இந்தியா - பாகிஸ்தானுக்கிடையேயான அனைத்து பிரச்சினைகளையும் பிரதமர் நரேந்திர மோடி தீர்த்து வைப்பார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். 

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்சேக்கில் ஷொங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெற்று வருகின்றது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆகியோர் அங்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், 

“ஷொங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் மாநாடு இந்தியா உட்பட பல நாடுகளுடனான உறவை மேம்படுத்த உதவியாக அமைந்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியாவுடனான உறவு மிகவும் குறைவாகவுள்ளது.

பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடன் சமாதானத்துடன் திகழ விரும்புகிறது. அதற்காக எந்தவிதமான மத்தியஸ்த நடவடிக்கைக்கும் தயாராக இருக்கின்றோம். இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை மிக முக்கியமாக உள்ளது.

இரு நாடுகளின் அரசுகள் முடிவு செய்தால் அப்பிரச்சினையை தீர்க்க முடியும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவுடனான இப்பிரச்சினையை எங்களால் தீர்க்க முடியவில்லை.

இந்திய பிரதமர் மோடி சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளார். அவர் தனது மிகப் பெரிய அதிகாரத்தின் மூலம் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பார். அதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு வலுப்பெற்று துணை கண்டத்தில் அமைதி நிலவும் என நம்புகிறேன்.

இரு நாடுகளுக்கும் இடையே 3 சிறிய போர்கள் நடைபெற்று உறவு பாதிக்கப்பட்டது. அதன் மூலம் மிகப்பெரிய வறுமை ஏற்பட்டது. பணத்தின் மூலமே மக்களிடம் இருந்து வறுமையை விரட்ட முடியும். அதற்கு சீனா உதாரணமாக திகழ்கிறது. அந்த நாடு பல கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் குறையும் என நம்புகிறோம். எனவே தற்போது நாங்கள் ஆயுதங்கள் வாங்கவில்லை. அந்த பணத்தை மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்த விரும்புகிறோம். ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்குகிறோம். எங்கள் இராணுவம் ரஷ்ய இராணுவத்துடன் தொடர்பில் உள்ளது என இம்ரான்கான் தெரிவித்தார்.

குறித்த மாநாட்டின் இடைவேளையின் போது பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்தித்து பேச மாட்டார் என வெளிவிவகார அமைச்சகம் ஏற்கெனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.