நாட்டில் மீண்டுமொருமுறை அரசியல் நெருக்கடிகள் வலுவடைந்து செல்வதைக் காணமுடிகின்றது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நாட்டில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடிகளை அடுத்து பாரிய பின்னடைவு நிலைமை காணப்பட்டது. அதன் பின்னர் தற்போது மீண்டும் அதே  போன்ற பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பித்திருப்பதைக் காணமுடிகின்றது. 

உண்மையைக் கூறப்போனால் ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்கள் இந்த நாட்டை அரசியல், சமூக, பொரு ளாதார மற்றும் பாரம்பரிய கலாசார ரீதியாக மறுபக்கம்  திருப்பியிருக்கின்றன. மக்களின் கடந்தகால வழமையான போக்கு முற்றுமுழுதாக மாறியிருக்கிறது. சமூக விடயங்களை இந்த தாக்குதல்கள் உடைத்து நொறுக்கியிருக்கின்றன.  அனைத்து விடயங்களும் தலைகீழாக மாறும் அளவுக்கு இந்த கொடூரத் தாக்குதல்கள் வழிசமைத்திருக்கின்றன.

இது அரசியலில் விதிவிலக்கல்ல. தாக்குதல் நடைபெற்ற தினத்தி லிருந்து நாட்டின் அரசியல் கொந்தளித் துக்கொண்டுதான் இருக்கின்றது. சுமார் இரண்டு மாதகாலமாக நாட்டில் அரசியல் நகர்வுகள் அனைத்தும் தலைகீழாக மாறியிருப்பதுடன், உயர்மட்டத் தலைவர்களுக்கிடையிலான மற்றும் கட்சிகளுக்கிடையிலான நெருக்கடிகளும் முரண்பாடுகளும் வலுவடைந்து வருகின்றன.

சரியாகக் கூறுவதானால் நாட்டு அரசியலின் சட்டவாக்கம், நிறைவேற்றதிகாரம் ஆகியன முட்டிமோதிக்கொண்டு நிற்கின்றன. விவரமாகக் கூறுவதென்றால் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கும், பாராளுமன்ற அதிகாரத்தைக் கொண்டிருக்கின்ற பிரதமருக்கிடையில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற முரண்பாடுகள் நாட்டின் பாரிய நெருக்கடியை அரசியல் ரீதியில் தோற்றுவித்துள்ளது.

அரச இயந்திரம் முற்றுமுழுவதுமாக முடங்கிவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது. கடந்த வாரம் முஸ்லிம் பிரதிநிதிகள் அரசாங்கத்திலிருந்து விலகியபோது ஏற்பட்ட நெருக்கடிக்கு அப்பால் தற்போது ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்த இரண்டு பிரச்சினைகளும் தற்போது ஒரு தீர்க்கமான கட்டத்துக்கு சென்றுள்ளதுடன் மக்கள் மத்தியில் பூதாகரமான பிரச்சினையாக உருவெடுத்திருக்கின்றன. நாடு சரியான பாதையில் பயணிப்பதற்கு முக்கிய மூன்று துறைகளான நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம் மற்றும் நீதித்துறை ஆகியன தமது வகிபாகங்களை சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும். இதில் ஒன்று இன்னொன்றுடன் முரண்படவேண்டிய நிலைமை ஏற்பட்டால் அது நாட்டில் பாரிய பிரச்சினையை ஏற்படுத்திவிடும். எனினும் தற்போதைய நிலைமையில் இந்த மூன்று துறைகளில் இரண்டு,  மோதிக்கொண்டு தான் நிற்கின்றன. இது நீண்டகாலம் நாட்டிற்கு நல் ஆரோக்கியமாக அமைய மாட்டாது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

முரண்பாடு தோன்றிய கதை 

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூரில் இருந்தவாறு ஒரு விசாரணை ஆணைக்குழுவை நியமித்திருந்தார். அந்த ஆணைக்குழு முழுமையான விசாரணையை நடத்தி தற்போது அதன் இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்திருக்கின்றது. இந்த சூழலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் அவருக்கு எதிராக கூட்டு எதிரணியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்தனர். இது ஆளுங்கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 

அதேபோன்று இந்த தாக்குதலுக்கும் இழப்புகளுக்கும் நெருக்கடி நிலைமைக்கும் அரசாங்கமே பொறுப்புகூற வேண்டும் என்ற குற்றச்சாட்டை முன் வைத்து அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி நம்பிக்கையில்லா  பிரேரணையைச் சமர்ப்பித்தது.

