(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மற்றும் அதன் புற நகர் பகுதிகளில் இருந்து கடற்படைக் கப்பக் குழுவினரால் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டுள்ள 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் விவகாரம், ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை மற்றும் மூதூர் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் 17 பேரின் படுகொலைகள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்தி, அதனை நிறைவு செய்து உடன் தமக்கு விசாரணை அறிக்கையை கையளிக்குமாறு சட்ட மா அதிபர் ஜனதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா உத்தரவிட்டுள்ளார். 

பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவு பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன மற்றும் அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர ஆகியோருக்கு  சட்ட மா அதிபர் அனுப்பி வைத்துள்ள ஆலோசனை கடிதத்திலேயே இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார்.

குறித்த நான்கு சம்பவங்கள்  தொடர்பிலான விசாரணைகளில் கால தாமதம் அவதனிக்கப்பட்டுள்ளதாலும் அந்த சம்பவங்கள் தொடர்பில்  பொது மக்கள் அவதானம் உயர் நிலையில் இருப்பதாலும்,  அச் சம்பவம் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ள பயங்கர சந்தர்ப்ப  நிலைமைகளைக் கருத்தில் கொண்டும் சட்ட மா அதிபர்  ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா இந்த சிறப்பு ஆலோசனைகளுடன் கூடிய உத்தரவைப் பிறப்பித்ததாக,  சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்ப்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.