வர்ணமயமான கொடிகள், ஒவ்வொரு கட்சிசார் பதாகைகள், சாராயத்திற்கும், 500 ரூபாய் பணத்துக்குமான மக்கள் கூட்டம், பச்சை, நீலம், மஞ்சள், சிவப்பு என்ற வர்ணத்திலான பேரணிகள், ஒவ்வொரு அரசியல் கட்சியின் வெற்றிக் கோஷங்களை எழுப்பிய வண்ணம் வீதிகளில் ஆரவார ஊர்வலம். என்ன தேர்தல் காலம் வந்துவிட்டதா என எண்ணவேண்டாம். வரவிருப்பது தொழிலாளர் தினம். நாளை மே மாதம் முதலாம் திகதி இலங்கையில் நடைபெறவிருக்கும் மேதினக் கூட்டத்தை பற்றிய முன்கூட்டிய விமர்சனமே இது. பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கானது என்பதுபோல தொழிலாளர் உரிமைக்காகவும் அவர்களின் கௌரவத்தை மதிக்கும் வகையிலும் நடத்தப்பட வேண்டிய மேதினக் கூட்டங்கள் இன்று வெறும் பிரசாரக் கூட்டங்களாக மாற்றம் பெற்றுள்ளது. உண்மையிலேயே மேதினம் என்பதன் புனிதத்துவமும், போராட்டத்தின் வலியும், அதன் விளைவுகளும் இன்று தொழிலாளர் வர்க்கத்தினருக்குக் கூட தெரியவில்லை என்று வெளிப்படியாகவே குற்றம் சுமத்த முடியும்.
அன்று வர்க்கத்துக்கான போராட்டம் எவ்வாறு அமைந்தது. உண்மையில் போராட்டம் ஒன்று எவ்வாறு அமைய வேண்டும் என்று வரலாறுகள் பல கதைகளை இன்றும் சுமந்து வருகின்றது. மேற்குலக நாடுகளில் தொழில் புரட்சி துளிர்விட ஆரம்பித்த காலம். தொழிலாளர் வர்க்கத்தை அடிமைகளாக்கி இருபத்து நான்கு மணிநேர வேலை நேரம் என தொழிலாளர்களை மிருகத்தனமாக அடிமைப்படுத்தி நடத்தி வந்த கால கட்டம் அது. உற்பத்தி திறனுக்கு மாத்திரம் முன்னுரிமை கொடுக்கப்பட்டு அதற்கான இலக்கை அடையும் வகையில் மனிதர்களை இயந்திரமாக்கி மேற்குலகம் நகர்ந்துகொண்டிருந்தது. அப்போதெல்லாம் சூரியோதயம் ஆரம்பித்து சூரிய அஸ்தமனம் வரையில் ஒரு தொழிலாளியின் வேலை நேரமாகும்.
இன்று ஜனநாயக நாடுகள் என முத்திரை பொறித்துள்ள நாடுகளில் எல்லாம் அன்று அடக்கு முறை மூலமாக தொழிலாளரின் உழைப்பு பறிபோய்க்கொண்டு இருந்தது. ஒரு தொழிலாளி 19 மணித்தியாலங்களுக்கும் மேலும் வேலை செய்கின்றான் என்பதே 1800களின் பின்னர் தான் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த காரணிகள் தான் மே தினம் உருவாகவும் அடிப்படியாக அமைந்தது. ஆனால் இந்த தொழிலாளர் தினம் என்ற விடுதலைக் குரலுக்கான நாள் அவ்வளவு இலகுவாக கிடைக்கவில்லை. இந்த வெற்றியின் பின்னணியில் பாரிய போராட்டங்களும், இழப்புகளும் உள்ளன. இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை என்ற தாரக மந்திரமே இறுதியில் தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலைக்கான உறுதிமொழியாகவும் அமைந்தது.
18ஆம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட தொழிலாளர் புரட்சிகளின் விளைவு தொழிலாளரின் வேலைநேரம் 10 மணித்தியாலங்களாக குறைக்கப்பட வேண்டும் என்ற கோட்பாடும் கொண்டுவரப்பட்டது. அதற்கான போராட்டங்கள் மேற்குலகில் பல பாகங்களிலும் வெடிக்க ஆரம்பித்தது. 1880 தொடக்கம் 1890 வரையில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகளில் வெடித்த இந்த போராட்டத்தின் விளைவும், மாக்சிஸ தலைவர்களின் தொடர்ச்சியான போராட்டங்களும் தொழிலாளர்களின் காலவரையின்றி வேலை நேரத்தை 10 மணிநேர வேலை நேரமாக மாற்றியது.
அது தொடர்ச்சியான போராட்டத்தின் மூலமாக எட்டுமணிநேர வேலைநேரமாக வரையறுக்கப்பட்டது. 1886 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி கண்ட வெற்றியானது உலக தொழிலாளர் தினமாக மாற்றம் பெற்றது. பின்னர் 1889ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சர்வதேச சோஷலிச தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது. அதில் பதினெட்டு நாடுகளின் நானூறு பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். தொழிலாளர்களின் தலைவன் கார்ல் மார்க்கஸ் வலியுறுத்திய எட்டு மணிநேர வேலை நேரம் இந்த மாநாட்டில் உறுதிப்படுத்தப்பட்டது. அதுவே மே தினமாக இறுதியில் பிரகடனப்படுத்தப்பட்டது.