அந்த கட்டத்தில் எந்த நம்பிக்கை யில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுப்பது என்ற பிரச்சினை ஏற்பட்டது. அப்போது ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முதலில் விசாரணைக்கு எடுக்கலாம் என ஜே.வி.பி. கூறியது. எனினும் பிரச்சினை அத்துடன் முடிவுக்கு வரவில்லை. ஆளுங்கட்சிக்குள் சில நெருக்கடி நிலைமைகள் ஏற்பட ஆரம்பித்தன.

இதனையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவுக்குழு ஒன்றை நியமித்தார். அதாவது இவ்வாறான ஒரு தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு இந்த சம்பவத்துக்கு யார் பொறுப்புக்கூற வேண்டும் என்பதை ஆராயவேண்டும் என்று ஆரம்பத்தில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்திருந்தன. இந்தச் சூழலில் நம்பிக்கையில்லாப் பிரரேரணை குறித்தும் இந்தத் தெரிவுக்குழு ஆராயவேண்டும் என்றும் தெரிவித்து தெரிவுக்குழு முயற்சியில் பிரதமர் ஈடுபட்டார்.

குறிப்பாக ரிஷாத்  பதியுதீன் தொடர்பாகவும் இந்த தெரிவுக்குழு விசாரித்து அறிக்கை சமர்ப்பித்த பின்னர் நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியும் ஜனாதிபதி தலைமையிலான சுதந்திரக் கட்சியும் இந்த கட்டத்தில் தெரிவுக்குழுவைக் கடுமையாக எதிர்த்தன. எப்படி இருப்பினும் பாராளுமன்ற தெரிவுக்குழு பிரதி சபாநாயகர் ஆனந்தகுமாரசாமி தலைமையில் நியமிக்கப்பட்டதுடன், அதில் நடைபெறும் விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு ஊடகங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

தொடர்ந்து அந்த தெரிவுக்குழுவில் கட்டாய விடுமுறையில் இருக்கின்ற பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் சாட்சியமளித்தபோது ஜனாதிபதி அசௌகரியத்துக்கு உட்படும் வகையில் சில விடயங்களை முன்வைத்திருந்ததாக உணரப்பட்டது. இதனையடுத்து சுதந்திரக் கட்சி தெரிவுக்குழுவை கடுமையாக எதிர்த்ததுடன் பாதுகாப்புசார் பிரதிநிதிகள் சாட்சியம் வழங்கும்போது அதனை ஊடகங்கள் அறிக்கையிடுவதற்கு அனுமதிக்கக்கூடாது என்றும் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் தெரிவித்து வந்தது. 

ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை 

இந்த நிலையிலேயே ஜனாதிப திக்கும் பிரதமருக்கும் இடையே முரண்பாடுகள் வலுவடைய ஆரம்பித்தன. ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்குமிடையிலும் முரண்பாடுகள் ஏற்பட ஆரம்பித்தன. உடனடியாகக் கடந்த 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்றைக் கூட்டி தெரிவுக்குழு செயற்பாடுகளை நிறுத்துமாறு தெரிவித்திருந்தார். அவ்வாறு பாராளுமன்ற செயற்பாடுகளை நிறுத்தாவிடின் தான் அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கூறியிருந்தார்.

