எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒவ்வொரு குழந்தையும் சமூகத்திற்கு முக்கியமானவர்கள். அவர்களை சிறந்தவர்களாக உருவாக்குவது சமூகத்தின் முக்கிய பொறுப்புகளில் ஒன்று எனவே தான் உலகளாவிய ரீதியல் குழந்தைகள் மீதான வன்முறைகளை இல்லாதொழிக்கும் நோக்கில் பல அமைப்புக்களும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. 

5 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளின் அடிப்படை உரிமைகளை வழங்காது சுயலாபம் கருதியும் வாழ்வாதார தேவைகளுக்காகவும் பணிகளில் அமர்த்தப்படுதல் சிறுவர் மீதான வன்முறைகளில் முக்கியமான ஒன்றாகும்.  யுனிசெப் அறிக்கையின் படி உலகம் முழுவதிலும் 158 மில்லியன் சிறுவர், சிறுமிகள் வீட்டு வேலை தவிர பிற வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.  

ஒரு குழந்தை வளர்ந்து சமூகத்தில் ஒரு நபராக இணையும் போது அவன் அல்லது அவள் சமூகத்தில் தாக்கம் செலுத்தும் ஒரு முக்கிய காரணியாகின்றனர். அத்துடன் அவர்கள்   சமூகத்தை மாற்றியமைக்கும் ஆயுதாமா உருவெடுக்கலாம். எனவே ஒவ்வொரு குழந்தையும் தமது குழந்தை பருவத்தில் சரியான கல்வியையும் ஏனையவளங்களையும் அனுபவிக்க உரிமைபெற்றவர்கள் இவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (World Day Against Child Labour) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது. 

2002 ஆண்டில்  உலக தொழிலாளர் ஸ்தாபனத்தின் 138ஆவது மற்றும் 182ஆவது உடன்படிக்கைகளுக்கு அமைவாக உருவாக்கப்பட்ட குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் ஒவ்வொரு வருடமும்  ஒவ்வொரு கருப்பொருளில் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்த ஆண்டு 'சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை இல்லாதொழிப்போம் ; புதிய கனவுகளை நனவாக்குவோம்.எனும் தொனிப்பொருளில் கடைப்பிடிக்கப்படுகின்றது.

குழந்தைகள் தொழிலாளர்களாக அமர்த்தப்படும்போது அவர்கள் மூன்றுவிதமான பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றனர் என குழந்தைகள் நலனுக்கான சர்வதேச அமைப்பான யுனிசெப் நிறுவனம் தெரிவிக்கின்றது.

1.உடல் ரீதியான பாதிப்பு

2.உளவியல் அல்லது மனரீதியான பாதிப்பு மற்றும்

3.உணர்வு மற்றும் சமூகரீதியான பாதிப்பு

இந் நிலையிலிருந்து குழந்தைகளை மீட்கவேண்டியது சமூகத்தின் பாரிய பொறுப்பாகும். இதற்கு சர்வதேச ரீதியாக கவனத்தில்கொள்ளவேண்டிய காரணிகள் முன்வைக்கப்படுகின்றன.

* சிறார்கள் அனைவருக்கும் ஆரம்பக்கல்வி கட்டாயம் ஆக்கப்பட வேண்டும் .

* சிறுவர்களின் தொழில் திறமைகளைக் கண்டறிந்து அத்திறமைகளை வளர்க்க பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்

* கொத்தடிமைகளாக இருந்து விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.

* பாடசாலை மற்றும் கல்லூரிகளில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம்களை நடத்தலாம்.

* "குழந்தைகள் உங்களுக்குப் பிறந்தவர்கள் தான், ஆனால் உங்களுக்காக மட்டுமே பிறந்தவர்கள் அல்ல" என்பதை பெற்றோர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

இந்தச் செயற்பாடுகளை ஏதோ ஒரு அமைப்புதான் செய்யவேண்டும் என்பதில்லை நாம் ஒவ்வொருவரும் குழந்தை பருவத்தை கடந்து வந்தவர்கள். எமக்குள்ளும் குழந்தை உணர்வுகள் இன்னமும் காணப்பபடுகின்றன. அவற்றின் அடிப்படையில் எம்மை சூழ உள்ள சமூகத்தில் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் குழந்தைகளை இனம் கண்டு அவர்களுக்கு உதவலாம். 

சிறுவர்கள் தொடர்பில் எமது நாட்டில் சிறந்த நிலைப்பாடு காணப்பட்டபோதும் இரண்டு சதவீதமானோர் குறித்து அக்கறைகொள்ள வேண்டிய தேவையுள்ளது. அவர்கள் குடும்ப சூழல் காரணமாகவும் வளப்பற்றாக்குறைக்காரணமாகவும் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களையும் மீட்டு சிறுவர் தொழிளார்கள் அற்ற சிறந்த நாடக உருவாக்க  அனைவரும் ஒன்றிணைவோம்.