“உழைக்கும் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்பதே மேதினம் அளித்த உரிமைக்கான முழக்கமாகும். அன்று தொழிலாளர் போராட்டங்களின் மூலமாக வென்றெடுக்கப்பட்ட தொழிலாளரின் தினம் அன்றில் இருந்து இன்றுவரையில் மே மாதம் முதல் நாளை உரிமைக்கான நாளாக உலகத் தொழிலாளர் வர்க்கத்தினர் அனுஷ்டித்து வருகின்றனர். ஆனால் இன்று தொழிலாளரின் நாளான மே தினம் ஒவ்வொரு அரசியல் கட்சியினதும் பலத்தையும், அதிகார பலத்தையும் காட்டும் நாளாக அமைந்துவிட்டது. உண்மையில் தொழிலாளரின் உரிமைகளை, அவர்களின் கடின உழைப்பையும் அதன் மூலமான நாட்டின் ஆற்றலையும் போற்றவேண்டிய இந்த தினம் இன்று அதன் நோக்கத்தில் இருந்து முற்று முழுதாக மாற்றப்பட்டு ஒரு கேலிக்கூத்தான நாளாகவும், அரசியல் கட்சிகளின் பிரசார நாளாகவும் மாற்றம் பெற்றுள்ளது. இன மத அரசியல் பேதமின்றி உழைக்கும் வர்க்கத்தின் நலனை போற்றவேண்டிய இந்த நாள் இன்று முழுமையாக அரசியல் சாயம் பூசப்பட்டு ஒரு தேர்தல் பிரசார நாளாக மாற்றம் பெற்றுள்ளமை மறுக்க முடியாத உண்மையாகும்.
எத்தனையோ திருநாட்கள் வருகின்றன. ஆனால் அதிலெல்லாம் ஒன்று கூடாத மக்கள் கூட்டம் இந்த தொழிலாளர் தினத்தில் ஒன்றுகூடுகின்றனர். தமது உரிமைக்காகவும் வெற்றிக்காகவும் உணர்வு பூர்வமாக ஒன்று கூடுகின்றனர். இலங்கையில் ஜனநாயகம் பலமடைந்துள்ளது. வீதிகளில் ஊர்வலங்கள் சென்றும் மைதானங்களில் மேடைகள் அமைத்தும் மேதினத்தை அனுஷ்டிக்க உரிமை உள்ளது. ஆனால் அதை பயன்படுத்தி இந்த அரசியல் நயவஞ்சகர்கள் தமக்கேயுரிய அரசியல் தந்திரத்தில் இன்று வெறும் அரசியல் நாளாக மாற்றிவிட்டனர். அதன் விளைவு இன்று தொழிலாளர் உரிமைக்கான மேடைகள் வெறும் அரசியல் மேடையாக மாத்திரம் மாற்றம் பெற்றுள்ளன.
எத்தனையோ தொழிலாளர்கள் தமது வேலைக்கேற்ற சரியான ஊதியம் இல்லாது, உரிமைகள் மறுக்கப்பட்டு உள்ளனர். வாக்குறுதிகள் மீறப்பட்டு மோசமான வகையில் நடத்தப்படுகின்றனர். ஆனால் ஆட்சி மாற்றத்தின் போதும் அதிகாரத்தை கைப்பற்றும் போதும் அரசியல் வாதிகளின் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்தாலும் ஒவ்வொரு மேதினக் கூட்டத்திலும் தொழிலாளர்கள் தமது உரிமைக்காகவும் ஊதியத்திற்காகவும் மாத்திரமே குரலெழுப்பி வருகின்றனர். அதேபோல் நாட்டில் எத்தனையோ சிறுவர் தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் அவர்களின் எதிர்காலம் தொடர்பில் எந்த அரசியல் வாதிகளும் குரலெழுப்புவதில்லை. ஒருவேளை அவர்களுக்கு வாக்களிக்கும் வயது வராததனால் வாய்மூடி உள்ளனரோ? என்றும் விமர்சிக்கத் தோன்றுகின்றது. மேதினத்தின் நோக்கத்தையோ அல்லது அதன் உண்மைத் தாற்பரியத்தையோ குழிதோண்டிப் புதைத்துவிட்டு அதன் மேல் நின்று ஒப்பாரி வைப்பதைப்போல் இன்றைய காலத்தின் மேதினம் கொண்டாடப்படுகின்றது. தொழிலாளர் வர்க்கமே ஒன்றுபடு, தொழிலாளரின் உரிமைகளை வென்றெடு என்றெல்லாம் குரலெழுப்ப வேண்டிய இத்தினத்தில் அதை மறந்துவிட்டு மாறாக அரசியல் கட்சிகளின் கொள்கைகளையும், தமது அருமை பெருமைகளையும், தனிப்பட்ட ஒருசிலர் மீது விமர்சனம் முன்வைத்தும் தமது அரசியல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற அரசியல் கட்சிகளின் மே தினங்களைப் போலில்லாது இம்முறை முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக அமையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த காலங்களில் ஒரு கட்சியின் மீதும் குடும்ப அரசியலின் மீதும் முற்றிலும் குறை கூறப்பட்ட ஒன்றாகவும், தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்பட்டதும், சாதாரண மக்களின் வாழ்வாதாரம் பறிபோன ஒன்றாகவும் விமர்சிக்கப்படும் ஒன்றாகவும் அமைந்தது. ஆனால் இம்முறை அவ்வாறு இல்லாது கூட்டு கட்சிகளின் ஆட்சியில் தொடர்ந்து கொண்டிருக்கும் தொழிலாளர் உரிமை மீறல்கள், பொய்யான வாக்குறுதிகள் தொடர்பிலும் விமர்சனங்களை முன்வைக்கும் ஒன்றாக அமையும்.
