ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் ஸ்தாபக தலைவர் பத்மநாபாவின் 29 ஆண்டு தியாகிகள் தினம் இம்மாதம் 19 ஆம் திகதி புதன்கிழமை வடக்கு கிழக்கில் மிகவும் அமைதியான முறையில் நினைவு கூரப்பட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பொருளாளரும்,மன்னார் மாவட்ட அமைப்பாளருமான எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்தார்.

ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் ஸ்தாபக தலைவர் பத்மநாபாவின் 29 ஆண்டு தியாகிகள் தினம் இம்மாதம் 19 ஆம் திகதி புதன்கிழமை வடக்கு, கிழக்கில் மிகவும் அமைதியான முறையில் நினைவு கூரப்பட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு-கிழக்கும் மற்றும் புலம் பெயர்ந்த நாடுகளில் தியாகிகள் தினம் நினைவு கூறப்படுகின்றமை வழமை.

எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையினை கருத்தில் கொண்டு தியாகிகள் தினமானது வடக்கு, கிழக்கில் உள்ள மாவட்டங்கள்  ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) கட்சியின் அலுவலகங்களில் தோழர்கள், ஆதரவாளர்களை ஒன்றிணைத்து தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

மாவட்ட பொறுப்பாளர்களின் தலைமையில் ஒவ்வெரு மாவட்டங்களிலும் தியாகிகள் தினம் நினைவு கூரப்படவுள்ளது.

குறித்த தியாகிகள் தின நினைவு நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், வவுனியாவில் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் , கிளிநொச்சியில் கட்சியின் உப செயலாளரும், முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சருமான சர்வேஸ்வரன், மட்டக்களப்பில் கட்சியின் உப தலைவர் துரைரெட்ணம், மன்னாரில் கட்சியின் பொருளாளர் எஸ்.ஆர்.குமரேஸ் ஆகிய நானும் கலந்து கொள்ளவுள்ளோம்.

மாவட்டங்களின் சூழ்நிலைக்கு அமைவாக மாவட்ட அலுவலகங்களில் இடம் பெறும் தியாகிகள் தின நிகழ்வில் கட்சியின் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த அழைப்பு விடுக்கின்றோம்.

உரிமைக்காக அரசியலை முன் நிறுத்தி தமிழ் தேசிய உரிமைகளை வென்றெடுப்போம் எனக்கோரி அஞ்சலி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பொருளாளரும், மன்னார் மாவட்ட அமைப்பாளருமான எஸ்.ஆர்.குமரேஸ் மேலும் தெரிவித்தார்.