(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக   சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சுயாதீன விசாரணைகளின் ஊடாக   நிரூபிக்கப்பட்டால் கூட்டாக  பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் குற்றச்சாட்டுக்களை பொறுப்பேற்க வேண்டும்  என பாராளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அடிப்படைவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக  சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு ஒரு தீர்வை பெற வேண்டும் என்பதற்காகவே பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டது.

அமைச்சு பதவியில் இருந்த விலகி விசாரணைகளை எதிர்க்கொள்ள தயாரில்லாத நிலையிலே ரிஷாத் பதியுதீன் பல்வேறு காரணிகளை முன்வைத்து காலதாமதத்தை  ஏற்படுத்தினார். 

இவருக்கு ஆதரவாகவே  அரசாங்கம் செயற்பட்டது.உரிய நேரத்தில்  நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்திருந்தால் எவ்வித பிரச்சினைகளும் ஏற்பட்டிருக்காது. 

நெருக்கடிகளை தொடர்ந்து முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியமை பல்வேறு அரசியல் காரணிகளை  மையப்படுத்தியதாக காணப்படுகின்றது. 

இவர்களது தீர்மானத்தினால்  எவ்வித பாதிப்பும் எமக்கு ஏற்படாது. பதவி துறந்துள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்,  ஆளுநர்களான அசாத் சாலி, எம். எல்.ஏ. எம். ஹிஸ்புல்லா  ஆகியோருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்துக்கு 21  முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. 

இதில் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான  குற்றச்சாட்டுக்கள் சுயாதீனமான முறையில் விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால்  கூட்டாக பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள்  குறித்த  குற்றச்சாட்டுக்களை பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்தார்.