இன்றைய திகதியில் நாற்பது வயதைக் கடக்கும் ஆண் மற்றும் பெண்களுக்கு தோள்பட்டையில் வலி ஏற்படுகிறது. சிலருக்கு தோள் பட்டையை அசைக்கவோ அல்லது மேலே உயர்த்தவோ முடியாமல் அவதிப்படுவர். இதற்கு தற்போது நவீன சிகிச்சைகள் அறிமுகமாகியிருக்கின்றன.

முதலில் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவர்கள் இரத்த சர்க்கரையின் அளவைப் பரிசோதித்து கொள்ள வலியுறுத்துகிறார்கள். ஏனெனில் இரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்பாடு இல்லாமல் அதிகரித்தால் இது போன்ற விளைவுகள் ஏற்படும். இரத்த சர்க்கரையின் அளவை மருந்து மாத்திரைகள் மற்றும் உணவுக்கட்டுப்பாடு உடற்பயிற்சி மூலம் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். இதற்கான கால அவகாசமாக மூன்று மாதம் எடுத்துக் கொள்ளலாம். அதன் பின்னரும் தோள் பட்டையில் வலியோ அல்லது அதனை அசைக்கமுடியாத நிலையில் இருந்தால் உடனடியாக எலும்பு மூட்டு மருத்துவ நிபுணரை அணுகவேண்டும்.

அவர்கள் ஸ்கேன் பரிசோதனை மூலம் பாதிப்பின் தன்மையை அறிந்து கொள்வார்கள். தோள்பட்டை மூட்டில் ஏற்பட்டிருக்கும் இறுக்கம் குறித்தும் அங்குள்ள எலும்புகளைச் சுற்றியுள்ள மென்மையான திசுக்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்பது குறித்தும் அல்லது மூட்டு எலும்புகளுக்கு இடையே ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்பதும் குறித்து ஆராய்ந்து தெரிந்து கொள்வர். 

பிறகு அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்வர். பெரும்பாலும் இயன்முறை மருத்துவ சிகிச்சையின் மூலமே இதனை குணப்படுத்தலாம். சிலருக்கு இதன் பின்னரும் வலி தொடர்ந்தால் அவர்களுக்கு ஓர்த்தோகிராம் என்னும் பரிசோதனையை மேற்கொண்டு. ஓர்த்ரோஸ்கோப்பி சிகிச்சை செய்து வலியை முழுமையாக அகற்றுவர். அதன் பின்னரும் மருத்துவர்கள்  கடைபிடிக்கச் சொல்லும் பரிந்துரையை மறக்காமல் மறுக்காமல் பின்பற்றவேண்டும்.

டொக்டர் ராஜ்கண்ணா

தொகுப்பு அனுஷா.