- ஹிலால் அஹமத்

தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய அரசாங்கம் சிறுபான்மையினத்தவர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதுடன் 'பீதி பற்றிய மாயை 'யையும் இல்லாமல் செய்யவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு  இரு வேறுபட்ட வழிகளில் கவனத்தைப் பெற்றிருக்கிறது. அந்த அறிவிப்பில் இருக்கக்கூடிய உறுதியை  மெய்யென்று ஏற்கமுடியாதவர்களாகவே  அரசியல் அவதானிகளில் ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். வலுச்சண்டைத்தனமான இந்துத்வா கொள்கைகள் சிறுபான்மையினத்தவர்களை ஓரங்கட்டிவிட்டதாக அவர்கள் வாதிடுகிறார்கள். நம்பிக்கையும் நல்லெண்ணமும் இல்லாத இந்த நிலைமை குறித்து மோடி அரசாங்கம் கருத்தூன்றிய அக்கறை கொண்டிருக்கிறதென்றால், அது பல காரியங்களைச் செய்யுவேண்டிய அவசியம் இருக்கிறது. மறுபுறத்தில், சிலர் மோடியின் அறிவிப்பை நம்பிக்கையுணர்வுடன் வரவேற்றிருக்கிறார்கள். சிறுபான்மையினத்தவர்கள் குறிப்பாக, முஸ்லிம்கள் மோடியின் நேர்மறையான சமிக்கையைப் புரிந்துகொண்டு ஆக்கபூர்வமான கலந்துரையாடலுக்கான சாத்தியப்பாடுகளை ஆராயவேணாடும் என்று அவர்கள் கோருகிறார்கள்.

உறுதியானதும் ஐயத்துக்கிடமின்றியதுமான இந்த இருவகை வாதங்களும் ஓரளவு பொருத்தமானவையாகும்.சிறுபான்மையினத்தவர்கள் மேலும் மேலும் அன்னியப்படுத்தப்படுகின்ற போக்கு நிச்சயமாக ஒரு மாயையல்ல என்பதுடன் இந்த சமூகங்களின் எதிர்காலம் பற்றிய கவலைகளுக்கும் அபிலாசைகளுக்கும் கற்பனைகளுக்கும் பிரதிபலிப்பை புதிய அரசாங்கம்  வெளிக்காட்டவேண்டுமென்று எதிர்பார்ப்பது ஒழுக்கநெறிமுறைகளின் படி நியாயபூர்வமானதும் அரசியல் ரீதியில் ஏற்புடையதுமாகும்.ஆனால், அடிப்படைக் கேள்வியொன்றை கேட்கவேண்டியது மிகவும் முக்கியமாதாகிறது ; சமகால இந்தியாவில் தாங்கள் அன்னியப்படுத்தப்படுவதாக சிறுபான்மையினத்தவர்கள் ஏன் உணருகிறார்கள் ?

இந்த கேள்வி  கடந்த ஐந்து வருடங்களாக சிறுபான்மையினத்தவர்கள் மத்தியில் அச்ச உணர்வை தோற்றுவித்திருக்கும் உத்தியோகபூர்வமற்ற ஒரு அரசியல் செயன்முறை  மீது எமது கவனத்தை ஈர்க்கிறது. இந்த அரசியல் செயன்முறை இந்துக்களும் முஸ்லிம்களும் இரு தனித்துவமானதும் முரண்பட்டதுமான உலகப்பார்வைகளை பிரதிநிதித்துவப்படுத்துகிற இரு அடிப்படை அடையாளக்கள் என்று நிறுவுவதற்கு சிறுபான்மை -- பெரும்பான்மை என்ற ஈரிணையான தளத்தில் பெருமளவுக்க தங்கியிருக்கிறது.

இந்த உத்தியோகபூர்வமற்ற அரசியல் செயன்முறை அடையாளம் காணக்கூடிய நான்கு கூறுகளைக் கொண்டுள்ளது. அவையாவன ; வன்முறைக் கருத்தாடல், வன்முறை நிகழ்வுகள், வன்முறையை நியாயப்படுத்தல், வன்முறை பற்றி மௌனம் சாதித்தல்.

