை பார்க்க இந்­திய கிரிக்கெட் அணியின் முன்­னணி வீர­ரான தோனி இல­வ­ச­மாக டிக்கெட் வழங்கி வரு­கிறார்.

இது குறித்து முக­மது பஷிர் மென்­செஸ்­டரில் நேற்று முன்­தினம் அளித்த ஒரு பேட்­டியில்,

‘உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் இந்­தி­யா-–பா­கிஸ்தான் போட்­டியை பார்ப்­ப­தற்­காக இங்­கி­லாந்து வந்தேன். இந்த போட்­டிக்­கான ஒரு டிக்­கெட்டின் தொகை­யா­னது, நான் லண்­ட­னி­லி­ருந்து சிக்கா­கோ­வுக்கு திரும்பும் விமான டிக்கெட் தொகைக்கு சம­மா­ன­தாகும். இந்த போட்­டிக்­காக டிக்கெட் வாங்க நான் கஷ்­டப்­ப­ட­வில்லை. அதற்கு கார­ண­மான தோனிக்கு நன்றி தெரி­வித்து கொள்­கிறேன். 

தோனி மிகவும் பிசி­யாக இருப்பார் என்­பதால் அவரை நான் செல்­போனில் அழைப்­பது கிடை­யாது. குறுந்­த­க­வல்கள் அனுப்பி அவ­ரு­ட­னான எனது பழக்­கத்தை தொடர்ந்து வரு­கிறேன். டிக்கெட் தரு­வ­தாக தோனி உறுதி அளித்­த­தா­லேயே முன்­கூட்­டியே இங்கு வந்தேன். தோனி மிகுந்த மனி­த­நேயம் மிக்­கவர். 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்­டி­யி­லி­ருந்து எனக்கு அவர் டிக்கெட் வழங்கி வரு­கிறார். எனக்கு தோனி செய்­வது போல் வேறு யாரும் செய்­வார்கள் என்று நினைத்து கூட பார்க்க முடி­யாது. எனக்கு இல­வ­ச­மாக ஒரு டிக்கெட் கிடைப்­பதை அதிர்ஷ்­ட­மாக கரு­து­கிறேன்.

தோனிக்கு எதிர்­பா­ராத நினை­வுப்­ப­ரிசை வழங்க கொண்டு வந்திருக்­கிறேன். அவரை சந்­தித்து இந்த பரிசை வழங்க முடியும் என்று நம்­பு­கிறேன். இந்­திய அணியின் ரசிகர் சுதிரும் (இந்­திய தேசிய கொடியின் வண்­ணத்தை வரைந்­த­படி எல்லா ஆட்­டங்­களை யும் நேரில் பார்க்க செல்லும் ரசிகர்) நானும் ஒரே அறையில் தங்க ஹோட்­டலில் முன்­ப­திவு செய்து இருக்­கிறேன். சுதி­ருக்கு நான் ஒரு செல்­போனை பரி­சாக வழங்­கினேன். அவர் மிக்க மகிழ்ச்­சி­ய­டைந்தார். இது­போன்ற சிறிய விட­யங்கள் தான் வாழ்க்­கையில் மகிழ்ச்­சியை அளிக்­கி­றது. எனது உடல் நிலை சீராக இல்­லா­விட்­டாலும் கிரிக்­கெட்­டுக்­காக மட்­டுமே நான் வாழ்ந்து கொண்டிருக்­கிறேன்’ என்று தெரி­வித்­துள்ளார்.

முக­மது பஷிர் போட்­டியை பார்க்­கையில் இந்­தியா மற்றும் பாகிஸ்தான் தேசிய கொடி­களை ஒரு சேர வைத்திருக்கும் பழக்கம் கொண்டவர். முகமது பஷிர் நேற்று முன்தினம் பாகிஸ்தான் அணி வீரர்களை சந்தித்து பேசினார். அவர் இந்திய வீரர்களையும் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க திட்டமிட்டுள்ளார்.