ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 17 ஆவது போட்டி ஆர்ரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா மற்றும் சப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு டவுன்டானில் ஆரம்பமாகவுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வுசெய்துள்ள நிலையில் அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

அவுஸ்திரேலிய அணி தனது முதலாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், 2 ஆவது போட்டியில் 15 ஓட்ட வித்தியாசத்தில் மேற்கிந்தியத்தீவுளையும் தோற்கடித்தது. எனினும்  மூன்றாவது போட்டியில் 36 ஓட்ட வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது.

பாகிஸ்தான் அணி தனது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத்தீவுகளிடமும் 2 ஆவது போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவியிருந்தது. இலங்கை அணியுடனான மூன்றாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி 15 ஒரு நாள் போட்டியில் 14 இல் அவுஸ்திரேலிய அணியே வெற்றி பெற்றுள்ளது. எனவே அந்த நம்பிக்கையுடன் அவுஸ்திரேலிய இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ளது.

டவுன்டானில் இன்று வானம் மேகமூட்டமாக இருக்கும் என்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண போட்டிகளில் இவ்விரு அணிகளும் இதுவரை 09 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் அவுஸ்திரேலிய அணி 05 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 04 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.