யாழ்ப்பாணம், அராலி துறையில் உள்ள நன்னீர் கிணற்றில் விசமிகள் ஒயில் ஊற்றியமையால், அப்பகுதியைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் குடிநீரினை பெற பெரும் சாவலை எதிர்கொண்டுள்ளனர். 

கடலை அண்டிய அராலித்துறை பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. குறித்த பகுதி கடலை அண்டிக் காணப்படுவதனால் , நிலத்தடி நீர் உவர் நீராக காணப்படுகின்றது. 

அவர்களின் குடியிருப்புக்கு சற்று தொலைவில் அமைந்துள்ள பொதுக்கிணற்றில் நன்னீர் காணப்படுவதனால் , அக்கிணற்று நீரினையே பெற்று வந்தனர். 

அந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விசமிகள் கிணற்றினுள் எண்ணெய் பதார்த்தத்தை ஊற்றியுள்ளனர்.

மறுநாள் திங்கட்கிழமை மக்கள் குடிநீர் எடுக்க கிணற்றடிக்கு சென்ற போது கிணற்றினுள் ஒயில் ஊற்றப்பட்டு உள்ளமையை அவதானித்தனர்.

கிணற்றினுள் ஊற்றப்பட்ட ஒயில் நீரின் மேல் படையாக மிதந்து கொண்டு இருந்துள்ளமையால் கிணற்று நீரினை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

அதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்கு பெரும் சாவலை எதிர்கொண்டு நீண்ட தூரத்திற்கு சென்றே குடி நீரினை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதேவேளை, சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார், வலி.மேற்கு பிரதேச சபை உள்ளிட்டோரிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைந்து கிணற்றினை சுத்தம் செய்து தருமாறும் , இவ்வாறு கிணற்றுக்கள் ஒயில் கலந்தவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.