உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று  இடம்­பெற்ற  தற்­கொலை  குண்டுத்தாக்­கு­தல்­களை அடுத்து   நாட்டில்  முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக  மேற்கொள்­ளப்­பட்டு வரும்  திட்­ட­மிட்ட   வன்­மு­றைகள் மற்றும்  அடக்­கு­மு­றைகள் தொடர்பில் சர்­வ­தேச சமூ­கமும்  தற்போது கவனம்  செலுத்­தி­யுள்­ளது.

ஐரோப்­பிய ஒன்­றியம் மற்றும் பிரிட்டன்  ஆகி­யன ஒன்­றி­ணைந்து  இந்த விடயம் தொடர்பில்  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோரின் கவ­னத்­திற்கு  கொண்­டு­வந்­துள்­ளன.

இலங்­கையின்  முஸ்லிம் சமூ­கத்தை நோக்­கிய அர­சியல்  மற்றும் மத­ரீ­தி­யான  அழுத்­தங்கள் தொடர்பில்  நாங்கள்  அதி­க­ளவு  கவனம் செலுத்­தி­யுள்ளோம்.இந்த நட­வ­டிக்­கைகள்   சமாதான, மற்றும் ஒரு­மைப்­பாடு செயற்­பா­டு­க­ளுக்கு  தடங்­க­லாக  உள்­ள­தா­கவே  நாங்கள் கருதுகின்றோம். 

எனவே  இந்த  நிலை­மையை   மாற்­றி­ய­மைக்க  நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு   ஜனா­தி­பதி, பிர­தமர்  மற்றும் ஏனைய அர­சியல்  தலை­வர்­க­ளி­டமும்   கோரிக்­கை­வி­டுக்­கின்றோம் என்று   பிரான்ஸ்இ இத்­தாலி,  ஜேர்­மனி,  நெதர்­லாந்து, ருமேனியா, சுவிட்­சர்­லாந்து,  நோர்வே  ஆகிய நாடு­களின்   உடன்­பாட்­டுடன்   ஐரோப்­பிய ஒன்­றி­யமும்   பிரிட்­ட­னுடன்  இணைந்து  விடுத்­துள்ள அறிக்­கையில்   தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

தவ­றான எண்­ணத்தை  தோற்­று­விக்கும்  உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத  குற்­றச்­சாட்­டுக்­களை  ஊட­கங்கள்  தொடர்ச்­சி­யாக   வெளி­யி­டு­கின்­றமை   பொறு­மை­யின்­மையை  தூண்­டு­வ­தாக  அமைந்­துள்­ளன.  இது­தொ­டர்பில்  பிர­த­ம­ருடன்   நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தையின் போது  சுட்­டிக்­காட்­டி­யுள்ளோம்.  சமூ­கங்­க­ளுக்­கி­டையில் சமா­தா­னத்தைப்  பேணி   நல்­லி­ணக்­கத்தை  நிலை­நி­றுத்­து­வது தொடர்பில்  அனைத்து இலங்­கை­யர்­க­ளு­டனும் நாம் பக்­க­ப­ல­மாக செயற்படுவோம். சம­யத்­த­லை­வர்கள்  மக்­களை வழி­ந­டத்தி  வன்­மு­றை­க­ளுக்கு எதி­ராக   குரல் எழுப்ப வேண்டும் எனவும் நாம் எதிர்­பார்க்­கின்றோம் என்றும்  அந்த அறிக்­கையில்   சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. 

இத­னை­விட  அனை­வ­ருக்கும்  பொது­வா­ன­சட்­டத்தின் கீழ்  மத அல்­லது   இன­வே­று­பா­டின்றி  பரஸ்­பர   மதிப்பு சகிப்பு  மற்றும்  சம­மாக நடத்தல்  போன்­ற­வற்­றுக்­கான  விட­யங்­களில்  அர்ப்­ப­ணிப்பை  வெளிக்­காட்­டு­மாறு  ஜனா­தி­பதி பிர­தமர்  மற்றும் ஏனைய அர­சியல் தலை­வர்­க­ளிடம் கூட்­டாக கோரிக்கை விடுக்­கின்றோம் என்றும் ஐரோப்­பிய ஒன்­றி­யமும் பிரிட்­டனும்  தெரி­வித்­துள்­ளன. 

 இந்த அறிக்­கை­யினை வெளி­யி­டு­வ­தற்கு முன்னர் பிர­தமர்    ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை அல­ரி­மா­ளி­கையில் ஐரோப்­பிய  ஒன்­றி­யத்தில் அங்கம்  வகிக்கும் நாடு­களின்  தூது­வர்கள்  சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தனர்.  இந்த சந்­திப்­பின்­போது  குண்­டுத்­தாக்­கு­தல்­களை அடுத்து  நாட்டில்  முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக  இடம்­பெற்று வரும்   நட­வ­டிக்­கைகள் தொடர்பில்  தூது­வர்கள் விசனம் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். 

