(எம்.மனோசித்ரா)

பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் மக்கள் மத்தியில் அச்சமும், பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் சந்தேகமும் நிலவுகின்றது. அதனை நீக்குவதற்கு தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடர வேண்டும் என பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 

புலனாய்வுத் தகவல்களில் வெளியிடக் கூடியவற்றையும், இரகசியம் பேணப்பட வேண்டியவற்றையும் வேறுபடுத்தி தெரிவு செய்யக் கூடிய அதிகாரம் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு உண்டு. பலாத்காரமாக அவற்றைப் பெறவோ வெளியிடவோ முடியாது.

அதே வேளை தற்போது மக்கள் பயத்துடனும், சந்தேகத்துடனுமே வாழ்கின்றனர். மக்கள் மத்தியில் காணப்படும் இந்த சந்தேகத்தை போக்குவதற்காகவும், பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்குமே தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. 

சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்குள்ளது. ஆனால் அதை நீதிபதிகளுடன் கலந்தாலோசித்ததன் பின்னரே செய்ய முடியும். அவர் விருப்பத்திற்கு ஏற்ப யாரையும் விடுவிக்க முடியாது. இது நீதியையும் சட்டத்தையும் கேள்விக்குட்படுத்திவிடும்.  

அவ்வாறு ஜனாதிபதி தான் விரும்பியவர்களுக்கு மன்னிப்பு வழங்கினால் குற்றவாளிகள் அச்சமின்றி தவறு செய்வார்கள். இது நாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.