சாவகச்சேரி பகுதியில் மோட்டார் சைக்கிள் பயணித்த இளைஞனை கும்பல் ஒன்று துடுப்பாட்ட மட்டையால் தாக்கியதால் , படுகாயமடைந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ் கண்டி நெடுஞ்சாலையில் நுணாவில் பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 குறித்த சம்பவத்தில் , கைதடி கிழக்கை சேர்ந்த ஸ்ரிபன் லக்சன் (வயது 20) எனும் இளைஞனே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். குறித்த இளைஞன் தனது வீட்டில் இருந்து, சாவகச்சேரி நகருக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டு இருந்தவேளை வீதியில் மறித்த கும்பல் ஒன்று தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞனை வீதியில் சென்றோர் மீட்டு சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதித்தனர், பின்னர் அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.