இத­னை­ய­டுத்தே ஜனா­தி­பதி  மற்றும் பிர­த­ம­ரிடம்   கோரிக்கை விடுக்கும் வகையில்  ஐரோப்­பிய ஒன்­றி­யமும்  பிரிட்­டனும்  அறிக்கை­யினை வெளி­யிட்­டி­ருந்­தன.   

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­னதும் பிரிட்­டனதும் இந்த அறிக்­கை­யா­னது இலங்­கையில் வாழும் முஸ்லிம் மக்கள் மீதான வன்­முறை மற்றும்  அச்­சு­றுத்­தலை சர்­வ­தேச சமூகம்  வெறுப்­பதை  சுட்­டிக்­காட்­டு­வ­தாக  அமைந்­துள்­ளது.  

உண்­மை­யி­லேயே  தாக்­கு­தலை அடுத்து நாட்டில்  இடம்­பெற்ற முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான வன்­முறைச் சம்­ப­வங்கள்  திட்மிட்ட­வ­கையில் அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக நடத்­தப்­பட்­டவை  என்­பதை சர்­வ­தேச சமூகம்   உணர்ந்­துள்­ள­மை­யையும்   இந்த அறிக்கை   எடுத்­துக்­காட்­டு­வ­தா­கவே  அமைந்­தி­ருக்­கின்­றது. 

ஏப்ரல் மாதம் 21 ஆம்­தி­கதி  தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்கள் இடம்­பெற்­ற­தை­ய­டுத்து   இனங்­க­ளுக்­கி­டையே முறுகல் நிலை  ஏற்படுவதற்கான சந்­தர்ப்பம்  உரு­வா­கி­யி­ருந்­தது.250பொது­மக்கள்  உயி­ரி­ழந்த நிலையில் 500க்கும் மேற்­பட்­ட­வர்கள் காய­ம­டைந்­தி­ருந்­தனர். கிறிஸ்­தவ தேவா­ல­யங்­களை இலக்­கு­வைத்தும்  ஐந்து நட்­சத்­திர   ஹோட்­டல்­களை   இலக்கு வைத்தும்   இந்த குண்­டுத்­தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன.  

 முஸ்லிம்   தீவி­ர­வாத  அமைப்­பினர்  இந்த செயற்­பாட்­டினை  மேற்­கொண்­டமை  தெரி­ய­வந்­த­தை­ய­டுத்து  முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான  வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­ப­டலாம் என்ற அச்சம் நில­வி­யது. ஆனாலும்   கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை   உட்­பட  மதத்­த­லை­வர்­களின்  முன்­னெச்­ச­ரிக்­கை­யான செயற்­பா­டுகள் மற்றும் அர­சாங்­கத்தின்  முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளினால்  எத்­த­கைய வன்­முறை சம்­ப­வங்­களும் உட­ன­டி­யாக  இடம்­பெ­ற­வில்லை. 

குண்­டுத்­தாக்­குதல் இடம்­பெற்று மூன்று வாரங்­களின் பின்னர்   மே மாதம் 13 ஆம்­தி­கதி  தொடக்­கமே முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள்   கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டன. இந்த வன்­மு­றை­களின் பின்­ன­ணியில் அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­திகள்  இருந்­த­மையும் விசா­ர­ணை­களில் தற்­போது  கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன. 

 இதி­லி­ருந்து  அடுத்­த­கட்ட  அர­சியல் இலா­பத்­திற்­காக இன  மதங்­க­ளி­டையே  வன்­மு­றைகள் தூண்­டி­வி­டப்­பட்­ட­துடன்  அதற்­கா­கவே   திட்டமிட்­ட­வ­கையில்  செயற்­பா­டுகள்  மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. குண்டு தாக்­கு­தலை அடுத்து  பெரு­ம­ள­வான  முஸ்­லிம்கள்   கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர்.  இது­வரை 2000க்கும் மேற்­பட்­ட­வர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர்­களில் பெரு­ம­ள­வானோர் தடுத்து வைக்கப்பட்டு விசா­ரிக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் தெரி­வித்து வரு­கின்­றனர். 

உண்­மை­யி­லேயே கைது செய்­யப்­பட்­டுள்­ள­வர்­களின்  பெரும்­பான்­மை­யா­ன­வர்கள் பயங்­க­ர­வா­தி­க­ளுடன் தொடர்­பற்­ற­வர்­க­ளா­கவே இருப்­பார்கள்.  ஆனாலும் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்ள  இவர்கள் மீதும் விசா­ரணை என்ற பெயரில்   அழுத்­தங்கள்  பிர­யோ­கிக்­கப்­ப­டலாம்.  முஸ்லிம் மக்கள் மீது  வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­ப­டு­வ­துடன் பாது­காப்பு என்ற பெயரில்   அடா­வ­டித்­த­னங்­களும் அரங்­கேற்­றப்­ப­டு­கின்­றன.  இதே­போன்று முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களை இலக்­கு­வைத்தும்  இன­வாத தரப்­பினர்  செயற்­பட்டு வரு­கின்­றனர். 

