நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை மனதில் கொண்டால் உறக்கம் என்பது வருவதில்லை. ஆனால் எம்மில் பலர் இரவில் உறங்கும்போது குறட்டை விடுவார்கள். இவர்களை பார்க்கும் ஏனையவர்கள், ‘கவலையே இல்லாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்’ என்று விமர்சிப்பார்கள். 

ஆனால் குறட்டை விடுபவர்கள் அதுகுறித்து உரிய நேரத்தில் சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளாவிட்டால், அதுவே அவர்களின் உயிரை பறிக்கும் காரணியாகிவிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

எம்முடைய இல்லங்களில் பாடசாலைகளுக்குச் செல்லும் பிள்ளைகள் இரவில் உறங்கும்போது சீரான  முறையிலும்,சிறிய அளவிலும் குறட்டையுடன் தூங்குவார்கள். அது பெரிதாக பாதிப்பதில்லை. ஆனால் 20 வயதை கடந்தவர்கள் அல்லது இளம் வயதிலேயே உடல் பருமனுடன் இருப்பவர்கள் உறங்கும்போது குறட்டை விடுவார்கள். இந்த குறட்டை ஒரே சீரான அளவில் இல்லாமல், விட்டு விட்டு ஏற்பட்டால் அது மிகப்பெரிய பாதிப்பின் அறிகுறி என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இரவில் 8 மணி நேரம் உறங்கிய பின்னரும், பகலில் சோர்வாக இருந்தாலோ அல்லது வேறு எங்கேனும் பணியாற்றும் போதோ அல்லது காத்திருக்கும் போதோ 3 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை குட்டி தூக்கம் போட்டால், உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும். ஏனெனில் இது ஆபத்தின் அறிகுறி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஒருவர் 10 வினாடி வரை மூச்சை எடுக்காமல் இருந்தால், அதற்கு ஆப்னியா என்று மருத்துவ மொழியில் பெயர் உண்டு. அதே தருணத்தில் ஒரு மணி நேரத்தில் ஐந்து முறைக்கு மேலாக மூச்சினை நிறுத்தி நிறுத்தி பிறகு குறட்டையை விட்டால், அது ஆபத்தான தூக்கமின்மை நோய் (Obstructive Sleep Apnea)என்று அறுதியிட்டுக் கூறலாம்.

இத்தகைய தருணத்தின் போது மூக்கின் வழியாக இயல்பாக செல்ல வேண்டிய ஒக்சிஜன் உள்ளே செல்வதில்லை. இதன் காரணமாக நீங்கள் உறங்கினாலும் உறங்காமல் இயங்கிக் கொண்டிருக்கும் இதயத்திற்கு தேவையான ஒக்சிஜன் கிடைப்பதில் தடை ஏற்படுகிறது. இதன் காரணமாக படபடப்பு உருவாகிறது.

 தொடர்ந்து இரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டு, இரத்த குழாய்களில் சமச்சீரற்ற தன்மை உருவாகிறது. இதன் காரணமாக ஸ்ட்ரெஸ் எனப்படும் பாதிப்பு உண்டாகும். இவை ஏற்பட்டால் தொற்றா நோய்கள் எனப்படும் சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய் ,இதய பாதிப்பு, மாரடைப்பு உள்ளிட்டவை வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாகும். அதனால் நீங்கள் உறங்கும் போது விட்டுவிட்டு குறட்டை விட்டால், உடனடியாக மருத்துவர்களை சந்தித்து, அதற்குரிய மருத்துவ ஆலோசனையும், அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

டொக்டர் சுப்ரஜா.

தொகுப்பு அனுஷா.