அதுமட்டுமன்றி அன்றைய  தினம் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன் பின்னர் எந்தவொரு பாதுகாப்பு அதிகாரியையும் தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க அனுப்பமாட்டேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்த சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவுக்குழுவை நிறுத்த முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தார்.  இதன் பின்னணியில் நிறைவேற்று அதிகாரத்துக்கும் பாராளுமன்றத்துக்குமிடையிலான முரண்பாடு வலுவடைய ஆரம்பித்தது. மறுபுறம் தெரிவுக்குழுவும் திட்டமிட்ட படி கடந்த செவ்வாய்க்கிழமை கூடியது. அன்றைய தினம் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மற்றும் அகில இலங்கை ஜம்மியத் துல் உலமா சபையின் தலைவர், காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆகியோர்  சாட்சியமளித்திருந்தனர்.

அதிர்ச்சி வைத்தியம் 

எனினும் அன்று காலை யாரும் எதிர்பாராத, நெருக்கடியைத் தரக்கூடிய சம்பவம் ஒன்று இடம் பெற்றது. வழமையாக ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 10.00 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும். ஆனால் அன்றைய தினம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவில்லை. அதற்கு முந்திய தினம் இரவு பிரதமர் தலைமையில் அமைச்சர்கள், அமைச்சரவைக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். எனினும் மறுதினம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவில்லை.

இந்த இடத்தில்தான் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான முரண்பாடு எந்தளவு தூரம் வலுவடைந்துள்ளது என்பதைப் புரிந்துகொண்டார்கள். காரணம் அமைச்சரவை என்பது அரச இயந்திரத்தின் மிக முக்கியமான ஓர் அம்சம்.

நாட்டில் முன்னெடுக்கப்போகின்ற அபிவிருத்தி திட்டங்கள் முக்கியமான நகர்வுகள் என்பன அமைச்சரவையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன. அமைச்சரவை எந்தவொரு திட்டத்துக்கும் அனுமதி அளிக்காவிடின் அந்தத் திட்டங்களை முன்னெடுக்க முடியாது. எனவே அமைச்சரவைக் கூட்டம் அன்றைய தினம் நடைபெறாமல் இருந்தமை அரசாங்கத்தில் ஏற்பட்டிருக்கின்ற பல்வேறு வடிவங்களை கோடிட்டு காட்டுவதாக அமைந்திருந்தது.

இவ்வாறு தொடர்ந்து அமைச்சரவைக் கூட்டங்கள் நடைபெறாதிருந்தால்  அது நாட்டின் நிர்வாகம்  முடங்கிப் போவதற்கான ஆபத்தைக் கொண்டு வந்துவிடும். இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அவதானம் செலுத்தியிருந்ததுடன்  கருத்தும் வெளியிட்டிருந்தார்.  அதுமட்டுமன்றி கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நடத்தவிருந்த சந்திப்பும் இறுதி நேரத்தில்  ரத்துச் செய்யப்பட்டது.

தொடரும் நெருக்கடி நிலை 

இவ்வாறு நாட்டில் அரசியல் நெருக்கடி நிலை நீடிப்பதானது பல்வேறு பாரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடும் ஆபத்தைக் கொண்டிருக்கின்றது. கடந்த வாரம் கூட அமைச்சரவையில் 60 க்கும் மேற்பட்ட திட்டங்கள் குறித்து ஆராய்ந்து அவற்றுக்கான அங்கீகாரங்கள் பெறப்படவிருந்தன. அவை அனைத்தும் தற்போது நிலுவையில் காணப்படுகின்றன. இது நாட்டின் அரச இயந்திரத்துக்கு ஆரோக்கியமானதாக அமைந்துவிடாது என்பதைத் தலைவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே காணப்படுகின்ற நிலையிலும் அதற்கான ஏற்பாடுகளில்  கட்சிகள் ஈடுபட்டுள்ள  சூழலிலும் இவ்வாறு முரண்பாடுகள் வலுவடைந்து செல்கின்றன. இது ஒரு பாரிய எதிர்விளைவை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது என்பதே யதார்த்தம். 

