‘தெட் ஹவ் டூ ஐ நோ சேர் ? மன­முண் டானால் மார்க்­க­பந்து’ இவை தமிழ் சினிமா ரசி­கர்­க­ளுக்கு என்றும் மறக்­காத வச­னங்கள் …. இன்­றைய இளைய இணைய தலை­மு­றை­களின் மீம்­ஸு­களில் அதிகம் இடம்பெறு­கின்ற வச­னமும் கூட….

திரைப்­பட ரசி­கர்­க­ளுக்கும் நகைச்­சுவை உணர்­வா­ளர்­க­ளுக்கும் எப்­போது  கேட்­டாலும் பார்­த்தாலும் இந்த வச­னங்கள் சிரிப்பை பற்­ற­வைக்கும்.. ஆனால் தற்­போது முதன் முறை­யாக இந்த வச­னங்கள் கண்­ணீரை வர­வ­ழைத்து சென்­றுள்­ளன. காரணம்  இந்த வச­னத்­துக்கு சொந்தக்காரர் இன்று நம்­மோடு இல்லை… 

மனி­தனை மனி­தத்­து­டனும் மகிழ்­வு­டனும் வாழ­வைக்­கின்ற உணர்­வு­களில் நகைச்­சுவை என்­பது  முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது. ஆனால் இந்த நகைச்­சுவை சில நேரங்­களில் ஏனை­ய­வர்­களின் இய­லா­மையை எள்ளி நகை­யா­டு­கின்­ற­தா­கவோ ஒரு­வரின் மனதை புண்­ப­டுத்­து­வ­தா­கவோ அமை­யலாம்.  குறிப்­பாக தமிழ் சினி­மாவில் ஒரு மனி­தனின் உருவ உடல்  குறை­பா­டு­களைக்கூட நகைச்­சு­வை­யாக காண்­பிக்­கின்ற வக்­கி­ரத்தை பார்த்­தி­ருக்­கின்றோம். மிகப்பெரிய நகைச்­சுவை நடி­கர்கள்கூட இந்த வக்­கி­ரத்தை தமது படங்­களில் பயன்­ப­டுத்­து­வது உண்டு. ஆனால்  யார் மன­தை­யும்­ புண்­ப­டுத்­தாமல் நகைச்­சு­வையை உரு­வாக்­கு­கின்ற சிறப்பு  ஒரு சில­ருக்கு மட்­டுமே  உண்டு. அந்த ஒரு சிலரில் முக்­கி­ய­மா­னவர் கிரேஸி மோகன். ஆம் அவ­ரது நகைச்­சுவை யார் மன­தையும் புண்­ப­டுத்­தவோ வேதனைப் படுத்தும் வித­மா­கவோ ஆபா­ச­மா­னதா­கவோ  இருக்­காது. அதுதான்  அவ­ரது சிறப்பு.

கிரேஸி மோகன் தமிழ்த் திரை­யு­லகில்  பிர­ப­ல­மான கதை -­வ­சனகர்த்தா மற்றும்  நடி­க­ராவார். இது தவிர நாடக ஆசி­ரி­ய­ரா­கவும் பணி­யாற்­றி­யவர். 3000க்கும் மேற்­பட்ட  மேடை நாட­கங்­களை இயக்கி நடித்­தவர். அடிப்­ப­டையில் இவர் ஒரு பொறி­யி­யலாளர் ஆவார்.

1952ஆம் ஆண்டு  ஒக்­டோபர் 16ஆம் திகதி பிறந்த  இவரின் இயற்­பெயர் மோகன் ரங்­காச்­சாரி. மாணவர் பரு­வத்­தி­லேயே நகைச்­சுவை உணர்­வுடன் வளர்ந்த இவ­ரது நகைச்­சுவை உணர்வை சக நண்­பர்கள்  பாராட்டி அவரை நாடகம் எழுத தூண்­டினர். 1970-ஆம் ஆண்டு கிண்டி பொறி­யியல் கல்­லூ­ரியில் 'மெக்­கா­னிக்கல் இன்­ஜி­னி­ யரிங்' படிப்பை நிறைவு செய்­த மோகன்  1979-ஆம் ஆண்டு முதல் தனது நண்­பர்களுடன் இணைந்து ‘கிரேஸி’ என்னும் குழு மூலம் மேடை நாட­கங்­களை இயக்கி, நடிக்­க தொடங்­கினார். 