வழமையான மக்கள் விடுதலை முன்னணியின் ஆதார பூர்வமான குற்றசாட்டுகள். மஹிந்த அணியினரின் பயங்கரவாத மற்றும் இனவாத குற்றச்சாட்டுகள். ஐக்கிய தேசியக் கட்சியினதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் நல்லாட்சி, ஜனநாயகம், மஹிந்தவின் ஊழல்கள், விடுபட்ட சர்வதேச விசாரணைகள் என்ற கதைகளும் மாத்திரமே மே தினக் கூட்ட மேடைகளில் காணப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. எனினும் அதையும் தாண்டிய உண்மையான தொழிலாளரின் உரிமைக்கான குரல்கள் கட்டாயம் தேவைப்படுகின்றது. இன்றைய நவீன பொருளாதார சுரண்டல், தொடர்ச்சியான தொழிலாளர் வர்க்கத்தின் மீதான அடக்குமுறைகள், வேலைவாய்ப்பு இல்லாத சமூகத்தின் மீதான அழுத்தம் என பல சிக்கல்கள் உள்ளன. அதேபோல் மலையக தொழிலாளர்களின் மீதான அடக்குமுறைகள், புறக்கணிப்புகள், தோட்டத் தொழிலாளர்களின் வேலைக்கேற்ற ஊதியம் இல்லாத நிலைமை, தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் மீதான பொருளாதார சுமைகள், நீண்ட நேர தொழில் என்று பல்வேறு சிக்கல்கள் எம்மத்தியில் உள்ளன. வெறும் அரசியல் வாக்குறுதிகளில் மாத்திரம் நம்பி ஏமாறும் மக்களை தூண்டும் வகையிலோ அல்லது தொழிலாளர் வர்க்கத்தை மீண்டும் ஒன்றிணைக்கும் வகையிலோ பலமான வேலைத்திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
19 ஆம் நூற்றாண்டில் தொழிலாளர் வர்க்கத்தின் தலைமைத்துவத்தை ஏற்ற மார்க்ஸ், ஏங்கில்ஸ், லெனின், திரோஸ்கி ஆகியோரைப் போன்று இப்போதும் பல உழைக்கும் வர்க்கத்தின் தலைமைகள் உருவாக்கப்பட வேண்டும். எமது நாட்டில் வேலையாட்களின் பிரச்சினைகளை சுட்டிக்காட்டும் அவர்களுக்கென பலமாக குரல்கொடுக்கும் அமைப்புகள் புத்துயிர் பெறவேண்டும். ஆடு நனைகின்றது என்று அழும் ஓநாய்களான அரசியல் வாதிகளிடம் இருந்து உழைக்கும் வர்க்கத்தை காப்பாற்றவும் அவர்களுக்கு என்ற உரிமைகளையும் சலுகைகளையும் ஆணித்தனமாக உறுதிப்படுத்தும் போராட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதாவது இப்போது மீண்டுமொரு தொழிலாளர் புரட்சி தேவைப்படுகின்றது.
வழைமைபோன்று மே தினத்தில் தொழிலாளர்களின் உரிமைகள் அனுஷ்டிக்கப்பட வேண்டும். தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக்குரல் முழங்க வேண்டும். அது தவிர்ந்து அரசியல் வாதிகளின் அல்லது கட்சிகளின் புகழ்பாடும் கூட்டமாக அமைந்துவிடக் கூடாது. தொழிலாளர் தினத்தில் தொழிலாளர்கள் போற்றப்பட வேண்டும், அது தவிர அரசியல்வாதிகளை அல்ல. அப்போது தான் உண்மையான மே தினத்திற்கும் புத்துயிர் கிடைக்கும். ஆகவே இப்போதாவது நவீன பொருளாதார முறைமைகளில் மேற்கத்தேய நாடுகளின் பொருளாதார சுரண்டல்கள், எமது தொழிலாளர் வளமிக்க நாடுகளில் எவ்வாறு தொழிலாளர் உரிமைகள் பறிபோகின்றது என்பதை அனைவரும் சிந்தித்துப்பார்க்க வேண்டும். அதுவே இன்றைய காலத்தின் தேவையாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM