சூடான் நாட்டின் இரண்டாவது பெரிய நகரான ஒம்டுர்மானில்  நீல நைல் நதியும் வெள்ளை நைல் நதியும் சங்கமிக்கும் இடத்திலிருந்து  சற்று தாழ்வாக பலகையாலான கட்டிடம் ஒன்று இருக்கிறது. அதில் பிரபலமான உணவு விடுதியொன்று இயங்குகிறது.

 அந்த கட்டிடத்தின் தூசிபடிந்த வாகனத்தரிப்பிடம்  ஆபிரிக்காவின் மிகப்பெரிய ஆற்றை மிகவும் தெளிவாகப் பார்க்கக்கூடிய வாய்ப்பான அமைவிடமாக அமைந்திருக்கிறது. இப்போது சில நாட்களாக நதியைப்  பார்ப்பவர்கள் முகத்தை மறுபக்கம் திருப்பிவிடுகிறார்கள். நதி நீரில் இரத்தம் கலந்தோடுகிறது.

தலைநகர் கார்ட்டூமில் சில தினங்களுக்கு முன்னர் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படைகள் கட்டவிழ்த்துவிட்ட கொடூரமான அடக்குமுறையைத் தொடர்ந்து கொல்லப்பட்ட பலரின் சடலங்கள் நைல் நதியில் மிதந்து வந்துகொண்டிருக்கின்றன.  

அத்தகைய சடலங்களின் எண்ணிக்கை நாற்பதுக்கும் அதிகம் என்று எதிரணி கூறுகிறது. படையினரின் அடக்குமுறையில் நூறுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாகவும் சுமார் 500 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த எண்ணிக்கையை சூடானின் ஆளும் இராணுவக் கும்பல் மறுக்கிறது.ஆங்காங்கே வன்முறைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.

30 வருடங்களாக சூடானை ஆட்சி செய்துவந்த சர்வாதிகாரி ஒமர் அல் -- பஷீரை பதவிகவிழ்த்த 6 மாதகால ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு ஜனநாயக மறுமலர்ச்சியொன்று ஏற்படும் என்று  நம்பிக்கை துளிர்விட்டது. ஆனால், கட்டுப்படுத்த முடியாத மூர்கத்தனமான துப்பாக்கிப் பிரயோகங்களும் தாக்குதல்களும் பாலியல் வன்கொடுமையும் மாற்றத்துக்கான சூடானின் கனவைச் தகர்த்துவிட்டது போலத் தோன்றுகிறது. 

பிரிட்டனும் அமெரிக்காவும் கொலைகளைக் கண்டனம் செய்திருக்கின்றன, விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகளும் ஆபிரிக்க ஒன்றியமும் கோரிக்கை விடுத்திருக்கின்றன.ஆனால், யாரைக் குற்றஞ்சாட்டவேண்டும் என்பது ஏற்கெனவே தெளிவாகிவிட்டது.

ஜெனரல் அப்தெல் பதாஹ்  அல் -- புர்ஹான் தலைமையிலான நிலைமாறுகால இராணுவ கவுன்சில்  உத்தேச இடைக்கால அரசாங்கமொன்றில் பெரும்பான்மை சிவிலியன் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பல வாரங்களாக நடந்த பேச்சுவார்த்தைகளின்போது பிடிவாதமாக மறுத்துவிட்டது. 

(இடைக்கால அரசாங்கத்தின் உறுப்பினர்களில்  பெரும்பான்மையானவர்கள் படைத்துறை சாராதவர்களாக இருக்கவேண்டும் என்பது எதிரணியின் பிரதான கோரிக்கையாகும்) அதன் விளைவாக அமைதியான வீதி ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன. 

ஆர்ப்ப்பாட்டக்காரர்கள் கட்டுப்பட மறுத்து துணிச்சலுடன் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்ததால் சினமடைந்த புர்ஹான்  அடக்குமுறைக்கு உத்தரவிட்டார். அவரை ஆதரிக்கும் சவூதி அரேபியாவும் எகிப்தும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுவதற்கு தூண்டுதலைச் செய்திருக்கக்கூடும்.

அதையடுத்து தொடர்ந்த பயங்கரங்களுக்கு எல்லாம் துணை இராணுவப்படைகளும் அவற்றின் தளபதியான ஜெனரல் முஹமட் ஹம்டான் டகோலோவும் தான். ' ஹெமெட்ரி ' என்று அறியப்பட்ட இவர் புர்ஹானின் பிரதி அதிகாரியாவார். இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் டார்பர் இனப்படுகொலைகளின்போது  ' ஜன்யாவீட் ' திரட்டல் படைகளுக்கு தலைமை தாங்கியமைக்காக டகோலோ ஏற்கெனவே மோசமான பேர்வழி என்று பெயரெடுத்தவர். கடந்த வாரம் நாசிகளின் விசேட பொலிஸ் படையின் (எஸ்.எஸ்.) பாணியில் தலைநகர் கார்ட்டூமில் இவர் நிராயுதபாணிகளான குடிமக்களை கொடுமைப்படுத்தினார்.

