உங்களுடைய பொய்களையும், இரட்டை வேடத்தையும் அனைவரும் அறிவார்கள் என்று விஷாலுக்கு வரலட்சுமி சரத்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக நடிகை வரலட்சுமி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

“அன்புள்ள விஷால்,

சமீபத்தில் வெளியான உங்களுடைய தேர்தல் பிரச்சார வீடியோவில் நீங்கள் எவ்வளவு தாழ்ந்து போய் விட்டீர்கள் என்பதை எண்ணி அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தேன். உங்கள் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் தற்போது போய்விட்டது. என் தந்தையின் கடந்த காலத்தின் மீது நீங்கள் குத்தியுள்ள முத்திரையை பார்த்து மிகவும் வருந்துகிறேன்.

அதை உங்களால் நிரூபிக்கவே முடியாது. சட்டம் தான் உயர்ந்தது என்று கூறுவீர்கள். அதே சட்டத்தின்படி குற்றம் நிரூபிக்கப்படாத வரை எந்த ஒரு மனிதனும் நிரபராதி தான். அவர் குற்றவாளியாக இருந்திருந்தால் இந்நேரம் சிறையில் இருந்திருப்பார். எனவே உங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். இது போன்ற கீழ்த்தரமான வீடியோக்கள் உங்கள் தரத்தை காட்டுகிறது.

உங்களை குற்றம் சொல்ல முடியாது. நீங்கள் வளர்ந்த விதம் அப்படி என்று நினைக்கிறேன். இனிமேல் ஒரு சாது போல காட்டிக் கொள்ளாதீர்கள். உங்களுடைய பொய்களையும், இரட்டை வேடத்தையும் அனைவரும் அறிவார்கள் என்று நினைக்கிறேன்.

நீங்கள் அப்படிப்பட்ட சாதுவாக இருந்தால் உங்கள் பாண்டவர் அணியை சேர்ந்தவர்கள் உங்களை விட்டு விலகி, உங்களை வீழ்த்த இன்னொரு அணியை ஆரம்பித்திருக்க மாட்டார்கள். நீங்கள் இவ்வளவு நாள் நல்லது செய்திருந்தால் இந்த முறை தேர்தலில் போட்டியிடாத என் தந்தையை இழிவுபடுத்துவதற்கு பதில் நீங்கள் செய்த நல்லதைச் சொல்லி வாக்கு சேகரிக்கலாம்.

இத்தனை காலமும் உங்களை மதித்து ஒரு தோழியாக உங்களுக்கு ஆதரவாக இருந்தேன். ஆனால் நீங்கள் அதை இவ்வளவு தூரம் கொண்டு வந்து விட்டீர்கள். நீங்கள் சாதித்த விடயங்களை பற்றி வீடியோ வெளியிடாமல், இவ்வளவு தரம் தாழ்ந்து நீங்கள் பிரச்சாரம் செய்வது மிகவும் வருத்தமளிக்கிறது. திரைக்கு வெளியில் நன்றாக நடிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் எப்போதும் சொல்வது போல் உண்மைதான் வெல்லும்.”என்று தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறார் நடிகை வரலட்சுமி.

முன்னதாக நாசர் தலைமையிலான பாண்டவர் அணியை இணையத்தில் விளம்பரப்படுத்த வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தனர். அதில் சரத்குமார், ராதாரவி இருவரையும் கடுமையாக சாடியிருந்தார் .

இருவரது சுயநலத்தால் நாடக நடிகர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று சரத்குமார் மற்றும் ராதாரவி இருவரது முகமும் அந்த வீடியோ பதிவில் இடம் பெற்றிருந்தது. இந்த வீடியோ பதிவு வைரலாக பரவத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தான் நடிகை வரலட்சுமி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.