2019 உலக கிண்ணப்போட்டிகளில் இலங்கையை ஐசிசி மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகின்றது என இலங்கை கிரிக்கெட்  எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கை அணியின் முகாமையாளர் அசந்தடிமெல் ஐசிசிக்கு இது குறித்து உத்தியோகபூர்வ கடிதமொன்றை எழுதியுள்ளார்.

இலங்கை அணி விளையாடும் போட்டிகளிற்காக தயாரிக்கப்பட்ட ஆடுகளங்கள்,பயிற்சிக்கான வசதிகள், இலங்கை வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்கள் வீரர்களிற்கான போக்குவரத்து வசதிகள் உட்பட பல விடயங்கள் குறித்து ஐசிசியிடம் அசந்தடிமெல் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த உலககிண்ணதொடரில் பத்து அணிகள் பங்கேற்கின்றன என தெரிவித்துள்ள அசந்தடிமெல் அணிகள் அனைத்தையும் ஒரே மாதிரியாக நடத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுவரை நாங்கள் விளையாடிய நான்கு ஆடுகளங்களும் வேகப்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமானவை ஆனால் ஏனைய அணிகள் விளையாடிய ஆடுகளங்கள் துடுப்பாட்ட வீரர்களிற்கு சாதகமானவை என அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுடன் நாங்கள் சனிக்கிழமை விளையாடவுள்ள ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களிற்கு சாதகமானதாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அசந்தடிமெல் சில அணிகளிற்கு ஒருவகை ஆடுகளத்தையும் ஏனைய அணிகளிற்கு வேறு விதமான ஆடுகளங்களையும் தயாரிப்பது நியாயமற்றது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணியின் போக்குவரத்திற்காக ஒழுங்குசெய்யப்பட்டுள்ள பேருந்து குறித்தும் சுட்டிக்காட்டியுள்ள அசந்தடிமெல் குறிப்பிட்ட பேருந்தில் போதிய ஆசனங்கள் இல்லை ஆனால் பாக்கிஸ்தான் அணிக்கு மிகவும் வசதியான பேருந்தை வழங்கியுள்ளீர்கள் என தெரிவித்துள்ளார்.

கார்டிவில் எங்களிற்கு வழங்கப்பட்ட பயிற்சிக்கான வளங்கள் போதியனவாகயில்லை ,ஏனைய அணிகளிற்கு வலைப்பயிற்சிக்காக மூன்று பிட்ச்களை வழங்கியுள்ளீர்கள் என தெரிவித்துள்ள  அசந்தடிமெல் நாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் நீச்சல்தடாகம் கூட இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இது குறித்து ஐசிசிக்கு நான்கு நாட்களிற்கு முன்னர் கடிதமொன்றை அனுப்பியுள்ளோம் இது குறித்து எங்களிற்கு இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என அசந்தடிமெல் தெரிவித்துள்ளார்.