ஓமன் வளைகுடாவில் நேற்று தாக்கப்பட்ட  எண்ணெய் கப்பலில் இருந்து வெடிக்காத கண்ணிவெடியை  ஈரானிய கடற்படையினர் அகற்றுவதை காண்பிக்கும் வீடியோவை அமெரி;க்கா வெளியிட்டுள்ளது.

ஜப்பானிற்கு சொந்தமான எணணெய் கப்பலிற்கு அருகில் சிறிய படகொன்று செல்வதையும் அந்த படகிலிருந்து நபர் ஒருவர் ஏறி பொருளொன்றை அகற்றுவதையும் வீடியோ காண்பித்துள்ளது.

வெடிக்காத கண்ணிவெடியையே குறிப்பிட்ட நபர் அகற்றுகின்றார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

குறிப்பிட் பகுதியில் காணப்பட்ட அமெரிக்காவின் படைவிமானமொன்று இதனை பதிவு செய்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்ட பகுதியில் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் பெயின்பிரிட்ஜ் என்ற நாசகாரி காணப்பட்ட நிலையிலும் ஆளில்லாத விமானங்கள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையிலும்  ஜப்பான் கப்பலில் இருந்து கண்ணிவெடிகளை அகற்றும் முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் எண்ணெய்கப்பல்கள் மீதான தாக்குதல்களில் தனக்கு தொடர்பிருப்பதை காட்டிக்கொடுக்ககூடிய ஆதாரங்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை எண்ணெய் கப்பல்கள் மீது இடம்பெற்ற தாக்குதலிற்கு ஈரானே காரணம் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ குற்றம்சாட்டியுள்ளார்.

ஓமான் வளைகுடாவில் எண்ணெய்க்கப்பல்கள் மீது தாக்குதலொன்று இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படுவதை தொடர்ந்து சர்வதேச அளவில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன.

பெட்ரோகெமிக்கல் மூலப்பொருட்களுடன் பயணித்துக்கொண்டிருந்த புரொன்ட் ஓல்டெயர் என்ற  கப்பல் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பிட்ட கப்பல் நீரில்மூழ்கி விட்டது என ஈரானின் செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை குறிப்பிட்ட கப்பல் மூழ்கவில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்னொரு எண்ணெய் கப்பல் மாலுமிகள் இன்றி நீரில் தத்தளிக்கின்றது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

பஹ்ரைனை தளமாக கொண்ட அமெரிக்காவின் கடற்படை  குறிப்பிட்ட கப்பல்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதேவேளை குறிப்பிட்ட கப்பல்களை இலக்குவைத்து டோர்படோ தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பிட்ட கப்பல்கள் கடல்கண்ணி தாக்குதலிற்கு உள்ளாகியிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் கடற்பரப்பில் நான்கு எண்ணெய்க்கப்பல்கள் தாக்கப்பட்டமைக்கு ஈரானே காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டிவரும் நிலையிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை இந்த தாக்குதலை தொடர்ந்து எண்ணெய் விலைகள் நான்கு வீதமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.