எக்காரணம் கொண்டும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்கள் வழங்கிய ஆணை மீறப்படக்கூடாது; அரசியல் வேறுபாடுகளுக்காக மக்களின் நலனும் அன்றாட அரச இயந்திரமும் பாதிக்கப்படக்கூடாது. எனவே கடந்த பிரதான தேர்தல்களில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மக்கள் வழங்கிய ஆணையைப் புரிந்து கொண்டு செயற்பட முன்வரவேண்டும். 

ஸ்திரத்தன்மையின் முக்கியம் 

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டால் அது மக்களையும் நாட்டின் எதிர்காலத்தையும் வெகுவாகப் பாதிக்கும்.  பொருளாதார அபிவிருத்திக்கும் முதலீடுகளின் வளர்ச்சிக்கும் நாட்டின் ஸ்திரத்தன்மை அவசியம். ஆனால் இவ்வாறு ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் முரண்பாடுகள் மற்றும் நெருக்கடிகள் வலுவடையும் பட்சத்தில் அது பாரிய தாக்கங்களையும் எதிர்விளைவுகளையும் நாட்டில் ஏற்படுத்திவிடும். 

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நெருக்கடிகள் தோன்றினால் அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசி பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும். அரசியல் தலைமைகள் அடுத்த தேர்தலை இலக்காகக் கொண்டு செயற்படுவது வேறுவகையான தாக்கங்களை ஏற்படுத்தலாம். கட்சிகளுக்கு அரசியல் இலக்குகள் இருக்கலாம். ஆனால் அதற்காக மக்கள் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது. அதனால் தற்போது ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஏற்பட்டுள்ள அல்லது நிறைவேற்று அதிகாரத்துக்கும் பாராளுமன்ற அதிகாரத்துக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடியானது அடுத்த கட்டத்துக்கு நகராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். பெரும்பாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அடுத்தவாரம்  அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அவ்வாறு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற வேண்டும். இதில் ஏதாவது முரண்பாடுகள் காணப்படின் அது தொடர்பில் இரண்டு தலைவர்களும் அமர்ந்து பேச்சு நடத்த வேண்டும். 

எப்படியிருப்பினும் உயிர்த்த ஞாயிறு தொடர்பிலான சூத்திரதாரிகள் வெளிக்கொணரப்படவேண்டும். அதேபோன்று, பொறுப்பில்லாமல் செயற்பட்டவர்களும் வெளிக்கொணரப் படவேண்டும். இந்த இடத்தில் தேசிய பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றி கருத்தில் கொண்டு அனைத்துத் தரப்பினரும் செயற்படுவது அவசியம். ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் அல்லது நிறைவேற்று அதிகாரத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையில் தோன்றியுள்ள நெருக்கடி மேலும் அதிகாரிக்காத நிலைமையையும் வலுவடையாத நிலைமையையும் ஏற்படுத்தவேண்டும். 

ஆலோசனைகள் 

இது தொடர்பில் பரந்துபட்ட ஆலோசனைகளும் பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். நாட்டின் அரச இயந்திரம் முடங்கிவிடுவதற்கு இடமளிக்கக்கூடாது. குறிப்பாக நெருக்கடி நிலையில் பாரதூர தன்மை தொடர்பில் அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். தொடர்ச்சியாக இதுபோன்ற நெருக்கடிகள் மேலும் நாட்டை படுபாதாளத்தில் தள்ளிவிடும் என்பதால் அனைத்துத் தரப்பினரும் இது தொடர்பில் சிந்தித்து செயற்படவேண்டியது அவசியம். 

எனவே தொடர்ந்தும் நெருக்கடி நிலைமை நீடிக்காத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த எதிர்பார்ப்பின் படி இருவரும் செயற்படவேண்டியது அவசியம். குண்டுத்தாக்குதல்களினால் ஏற்கனவே முடங்கிப் போயிருக்கும் நாட்டின் அரசியல்,  பொருளாதார, சமூக விவகாரங்கள் தற்போதைய அரசியல் நெருக்கடி காரணமாக மேலும் முடங்கிப் போவதற்கு யாரும் இடமளித்துவிடக்கூடாது என்பதே முக்கியமாகும்.  

ரொபட் அன்டனி