இலங்கையில் உயிர்த்தஞாயிறு தாக்குதலை மேற்கொண்டவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளில் இந்திய தேசிய புலனாய்வு முகவர் அமைப்பின் அதிகாரிகள் இன்று தேடுதல் நடவடிக்கையை  மேற்கொண்டுள்ளனர்.

 கோயம்புத்தூரிலேயே இந்த சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.இன்று காலை ஆறு மணிக்கு இந்த சோதனை நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

கேரளாவை சேர்ந்த அதிகாரிகள் கோயம்புத்தூரில் இந்த தேடுதல்  நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரியின் முகநூல் நண்பர் ஒருவரின் வீட்டையும் அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.

இலங்கை குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரியின் முகநூல் நண்பர் முகமட் அசாரூதீன் என்பவரின் வீட்டை சோதனையிட்டுள்ளோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் அசாரூதீனிற்கு குண்டுதாக்குதல்களுடன் நேரடியான தொடர்புள்ளதா என்ற விடயத்தை இந்திய அதிகாரிகள் வெளியிட மறுத்துள்ளனர்.