கருத்தாடலும் நிகழ்வுகளும்

கடந்த ஐந்து வருடங்களாக ஊடகங்கள் -- தொலைக்காட்சி, செய்திப்பத்திரிகைகள், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள், திரைப்படங்கள் --  இந்துக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கருத்தாடலின் மூலமாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டிவிடக்கூடிய சூழ்நிலையைத் தோற்றுவிப்பதில் பெரியளவிலான பங்கையாற்றியிருக்கின்றன. இந்தியாவின்  பிரதான பிரச்சினையே மஸ்லிம்கள் தான் என்றதொரு எண்ணத்தைத் தோற்றுவிப்பதற்கு முஸ்லிம் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் இலக்குவைக்கப்பட்டு வந்திருக்கின்றன.உதாரணமாக, ஒவ்வொரு முஸ்லிம் குழந்தையின் பிறப்பும் இந்து சனத்தொகைக்கு ஒரு அச்சுறுத்தல் ; ஒவ்வொரு முஸ்லிம் பிள்ளையின் கல்வியும் பிரிவினைவாதத்தின் ஒரு சின்னம் ; முஸ்லிம்களின் உணவுப் பழக்கங்கள் இந்துக்களுக்கு விரோதமானவை ( முஸ்லிம்கள் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள் ) ; ஒவ்வொரு முஸ்லிம் தம்பதியின் மணவாழ்க்கையும் ஒரு சமூகத் தீங்கு ( முஸ்லிமகள் முத்தலாக் என்று சொல்லப்படுகின்ற உடனடி விவாகரத்து நடைமுறையை பின்பற்றுகிறார்கள் ) ; முஸ்லிம்களின் மரணங்கள் கூட தேசவிரோதச் செயலே ( ஏனென்றால் முஸ்லிம்கள் மயானத்துக்காக பெறுமதியான நிலத்தை ஆக்கிரமிக்கிறார்கள் ) என்றெல்லாம் எமக்குச் சொல்லப்படுகிறது.சொல்ப்படுகிறது.

இந்துக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற வலிமையான கற்பனாவாதம் வெறித்தனமான முஸ்லிம் விரோத பிரசாரங்களினால் குறைந்த பட்சம் மூன்று சாத்தியமான வழிகளில்  ஊட்டம்பெற்றிருக்கிறது. முதலாவதாக, ஒப்பற்றதும் தனித்துவமானதுமான கலாசாரத்தைக் கொண்ட ஒரேசீரான தேச  - அரசு சமூகமாக இந்துக்கள் காட்டப்படுகிறார்கள். பல கடவுள்களில் இந்துக்களுக்கு இருக்கும் நம்பிக்கை இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான தீர்க்கமான வேறுபாட்டை வரையறை செய்வதற்காக ஒரு தனித்துவமான அம்சமாக எடுத்துக்கூறப்படுகிறது.

 இரண்டாவதாக, அறுதிசெய்யக்கூடிய தரவுகள் / சான்றுகளை முன்வைப்பதன் மூலமாக  இந்துக்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள் என்று விளக்கம் தரப்படுகிறது.இந்த அரசியல் தந்திரோபாயத்துக்கு 2017 இந்து மனித உரிமைகள் அறிக்கை ஒரு உதாரணமாகும்.இந்தியாவில் இந்துக்கள் எதிர்நோக்கும் மனித உரிமை மீறல்கள் அந்த அறிக்கையில் பதிவாகியிருக்கின்றன. எண்ணிக்கையில் பெரும்பான்மையினராக இந்துக்கள் இருந்தாலும் கூட, அவர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாகவே நடத்தப்படுகிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது. இந்த வாதத்தை நியாயப்படுத்துமுகமாக, பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான அட்டூழியங்களும்  இந்துக்களுக்கு எதிரான குற்றச்செயல்களின் நிரலில் சேர்க்கப்படுகின்றன.