இந்த நெருக்­க­டி­யான நிலை­யினை கருத்தில் கொண்டு   ஐரோப்­பிய ஒன்­றி­யமும் பிரிட்­டனும்  இவ்­வி­டயம் குறித்து கவனம் செலுத்­தி­யுள்­ள­துடன்  அர­சாங்­கத்­திடம்  நிலை­மையை மாற்றியமைக்­கு­மாறு   கோரிக்­கை­வி­டுத்­தி­ருக்­கின்­றன. 

நாட்டில்  தீவி­ர­வாத தாக்­குதல் நடை­பெற்­றி­ருக்­கின்­றது. பெரு­ம­ள­வான சேதங்கள் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன.  இத்­த­கைய  தாக்­கு­தலில்   ஈடு­பட்­ட­வர்கள்   அத­னுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் கைது­செய்­யப்­ப­ட­வேண்டும்.  சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட்டு அவர்கள் தண்­டிக்­கப்­ப­ட­வேண்டும். அதே­போன்று எதிர்­கா­லத்தில் இத்­த­கைய தாக்­கு­தல்கள் இடம்­பெ­றாது தடுப்­ப­தற்கு நட­வ­டிக்­கைகள்  எடுக்­க­வேண்டும்.  அதில்  மாற்­றுக்­க­ருத்து இல்லை.   

ஆனால்   பயங்­க­ர­வா­தத்தை  ஒழிக்­கின்றோம்   பயங்­க­ர­வா­தி­களை  கைது செய்­கின்றோம் என்ற போர்­வையில் அப்­பாவி மக்­களை   அல்­லல்­ப­டுத்­து­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. 

கடந்த மூன்று தசாப்­த­கா­ல­மாக இலங்­கையில் நடை­பெற்ற  யுத்­தத்­தின்­போது  தமி­ழர்கள் அனை­வரும் விடு­த­லைப்­பு­லி­க­ளா­கவே  பார்க்­கப்­பட்­டனர். ஏதா­வது ஒரு இடத்தில் புலிகள் தாக்­குதல் நடத்­தி­விட்டால்   தமிழ் மக்கள் மீது  தாக்­கு­தல்கள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டன.  தமிழ் இளைஞர் யுவ­திகள் வகை­தொ­கை­யின்றி   கைது­செய்­யப்­பட்டு தடுத்­து­வைக்­கப்­பட்­டனர்.  இத்­த­கைய அடக்கு முறைகள்  தமிழ் மக்­களை  குறிப்­பாக இளைஞர் யுவ­தி­களை  விடு­த­லைப்­பு­லி­கள்பால் செல்­வ­தற்கு தூண்­டு­த­லாக அமைந்­தது. 

அதே­போன்றே தற்­போது   முஸ்லிம்  மக்கள் மீது  மேற்கொள்ளப்படும் வன்­மு­றை­களும் அடக்­கு­மு­றை­களும்  பயங்­க­ர­வா­தி­களின் பக்கம்  அவர்­களை  தள்­ளி­விடும்  அபா­யத்­தையும்  ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.  எனவே இந்த விடயம் குறித்து பாது­காப்புத் தரப்­பி­னரும் அர­சாங்­கமும் நன்கு உணர்ந்­து­கொள்­ள­வேண்டும். 

ஒரு  சிலர் மேற்­கொண்ட  தவ­றுக்­காக  முழு முஸ்லிம் சமூ­கத்­தையும்   பாதிக்கும் வகை­யி­லான செயற்­பா­டுகள்  மேற்­கொள்­ளப்­ப­டு­மானால் அது  பயங்­க­ர­வா­தி­களின் செயற்­பாட்­டுக்கு ஒத்துழைப்பு வழங்­கு­வ­தா­கவே அமைந்­து­விடும். ஏனெனில்  பயங்க­ர­வா­திகள்   நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி  இனங்களுக்கிடையேயும் மதங்களுக்கிடையேயும் பிரிவினையை ஏற்படுத்தி தமது இலக்குகளை அடைந்துகொள்வதற்கே முயற்சிப்பார்கள்.     

எனவே கடந்தகால நாட்டின்   வரலாற்றை  படிப்பினையாகக் கொண்டு  பாதுகாப்புத் தரப்பினர் செயற்படவேண்டும். தற்போதைய நிலைமையினை மாற்றியமைக்கவேண்டும். இதற்கான கோரிக்கையினையே ஐரோப்பிய ஒன்றியம் தற்போது விடுத்திருக்கின்றது. 

முஸ்லிம் மக்களுக்கு எதிரான அழுத்தங்களும்  நெருக்கடிகளும்  உடனடியாக  நிறுத்தப்படாவிட்டால்  சர்வதேச சமூகமும்   இலங்கை மீது   அழுத்தங்களை  கொடுக்கும் நிலைமை எதிர்காலத்தில்  உருவாகலாம். எனவே  இதனை  கருத்தில் கொண்டு நாட்டில் வாழும்  மக்கள் அனைவர் மத்தியிலும்   நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும்   ஏற்படுத்தும் வகையிலானசெயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும். 

அரசியல்  நலன்களை கருத்தில் கொண்டு செயற்படும்   இனவாத சக்திகளின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சகல தரப்பினரும்  ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்..