இந்­நி­லையில்  கல்­லூ­ரியில் படித்துக் கொண்­டி­ருந்தபோது, 'கிரேட் பாங்க் ராபர்ரி' என்று கல்­லூ­ரி­க­ளுக்­கி­டை­யே­யான போட்­டிக்­காக அவர் எழுதி, நடித்த முதல் கதைக்கு சிறந்த நடிகர், சிறந்த கதை­யா­சி­ரியர் என்று இரண்டு விரு­து­களை கமல்­ஹாசன் கையால் பெற்றார். கம­லுடன் அன்று ஆரம்­பித்த நட்பு இறக்கும் வரையில்  தொடர்ந்­தது.

பெரும்­பாலும் பிறரை எரிச்­ச­லூட்டும் நகைச்­சுவை கிரேஸி மோக­னிடம் இருந்­த­தில்லை. உடல் ஊன­முற்ற, மன­நலம் குன்­றி­ய­வர்­களைப் பற்­றிய நகைச்­சு­வை­களை ஒரு கட்­டத்­துக்குப் பிறகு நிறுத்­திக்­கொண்டு, அத்­த­கைய ஆரம்ப கால எழுத்­து­க­ளுக்­காக வருந்தி மன்­னிப்பு கேட்­டவர்.

கிரேஸி மோகன் எப்­போதும் கூட்டு குடும்­ப­மாக வாழவே ஆசைப்­பட்­டவர். அவ­ரது குடும்பம் கூட்டு குடும்­பம்தான். முதியோர் இல்­லங்­களில் நாடகம் போடும்போது கூட்­டுக்­கு­டும்­பங்கள் இல்­லா­ததன் விளைவே முதியோர் இல்­லங்கள் என அவர் மனம் வருந்­தி­ய­தாக கூறப்­ப­டு­கின்­றது. அவ­ரது மனைவி  பெயர் நளினி. இவர்­க­ளுக்கு அஜய், அர்ஜுன் என்ற இரண்டு மகன்கள் உள்­ளனர். இவ­ரது சகோ­தரர் மாது பாலாஜி இவரும் கிரேஸி மோகனின் நாட­கங்­களில் இணைந்து பணி­யாற்றியுள்ளார்.

இதேவேளை, மோகன் ரங்­காச்­சா­ரியார் எனும் இயற்பெயர் கொண்ட இவர் முதன் முதலில் எஸ்.வி.சேக­ருக்­காக, 'கிரேஸி தீவ்ஸ் இன் பால­வாக்கம்' என்ற நாட­கத்தை எழுதிக்கொடுத்தார். அந்த நாட­கத்தை, எஸ்.வி.சேகர் மேடை யேற்­றினார். அந்த நாடகம் மாபெரும்  வெற்றி பெற்­ற­மையால்  அது­வ­ரையில் மோகன் ரங்­காச்­சா­ரி­யாக இருந்­த­வரை 'கிரேஸி மோக­னாக' மாற்­றி­யது. அன்­றி­லி­ருந்து ரசி­கர்கள் அன்­போடு 'கிரேஸி மோகன்'என்று அழைத்து வந்­தனர். 'சாக்லேட் கிருஷ்ணா' என்னும் அவ­ரது  நாடகம் 3 வரு­டங்­களில் 500 முறை மேடை­யேற்­றப்­பட்டு சாதனை படைத்­தது. நாடகங்கள் அழியும் காலத்தில் அவற்றை காப்பாற்றிய பெருமை இவரையும் சேரும். சினிமா தாண்டி பல்லாயிரகணக்கான நாடக ரசிகர்கள் இவருக்கு  உலகெங்கிலும் உள்ளனர்.

 கிரேஸி மோகனை முதன் முதலில் தனது ‘பொய்க்கால் குதி­ரை­கள்’­ ப­டத்­துக்கு வசனம் எழுத வைத்­தவர் இயக்­குநர் பாலச்­சந்தர். கமல்­ஹாசன் நடித்த பொய்க்கால் குதி­ரைகள் எனும் இத் திரைப்­ப­ட­மா­னது   கிரே­ஸி­மோ­கனின்  'முடித்­தி­ருத்­தத்தில் நிச்­ச­ய­மாக திருணம்' என்ற நாட­கத்தின் சினிமா வடி­வமே ஆகும்.  