மூன்றாவதாக, இந்துத்வா குழுக்கள் இரு கற்பனாவாத அரசியல் செயற்களங்களை கட்டமைத்திருப்பதாக அரசியல் கோட்பாட்டியலாளர் பார்தா சட்டர்ஜி கூறுகிறார். அகச்சார்பான செயற்களம்  அரசு தலையீடுசெய்ய அனுமதிக்காத இந்து மதம் மற்றும் கலாசாரத்தின் ஒரு  அதிகார எல்லை என்று வரையறுக்கப்படுகிறது.இந்த அகச்சார்பான அரசியல் செயற்களத்தில் இருந்துதான் பாபர் மசூதி மற்றும் சபரிமலை தொடர்பான இந்துத்வா நிலைப்பாடுகள வெளிக்கிளம்புகின்றன.ஆனால், புறச்சார்பான அரசியல் செயல்களத்தில் நிலைமை அவ்வாறில்லை. அங்கு இந்துத்வா தெளிவான முறையில் சட்ட -- அரசியலமைப்பு கருத்தாடலின் உதவியை நாடுகிறது. 8 மாநிலங்களில் இந்துக்களை சிறுபான்மையினர் என்று அங்கீகரிக்கவேண்டும் என்ற கோரிக்கை அரசியலமைப்பு மற்றும் சட்ட ஏற்பாடுகளை தெரிந்தெடுத்துப் பயன்படுத்துகின்ற போக்கிற்கு ஒரு உதாரணமாகும்.

வெறுப்பும் வன்முறையும் கொண்ட கருத்தாடலை ஏற்படுத்தியபோதிலும் கூட, கடந்த ஐந்து வருடங்களில் பரந்தளவிலான  கலவர நிலைவரத்தைப் போன்ற சூழ்நிலையைத் தோற்றுவிப்பதற்கு முஸ்லிம்களை ஆத்திரமூட்ட இந்துத்வா சக்திகள் தவறிவிட்டன. ' காதல் ஜிஹாத் ' ,  ' கார் வாப்சி', இராமர் கோவில் , ஏன் முத்தலாக் போன்ற பிரச்சினைகளினால் கூட கலவரத்தைத் தோற்றுவிக்க முடியவில்லை. இத்தகைய பகைமைப்போக்குடைய இனவாத சூழ்நிலையில் தான் புதியதொரு வன்முறை வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. கும்பல்களாகத்திரண்டு முஸ்லிம்களைத் தாக்குவது அல்லது கொலைசெய்வதே அதுவாகும். அதன் மூலமாக வலிமையான தாக்கத்தை தோற்றுவிப்பதற்காக ஒரு சில முஸ்லிம்கள் கொலைசெய்யப்பட்டார்கள். இந்துப்பெருமை என்ற பெயரில் குறிப்பாக பசுப்பாதுகாப்பு குழுவினர் தீவிரமாகச் செயற்படுகின்ற வலயங்களில் வேலையில்லாத இளைஞர்களை வன்முறைக் கும்பலாக அணிதிரட்டுவது மிகவும் சுலபமாகும்.

நியாயப்படுத்தலும் மௌனம் சாதித்தலும்

முஸ்லிம்களுக்கு எதிரான புதிய வடிவிலான இந்த வன்முறையை அரசாங்கம் கண்டிக்கவில்லை. மாறாக, பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் அத்தகைய சம்பவங்களை நியாயப்படுத்தியது மாத்திரமல்ல, குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு சட்டரீதியான -- அரசியல் ரீதியான ஆதரவையும் வழங்கினர். டாட்ரி பகுதியில் 2015 செப்டெம்பரில் முஹம்மட் அக்லாக் என்பவர் ஈத் பெருநாளன்று மாட்டிறைச்சியை உண்டதாகவும் வீட்டில் குளிரூட்டியில் வைத்திருந்தாகவும் கூறி  கும்பல் ஒன்று அவரை  அடித்துக்கொலை செய்ததுடன் மகனை கொடூரமான முறையில் காயப்படுத்திய  சம்பவத்துடன் இது ஆரம்பமானது.  மத்திய அமைச்சரான மகேஷ் சர்மா ( அவர் கௌதம புத்தர் நகரின் எம்.பி.யாகவும் இருக்கிறார் ) அந்த சம்பவத்தைக் கண்டனம் செய்யவில்லை. அக்கொலையை தற்செயலான ஒரு  சம்பவம் என்று அவர் வர்ணித்ததுடன் பிரதான சந்தேக நபராகக் குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் வீட்டுக்கும் விஜயம் செய்தார் ; பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் தொடர்பு கொள்வதைத் தவிர்த்தும்கொண்டார்.

