ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 18 ஆவது போட்டி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து, விராட் கோலி தலைமையிலான இந்திய அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது. 

அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு நொட்டிங்கமில் ஆரம்பமாகவுள்ளது.

இந்திய அணி தனது முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவையும், இரண்டாவது போட்டியில் 36 ஓட்டத்தால் அவுஸ்திரேலியாவையும் வலுவான நிலையில் உள்ளது.

நியூசிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையையும், இரண்டாவது ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷையும், மூன்றாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும் தோற்கடித்து புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, இந்தியாவை 179 ரன்னுக்கு சுருட்டி அபார வெற்றிபெற்றது. அந்த நம்பிக்கையுடன் நியூசிலாந்து அணி களம் காணும். இதுவரை இத் தொடரில் தோல்வியை சந்திக்காத இரு அணிகளும் தங்களின் வெற்றிப் பயணத்தை தொடர வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்குகிறது.

நொட்டிங்கமில் இந்த வாரம் முழுவதுமே பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் குறைந்த ஓவர் கொண்டதாக மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கிண்ண அரங்கில் இவ்விரு அணிகளும் இதுவரை 7 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 3 போட்டிகளிலும், நியூஸிலாந்து அணி 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.