இயல்­பான வச­னங்­களால் நகைச்­சுவை உணர்வைத் தூண்டி, ரசி­கர்­களைக் கட்­டி­யி­ழுக்கும் கலை கிரேஸி மோக­னுக்கு கைவந்­தி­ருந்­தது. நடிப்பைப் பொறுத்­த­வ­ரை­யிலும் கிரேஸி மோகனின் நடிப்பு மிக இயல்­பா­னது. நாட­கங்­க­ளிலும் சரி, திரைப்­ப­டங்­க­ளிலும் சரி, இந்த இயல்பை அவர் விட்­ட­தில்லை.

கமலின் அபூர்வ சகோ­த­ரர்கள் திரைப்­ப­டத்­திற்கு வசனம் எழு­தி­யதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காம­ராஜன், இந்­தியன், பஞ்சதந்­திரம்,  அவ்வை சண்­முகி, காதலா காதலா, வசூல்­ராஜா எம்.பி.பி.எஸ். உள்­ளிட்ட   கமலின்   பல வெற்றித் திரைப்­ப­டங்­க­ளுக்கு   கதை மற்றும் வசனகர்த்­தா­வாக பணி­யாற்­றினார். திரைக்கதையை முழுக்­கவே நகைச்­சு­வை­யாக எழு­து­வதில் கிரேஸி மோகன் பெயர் பெற்­றவர். 

அது மட்டும் அல்ல   நடிகர் ரஜி­னியின் அரு­ணா­சலம் இயக்­குநர் சங்­கரின் காதலன், இந்­தியன் உள்­ளிட்ட பல படங்­க­ளுக்கு கிரேஸி மோகனே வச­ன­கர்த்தா.

ஆன்­மீக பட­மான  ஸ்ரீ ராக­வேந்­திரர் திரைப்­ப­டத்­துக்கு தான்  வசனம் எழு­து­வ­தாக இருந்­ததாக முன்­பொ­ரு­முறை ஒரு பேட்­டியில் குறிப்­பிட்­டி­ருந்தார் கிரேஸி மோகன். எழுதியிருந்தால் வேறொரு கிரேஸி மோக­னையும் நாம் சந்­தித்­தி­ருக்­கலாம். ரட்­சகன் திரைப்­ப­டத்தில் கிரேஸி மோகன் எழு­தி­யி­ருந்த வச­னத்தில், கொஞ்சம் கூட வழக்­க­மான கிரே­ஸியை  பார்க்க முடி­யாது. ராஜ­மௌ­லியின் நான் ஈ மற்றும் ஆஹா போன்ற பல திரைப்­ப­டங்­க­ளுக்கு வச­ன­கர்த்­தா­வாக பணி­பு­ரிந்­துள்ளார்.  பல திரைப்­ப­டங்­களில் நடித்தும் உள்ளார். வசூல்­ராஜா எம்.பி.பி.எஸ்.ஸில் 'மார்க்க பந்து"என்ற இவ­ரது பாத்­திரம் மிக பிர­சித்தி பெற்­ற­தோடு 'தெட் -ஹவ் டூ ஐ நோ சேர்?'  என்று அவர் பேசும் வசனம் அவரது அடையாளமாக மாறியது. அத்திரைப்படத்தின் மூலம் வயிறு குலுங்கும் காலத்தால் அழியா சிரிப்­பை சினிமா ரசி­கர்­க­ளுக்கு அவர் தந்து விட்டுச் சென்­றுள்ளார். 

நடிப்­பையும், வச­னங்­க­ளையும்விட கிரேஸி மோக­னுக்கு பன்­முகத் திற­மைகளும் உண்டு. நன்­றாக ஓவியம் வரை­வதில் கிரேஸி மோகன் கெட்­டிக்­காரர். மரபுக் கவி­தை­களை எழு­து­வதில் வல்­லவர். பல வெண்­பாக்­களும் எழு­தி­யுள்ளார். நல்ல இசை ஞானமும், சங்­கீ­தமும் அவ­ருக்கு அத்­துப்­படி. தமி­ழக அரசின் 'கலை­மா­மணி' விருதை பெற்­றி­ருக்­கிறார். 

எப்­பொ­ழுதும் ரசி­கர்­களை ரசித்து சிரிக்க வைக்கும் கிரேஸி மோகன் முதல் முறை­யாக தற்போது அழ­வைத்­து சென்றுள்ளார்.