முன்னாள் சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சரான  ஜயந்த் சின்ஹா 2018 இல் இதேவிதமான நடத்தையை வேறுபட்டமுறையில் வெளிப்படுத்தியதைக் காணக்கூடியதாக இருந்தது.ஜார்க்காண்ட் மாநிலத்தில் முஸ்லிம் ஒருவர் கும்பலொன்றினால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபருக்கு சட்டஉதவியை சின்ஹா வழங்கினார். அச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட எட்டுப் பேருக்கும் துரித விசாரணை நீதிமன்றம் பிணை வழங்கியபோது அதை பொதுவைபவமொன்றில் வரவேற்று அவர் உரையாற்றினார்.தனது செயலை நியாயப்படுத்திய சின்ஹா  நீதியின் மேன்மையை போற்றிப்பேணி நீதிமன்றம் சந்தேகநபர்களை பிணையில் விடுவித்திருக்கிறது என்று வாதிட்டார். மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதி என்றவகையிலும் மத்திய அமைச்ச் என்ற வகையிலும் சட்டத்தின் உகந்த செயன்முறையை கௌரவிப்பதற்கு தனக்கு உரித்து இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

இந்த சம்பவங்கள் குறித்து நீண்டகாலமாக எதுவும் பேசாமல் பிரதமர் மோடி விசித்திரமான மௌனமொன்றைச் சாதித்தார்.இறுதியாக, 2017 ஜூனில் " சட்டத்தை தங்கள் கையில் எடுப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை " என்று கூறினார்.பசுப்பாதுகாப்புக் குழுக்களை மோடி  கண்டனம் செய்தபோதிலும், கும்பலாகச் சேர்ந்து முஸ்லிம்களை தாக்கிக்கொலை செய்வதை அவர்களுக்கு எதிரான பிரத்தியேகமான வன்முறை வடிவம் என்பதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.அதை வெறுமனே ஒரு சட்டம் , ஒழுங்குப் பிரச்சினையாகவே சிறுமைப்படுத்தினார்.

இந்தவகையான அரசியல் பிரதிபலிப்புகள்  கும்பலாகச் சேர்ந்து முஸ்லிம்களைத் தாக்குவது இயல்பான ஒரு சமூகத் தோற்றப்பாடு என்ற எண்ணத்தை உருவாக்கியிருக்கின்றன போலத் தோன்றுகிறது. இந்துக்களே பாதிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள் என்ற கருத்தாடலை ஆட்சியதிகார வர்க்கம் ஏற்றுக்கொண்டுவிட்டது போன்றம் தெரிகிறது.

பாரதிய ஜனதாவின் புதிய அரசாங்கம் சிறுபான்மையினத்தவர்கள் மத்தியில் நிலவும் அச்ச மாயைப் பற்றி அக்கறை கொண்டதாக இருக்கிறதென்றால்,  மத அடிப்படையிலான வன்முறைகள் வழமையானவையாக மாறியிருப்பதுடன் ஏற்புடையாகவும் தோன்றுகின்ற சூழ்நிலையை உருவாக்கியிருக்கின்ற செயன்முறையை திட்டமிட்ட முறையில் நிர்முலஞ்செய்துவிடவேண்டும்.

உண்மையில், அப்பாவி முஸ்லிம்களை கொலைசெய்வது நிச்சயமாக ஒரு சட்டம், ஒழுங்கு பிரச்சினையே.அத்தகைய வன்முறைச் சம்பவங்களைக் கையாள்வதற்கு எம்மிடம் ஒரு சில சட்டங்கள் இருக்கின்றன.ஆனால், எம்மிடம் ஒரு ஒழுங்கு இல்லை என்பது நிச்சயமானதாகும்.

 (ஹிலால் அஹமத் டில்லியில்  வளரும் சமுதாயங்கள் பற்றிய கற்கைகளுக்கான நிலையத்தின் ஒரு இணைப் பேராசிரியராவார் )

(நன்றி ; இந்து )