யதார்த்த நாடகம் எனப்படும் ரியாலிட்டி ஷோ வரிசையில் பிக்பொஸ் நிகழ்ச்சியும் அடங்குகிறது. மேலைதேய நாடுகளில் மிகவும் பிரபலமான இந்நிகழ்ச்சியில் பொதுவாக ஒரு நிஜவாழ்க்கையை நினைவூட்டும் கற்பனை சூழலில் சில பிரபலங்கள் தோன்றி பல வாரங்களுக்கு பங்குபற்றுவார்கள்.

இப்பாணியில் தமிழில் உருவாகும் இந்த தொலைக்காட்சி யதார்த்த நாடகத் தொடரில், பதினைத்து பிரபலங்கள் ஒரே வீட்டில் வெளியுலகு தொடர்பில்லாமலும், கைத்தொலைபேசி பாவனையின்றியும் தொடர்ந்து நூறு நாட்கள் இணைந்து வசிப்பார்கள். இப்போட்டியில் போட்டியாளர்களுக்கு பல சவால்கள் காத்திருக்கும். அத்தோடு, வாரம் ஒரு முறை போட்டியாளர்களுக்கிடையில், ஒருவரை போட்டியிலிருந்து விலக்குவதே இப்போட்டியின் விதிமுறையாகும்.

இந்நிகழ்ச்சி பிரபல தமிழ் தொலைக்காட்சியில் 2017 ஆம் ஆண்டு ஆரம்பமானது.

இந்நிலையில், முதல் சீசனில் ஆரவ், ஓவியா, சினேகன், வையாபுரி, காயத்ரி ரகுராம், ஜூலி உள்ளிட்ட 19 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இதில் நடிகை ஓவியாவும், ஜூலியும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர்.  முடிவில் ஆரவ் முதல் சீசனின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

அதேபோல பிக்பொஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் மும்தாஜ், தாடி பாலாஜி, நித்யா, ஜனனி, மகத், ரித்விக்கா போன்றோர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். முதல் சீசனை விட மிகவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இதில், நடிகை ரித்விக்கா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். 

இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக 2  சீசன்களை கடந்து 3 வது  சீசனில் கால்பதிக்கின்றது.  மேலும், இந்நிகழ்ச்சியின் முதல் இரண்டு சீசன்களை தொகுத்து வழங்கிய கமலஹாசனே மூன்றாவது சீசனையும் தொகுத்து வழங்கவுள்ளமை ரசிகர்கள் மத்தியில் இன்னும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில்  ஜுன் 23 ஆம் திகதி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், முதலாவது போட்டியாளராக ஓ.கே., ஓ.கே., படத்தில் நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்த 'ஜாங்கிரி' மதுமிதா தேர்வாகியுள்ளார்.

அத்தோடு, சாக்ஷி அகர்வால், எம்.எஸ் பாஸ்கர், ஆல்யா மானசா, ராதா ரவி, பிரேம்ஜி, டி ராஜேந்தர், பிரியா ஆனந்த், கஸ்தூரி மற்றும் வி.ஜே சித்தூ உள்ளிட்ட பிரபலங்களை போட்டியில் பங்குபற்ற  அனுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது