தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகரில் கடந்த பல மாதங்களாக போலியான வைத்திய சான்றிதழுடன் தனியார் வைத்தியசாலை ஒன்றினை நடத்தி வந்த வைத்தியர் இன்று தலவாக்கலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த வைத்திய அதிகாரி அண்மைக்காலமாக விசாரணைக்கு உட்பட்டு இருந்ததாகவும் தெரியவருகின்றது. மேலும் இவ் வைத்திய அதிகாரியை உறுதிப்படுத்தும் வகையிலான வைத்திய சான்றிதழினை  காட்சிப்படுத்துமாறும் பொது சுகாதார பரிசோதகர் மற்றும் தலவாக்கலை லிந்துலை நகர சபை தலைவர் அசோக சேபாள உட்பட பலரும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அவர் அவற்றை  காட்டுவதற்கு தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். 

அந்த வகையில் இன்று காலை குறித்த தனியார் வைத்தியசாலை அமைந்திருக்கும் கட்டடத்திற்கு சென்ற தலவாக்கலை லிந்துலை நகர சபை தலைவர் உட்பட உறுப்பினர்கள் சிலர் அவரிடம் மீண்டும் தனது வைத்திய சான்றிதழை கேட்டபோது அவர் தர மறுததுள்ளார். இதன் பின்னர்  இவ்விடயம் தொடர்பில் தலவாக்கலை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.

 

அதனையடுத்து தலவாக்கலை பொலிஸார் மற்றும் தலவாக்கலை பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து குறித்த வைத்தியரின்  வைத்திய சான்றிதழை பரிசோதித்த போது அவர் வைத்திருந்த சான்றிதழ் போலியானது என்றும் இவ்வளவு காலமும் போலியான வைத்திய சான்றிதழை வைத்துக்கொண்டு வைத்தியசாலையை முன்னெடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து சந்தேக நபர் பொலிஸார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டபோது அவர் சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.