மோதல்களின் போது காணாமல் போனவர்கள் குறித்து அவர்களது குடும்பத்தவர்களிற்கு உரிய பதில்களை வழங்குவது அவசியம் என ஐக்கியநாடுகள் பாதுகாப்புசபை தெரிவித்துள்ளது.

மோதல்களின் போது காணாமல்போனவர்கள் தொடர்பில் நிறைவேற்றியுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்திலேயே ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபை இதனை வலியுறுத்தியுள்ளது.

மோதல்களில் தொடர்புபட்ட அனைவரையும் காணாமல்போனவர்களை தேடுவதற்கான பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

காணாமல்போனவர்களின்  உடல்களை மீள ஒப்படைக்குமாறும்,வேறுபாடுகள் இல்லாமல் காணாமல்போனவர்களை கருத்திலெடுக்குமாறும் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மோதல்களில் ஈடுபட்டுள்ள தரப்பினர் காணமல்போதலை தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்,சிறுவர்கள் காணாமல்போன சம்பவங்களிற்கு மிக முன்னுரிமையை வழங்கவேண்டும் எனவும் ஐநா கேட்டுக்கொண்டுள்ளது.

ஆயுதமோதல்களின் போது நபர்கள் காணாமல்போகும் பட்சத்தில் அரசாங்கங்கள் உடனடி பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் பாதுகாப்புசபை தெரிவித்துள்ளது.

காணாமல்போனவர்கள் தொடர்பிலான அனைத்து தரவுகளையும் திரட்டி சேமித்து பாதுகாக்குமாறும் ஐநா கோரிக்கை விடுத்துள்ளது.

சாத்தியமான சந்தர்ப்பங்களில்  உடல்எச்சங்களை உறவினர்களிடம் கையளியுங்கள் என தனது தீர்மானத்தில் கேட்டுக்கொண்டுள்ள ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபை மனித புதைகுழிகளில் இருந்து மனித எச்சங்களை வேண்டுமென்று இடமாற்றம் செய்வதை தவிர்க்கவேண்டும் எனவும் கோரியுள்ளது.