இணையத்தை முடக்கியதுடன்  அல் -- ஜஸீரா செய்தியாளர்களைத் தடைசெய்ததன் மூலமாக அடக்குமுறை பற்றிய தகவல்கள்   வெளியுலகை சென்றடைவதை கட்டுப்படுத்துவதற்கு புர்ஹானின் இராணுவக் கும்பல் மேற்கொண்ட முயற்சிகள் பரிதாபகரமாகத் தோல்விகண்டன. 

ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் இருந்த " கிறிமினல் கும்பல்களையே " தாங்கள் இலக்குவைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டதாக டகோலோ கூறியிருப்பது நகைப்புக்கிடமானது. இவ்விருவரும்  பஷீர் ஆட்சியை நினைவூட்டும்  ' பழைய சின்னங்களாக ' விளங்கும் ஏனையவர்களும் முன்கூட்டியே திட்டமிட்டு கொலைகளைச் செய்த குற்றத்துக்குப் பொறுப்பாளிகள். அதை அவர்கள் மறுப்பார்களானால், தாங்கள் குற்றமற்றவர்களா இல்லையா என்பதை நிறுவ சுயாதீனமான விசாரணைக்கு அனுமதிக்கவேண்டும்.

அதேவேளை, ' சுதந்திரம் மற்றும் மாற்றத்துக்கான சக்திகளின் பிரகடனம் ' என்று அமைப்பினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பிரதான கோரிக்கை படைத்துறை சாராதவர்களின் தலைமையில் தற்காலிக நிர்வாகம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என்பதேயாகும்.

 அந்தக் கோரிக்கை தாமதமின்றி மதிக்கப்படவேண்டும். அத்தகையதொரு நிருவாகம் அமைக்கப்பட்டால் மாத்திரமே அமைதி திரும்புவதற்கும் சர்வதேச கண்காணிப்புடன் கூடிய தேர்தல்களுக்கான நேரஅட்டவணையொன்றை தயார் செய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும்.

எதியோப்பியாவின் பிரதமர் அபிய் அஹமட் முன்னெடுத்திருக்கும் மத்தியஸ்த முயற்சி பேச்சுவார்த்தையை மீளத்தொடங்குவதை  நோக்கிய முக்கியமான ஒரு அடியெடுத்துவைப்பாகும். கார்ட்டூமில் இரு தரப்பினருடனும் கடந்தவாரம்  ஒருநாள் அவர் தனித்தனியாகப் பேசினார். ஆனால், உடனடியாகவே  அவர்  அடிஸ் அபாபாவுக்கு திரும்பிவிட்டார். 

அமைதி காக்குமாறு இராணுவக் கும்பல் மீது ஒருங்கிணைந்த நெருக்குதலைக் கொடுப்பதே இப்போது அவசியமாகச் செய்யப்படவேண்டிய காரியமாகும். சட்டத்தை மதிக்காத துணை இராணுவப் படைகள் வீதிகளில் அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருப்பதால் கார்ட்டூம்வாசிகள் பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள். உள்நாட்டுப் போருக்குள் சூடான் மூழ்கக்கூடிய ஆபத்து முன்னரைக்காட்டிலும் இப்போது நெருங்கிவந்து கொண்டிருக்கிறது.

அதைத் தடுப்பதற்கு அவசியமான துணிவாற்றல் சர்வதேச சமூகத்திடம் இருக்கிறதா? ஜனநாயக சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்று அதிகார மனப்பான்மையுடன் பல வருடங்களாக வலியுறுத்திவந்த அமெரிக்கா, சூடானின் முக்கியமான திருப்பக்கட்டம் வந்திருக்கும் இத்தருணத்தில் உதவுவதற்கு எதையும் செய்யவில்லை.முன்னாள் காலனித்துவ வல்லரசான பிரிட்டனி்ன் அரசாங்கம் கடுகடுப்புடன் இருக்கிறது.

பிரிட்டன் ' முற்றிலும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது ' என்று சூடான் தூதுவரிடம் கூறியிருக்கும் ஆபிரிக்க விவகாரங்களுக்கான அமைச்சர் ஹரியெற் பால்ட்வின் ' மிலேச்சத்தனமான தாக்குதல்களை ' நிறுத்துமாறு கேட்டிருக்கிறார். பிரிட்டன் செய்யக்கூடியது அவ்வளவு தானா? 

ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையில் உறுப்புநாடுகள் ஐக்கியமாக ஏதாவது நடவடிக்கை எடுப்பதற்கு உத்தேசித்தால் அதற்கு ரஷ்யாவும் சீனாவும் முட்டுக்கட்டை போடுவது இந்த நாட்களில் வழமையான ஒன்றாக வந்துவிட்டது. 

மத்தியஸதம் செய்யும் பொறுப்பை எதியோப்பிய பிரதமரிடமே விட்டுவிடுவதில் ஆபிரிக்க ஒன்றியம் திருப்திப்பட்டுக்கொள்கிறது போன்று தெரிகிறது .அதனால், இராணுவக் கும்பலுக்கு கடிவாளமிடும் பொறுப்பு அவர்களை ஆதரித்து நிதியையும் வழங்கும்  பிரதான நாடுகளான  சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் எகிப்து ஆகியவற்றுக்கே உரியதாகலாம். நைல் நதியில் மேலும் பல சடலங்கள் மிதந்து வருவதற்கு முன்னதாக அந்தப் பொறுப்பை அவை நிறைவேற்ற முன்வரும் என்று நம்புவோமாக.

( கார்டியன் )