தென்னிலங்கை மீன்பிடித் தொழிலாளர்கள் தமது மீன் பிடிக்கு இடையூறாகவும் மீன் உற்பத்தியை அழிக்கும் வகையில் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாலும் தமது மீன்பிடி தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும்  வடக்கு மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 

தென்னிலங்கை மீனவர்களின் ரோலர் தொழில் மற்றும் டைனமற் ஒளி பாய்ச்சி தொழிலில் ஈடுபடுவதாலும் கடலட்டை  பிடிக்கும் தென்னிலங்கை தொழிலாளர்கள் தமது மீன் பிடிக்கு இடையூறாகவும் மீன் உற்பத்தியை ஒழிக்கும் வகையில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாலும் தமது மீன்பிடி தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும்  வடக்கு மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 

குறிப்பாக முல்லைத்தீவு கிளிநொச்சியின் பூநகரி மற்றும் இரணைதீவு ஆகிய பிரதேசங்களை அண்டிய பகுதிகளிலும் முல்லைத்தீவு நாயாறு வீதி பகுதிகளிலும் மன்னாரில் பல இடங்களிலும் இவ்வாறான பாதிப்புக்கள் அதிகம் என்றும் மீனவர்கள் கவலையுடன் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 

வடக்கு மீனவர்களுக்கு தற்போது பல மாதங்களாக மீன்பிடியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குவதாகவும் வரட்சி மற்றும் வெள்ள பாதிப்புக்கள் ஏற்படுகின்றபோது விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகின்றது. ஆனால் தமக்கு இவ்வாறு அனர்த்தங்கள் ஏற்படும் போது எவ்வாறான நிவாரணங்களும் வழங்கப்படுவதில்லையென சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறைந்தது ஆறு மாத காலத்திற்கு ஏனும் மீனவர்களுக்கு நிவாரணம் வழக்கவேண்டும் என்றும் வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட மீன்பிடி திணைக்களம் பக்கச் சார்பாக நடந்து கொள்வதாகவும் சட்டவிரோதமான தொழில்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் மீனவர்கள் மேலும் தெரிவித்தனர்.

வட மாகாண மீனவர் இணைய விசேட கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை வடமாகாண மீனவர் இணைய தலைவர்  ஆலம் தலமையில் யாழ்ப்பாணம் யாழ் பாடி விருந்தினர் விடுதியில் இரண்டு நிமிட இறை வணக்கத்துடன் ஆரம்பமானது.

குறித்த நிகழ்விலேயே கலந்து கொண்டு கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்ட மீனவர் இணைய பிரதிநிதிகள் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாஸன் தேசிய மீனவர் இயக்க தலைவர் இரா.முரளீதரன், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச பொது முகாமையாளர் உட்பட அறுபதுக்கு மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.