(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களில் ஒருவராக கருதப்படும் தேசிய தெளஹீத் ஜமா அத் எனும் அமைப்பின் ஸ்தாபகர் சஹ்ரான் ஹாஷிம் எனும் பயங்கரவாதியின் கீழ் செயற்பட்ட குழுவின் ஆயுதப் பிரிவுக்கு  பொறுப்பாக இருந்த மொஹம்மட்  மில்ஹான் எனும் நபரை இலங்கைக்கு அழைத்து வந்து விசாரிப்பதில் தொடர்ந்தும் சிக்கல்கள் நிலவுகின்றது. 

குறித்த சந்தேகநபர் இலங்கை உளவுத்துறை கொடுத்த தகவலுக்கு அமைய  கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு 24 மணி நேரத்துக்குள் சவூதி அரேபியாவில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

இந் நிலையில் சவூதி பயங்கரவாத தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மில்ஹானை இலங்கை அழைத்து வந்து தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க இராஜ தந்திர மட்டத்தில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும் இந்த பிரதான சந்தேகநபரான மொஹம்மட் மில்ஹானை தம்மிடம் ஒப்படைக்குமாறு இந்தியவௌம் சவூதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில்,  குறித்த முக்கிய சந்தேகநபரை இலங்கைக்கு அழைத்துவருவதில் சிக்கல் நிலை நிலவுவதாகவும் அதனால் இதுவரை அவரை அழைத்து வர முடியாமல் போயுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் வீரகேசரிக்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்கு  மில்ஹான் எனும் குறித்த சந்தேகநபர் மிக அவசியமான சந்தேகநபராக சி.ஐ.டி. அடையாளம் கண்டுள்ள நிலையில்,  அவரை அழைத்து வந்து விசாரிக்க சட்ட மா அதிபர், வெளி விவகார அமைச்சு,  சவூதியிலுள்ள இலங்கை தூதரகம் ஊடாக முயற்சிகள்  தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எனினும் இன்று வரை சாதகமான எந்த  நகர்வுகளையும் அவதானிக்க முடியவில்லை எனவும் அந்த அதிகாரி சுட்டிக்கடடினார்.

மில்ஹான் எனும் குறித்த நபர்  தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவுக்கு  உம்ராவுக்காக சென்றிருந்தார். தொடர் தற்கொலை தாக்குதல்கள் அன்று அவர் மீள இலங்கைக்கு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் மீள திரும்பவில்லை. எனினும் அவரது பயணப்பொதி மட்டும் இலங்கைக்கு வந்துள்ளது. 

இந்நிலையில் சவூதி விமான நிலையம் ஒன்றில் தாக்குதலை அடுத்து தன்னை சி.ஐ.டி. தேடுவதை தெரிந்துகொண்டு மில்ஹான் சவூதியிலேயே ஒளிந்திருக்க முற்பட்ட போது அந்நாட்டு பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இலங்கையின் தகவலுக்கு அமைய கைதுசெய்யப்பட்ட  குறித்த சந்தேக நபர், யுத்த காலத்தில் காத்தான்குடியில் இயங்கியதாக நம்பப்படும் துணை  ஆயுதப் படைகளில் இருந்தவ்ர் என தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில்இ  வவுண தீவு பொலிச் காவலரணில் கடமையாற்றிய  பொலிஸ் உத்தியோகத்தர்கள்  இருவரை கடந்த 2018 நவம்பர் மாதம் கொலை செய்த சம்பவத்தையும்  அவரே  நெறிப்படுத்தியுள்ளதாகவும்  தகவ்ல்கள் வெளிப்படுத்தப்ப்ட்டுள்ளன.