(க.கிஷாந்தன்)

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுத் தருவதாக கூறி தொழிற்சங்கம் மற்றும் மலையக அரசியல்வாதிகள் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றர். இந்நிலையில் சர்வதேச தொழிலாளர் தினமான இன்று இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்தும் தமக்கான சம்பள உயர்வை மிகவிரைவில் பெற்றுத்தரக் கோரியும் இன்றுகாலை ஹட்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச தொழிலாளர் தினமான இன்று தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். தொழிலாளர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுவதை எம்மால் ஏற்றுகொள்ள முடியாது என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

நுவரெலிய மாவட்ட தோட்டத் தொழிலாளர்களை உள்ளடக்கிய சிவில் பிரதிநிதிகள் மற்றும் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், 'மேதினம் வேண்டாம் வேதனம் வேண்டும், உழைப்பவர்கள் நாங்கள் அனுபவிப்பவர்கள் நீங்கள்,  எமது உரிமையை நாமே வென்றெடுப்போம், வேண்டாம் அரசியல் வேண்டும் விடியல், ஏமாற்றுபவர்களை கண்டு விட்டோம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி கருப்பு பட்டி அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.