(எம்.எப்.எம்.பஸீர்)

கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் சேவையாற்றிய 23 வயதான  நாகராஜா பிரசாந்தன் எனும் பொலிஸ் உத்தியோகத்தர் காணாமல் போன சம்பவம், திட்டமிட்ட  கொலை சம்பவம் என்பதை  11 வருடங்களின் பின்னர் சி.ஐ.டி. வெளிப்படுத்தியுள்ளது.

அதன்படி, குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கடத்தி, சுட்டுக்கொன்று புதைத்ததாக கூறப்படும் மூன்று சந்தேக நபர்களை  சி.ஐ.டி.யினர் கைது செய்து தடுத்து வைத்து விசாரித்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.  

2018 நவம்பர் மாதம்  வவுணதீவு பொலிஸ் காவலரணில் கடமையாற்றிய இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்ப்ட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு சென்ற பொலிஸ் அத்தியட்சர்  ஒருவரின் கீழான குழுவுக்கு  கிடைத்த தகவல் ஒன்றினை மையபப்டுத்தி முன்னெடுக்கப்பட்ட தொடர் விசாரணைகளிலேயே 11 வருடங்களின் பின்னர் மர்மம் வெளிவந்துள்ளதாக பொலிஸ்  அத்தியட்சர் ருவன் குணசேகர மேலும் கூறினார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பின்னர்,  கொக்கட்டிச் சோலை, சிவன் கோயில் அருகேயுள்ள மயானப் பகுதியை அண்மித்த இடமொன்றில் புதைக்கப்பட்டமை தொடர்பிலும் கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் தகவல்கள் தெரியவந்துள்ளது.

அதன்படி மட்டக்களப்பு நீதி நீதிமன்றில் பெறப்பட்ட உத்தரவுக்கு அமைய குறித்த இடம் அகழப்பட்டு, சடலத்தின் எச்சங்களை பரிசோதனைகளுக்காக எடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.