நடுவர்களின் தவறுகளை விமர்சிக்கவேண்டாம் என ஐசிசி வர்ணணையாளர்களிற்கு அறிவுறுத்தியுள்ளதை கடுமையாக சாடியுள்ள மேற்கிந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து ஜாம்பவான் மைக்கல் ஹோல்டிங் ஐசிசியின் இந்த நடவடிக்கையை தணிக்கை என வர்ணிததுள்ளார்.

மேற்கிந்திய அவுஸ்திரேலிய அணிகளிற்கு இடையிலான உலக கிண்ணப்போட்டிகளில் நடுவர்கள் இழைத்த தவறுகளை விமர்சித்த மைக்கல்ஹோல்டிங்கிற்கு ஐசிசி அனுப்பியுள்ள  கடிதத்திற்கு -அனுப்பியுள்ள பதில் கடிதத்திலேயே ஹோல்டிங் இதனை தெரிவித்துள்ளார்.

ஐசிசியின் இந்த நிலைப்பாடு காரணமாக வர்ணணையாளர்களை நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன இது தணிக்கைக்கு சமனானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் அந்த பாதையில் பயணிக்க விரும்பவில்லை எனவும் ஐசிசிக்கான கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடுவர்கள் உதைபாந்தட்ட உலக போட்டிகளில் இவ்வாறான தவறையிழைத்திருந்தால் அவர்களிற்கு வீட்டிற்கு செல்லுமாறு கேட்டிருப்பார்கள் என ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.

இவர்களிற்கு இன்னொரு உலக கிண்ணப்போட்டியில் நடுவர்களாக பணியாற்ற வாய்ப்புகிடைத்திராது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் வீரர் என்ற அடிப்படையில் கிரிக்கெட் உயர்ந்த தரத்தில் காணப்படவேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன்,என தெரிவித்துள்ள மைக்கல் ஹோல்டிங் நடுவர்கள் மோசமாக செயற்பட்டாலும் அவர்களை பாதுகாக்கும் நோக்கம் காணப்படுகின்றதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மன்னிக்கவேண்டும்,நான் இதன் ஒரு பகுதியாக செயற்படப்போவதில்லை என குறிப்பிட்டுள்ள மைக்கல்ஹோல்டிங் நீங்கள் தெரிவித்ததை ஏற்றுக்கொள்ளாதமைக்காக நான்  வர்ணணையை கைவிட்டுவிட்டு நாடு திரும்பவேண்டுமா என்பதை சொல்லுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த மின்னஞ்சல் யாருக்கெல்லாம் அனுப்பபட்டுள்ளது என்பதை பார்க்கும்போது வர்ணணையாளர் என்ற அடிப்படையில் எனக்கு மாத்திரமே அனுப்பபட்டுள்ளது என்பது தெரிகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடுவர்களின் மிகவும் மோசமான தீர்ப்புகளை நான் கடுமையாக விமர்சித்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.