இந்­நி­லையில் கமலின் ஆஸ்­தான வச­ன­கர்த்­தாவின் மறைவு குறித்து கமல் தெரி­வித்­துள்ள இரங்­க­லா­னது,

'நண்பர் கிரேஸி மோகன் அவர்கள் மீது நான் பொறா­மைப்­படும் பல­வற்றில் மிக முக்­கி­ய­மான விஷயம் அவ­ரது மழலை மாறாத மனசு. அது அனை­வ­ருக்கும் வாய்க்­காது. பல நண்­பர்கள் லெள­கீகம் பழ­கிக்­கிறேன் பேர் வழி என்று அந்த அற்­பு­த­மான குணத்தை இழந்­தி­ருக்­கின்­றனர்.

கிரேஸி என்­பது அவ­ருக்கு பொருந்­தாத படம். அவர் நகைச்­சுவை ஞானி. அவ­ரது திற­மை­களை அவர் குறைத்துக்கொண்டு மக்­க­ளுக்கு ஏற்ற வகையில் ஜன­ரஞ்­ச­க­மாக தன்னைக் காட்டிக் கொண்டார் என்­ப­துதான் உண்மை

பல்­வேறு தரு­ணங்­களில் சாரு­ஹாசன், சந்­தி­ர­ஹாசன், மோகன்­ஹாசன் என்றும் வைத்துக் கொள்­ளலாம் என பகி­ரங்­க­மாக தன் பாசத்தை வெளிக்­காட்­டி­யவர்.

அந்த நல்ல நட்பின் அடை­யா­ள­மாக, இன்று அவ­ரது சகோ­தரர் பாலாஜி அவர்­க­ளுடன் இணைந்து நண்பர் மோகன் அவர்­களின் நெற்­றியில் கைவைத்து பிரி­யா­விடை கொடுத்தோம். நட்­பிற்கு முடிவு என்­பது கிடை­யாது. ஆள் இருந்­தால்தான் நட்பா என்ன? மோகன் அவர்­களின் நகைச்­சுவை அவ­ரது ரசி­கர்கள் மூலம் வாழும், அந்த வாழ்­விற்கு நானும் துணை­யி­ருப்பேன்.

அவ­ரது குடும்பம் ஒரு அற்­பு­த­மான கூட்­டுக்­கு­டும்பம். அவர்­க­ளுக்கு என்ன ஆறுதல் சொன்­னாலும் ஆறாது, போதாது. இந்த இழப்பை தாங்­கிக்­கொள்ள அவர்கள் பழ­கிக்­கொள்­வ­தற்கு மனோ­திடம் வாய்த்­திட வேண்­டு­கிறேன்.' இவ்­வாறு கமல்­ஹாசன் தனது இரங்கல் அறிக்­கையில் தெரி­வித்­துள்ளார்.

நகைச்­சுவை உணர்வு மட்டும் இல்­லை­யெனில், நான் என்­றைக்கோ தற்­கொலை செய்­து­கொண்­டி­ருப்பேன்” என்று காந்­தி­ய­டிகள் கூறியது போல இப்­போ­தைய கால­கட்­டத்தில் வேலைப்­பளு, குடும்பப் பிரச்­சினை, பொரு­ளா­தாரச் சிக்கல் போன்ற தங்­க­ளு­டைய மோச­மான சூழ்­நி­லையில் இருந்து தங்­களின் மனதை மாற்­றிக்­கொள்ள நகைச்­சு­வையை மக்கள் நாடு­கி­றார்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும்  ஆரோக்கியமாகவும், உந்துதலாகவும் இருக்க நகைச்சுவை பெரிதும் தேவை. இன்று நாம் அனைவரும் பரபரப்பான சூழ்நிலையில் சிரிக்க மறந்து எதையோ தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்நிலையில் நம்மைக் கொஞ்சமாவது இயல்பாக இனிமையாக்க வைப்பது ஆபாசம் விரசம் இல்லாத  நல்ல திரைப்பட நகைச்சுவைகள். அவற்றை எமக்கு தந்த கிரேஸி மோகனுக்கு தமிழ் பேசும் நல்லுலகம் நன்றி கூற என்றும் கடமைப்பட்டுள்ளது. 

'டக்னு ஒரு ஹார்ட் எட்டக்; உடனே போயிடணும்!'னு  கிரேஸி மோகன் அடிக்கடி சொல்வாராம். அவர் ஆசைப்படியே அவரின் மரணம் நடந்திருக்கிறது. ஆனால் அவரது நகைச்சுவையையும் கதை  வசனங்களையும் கட்டித் தழுவ மரணத்தால் முடியாது  என்றும் அவை மரணங்களைக் கடந்து அமர காவியங்களாக  வாழும்.

குமார்­ சு­குணா