இந்தியாவில், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த நபரொருவர்,  தனது மகள் உயிரோடு இருக்கும் போதே, அவர் இறந்துவிட்டதாக அறிவித்து, கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகளை ஒட்டிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த நபரின் மகள், தன்னுடைய பேச்சை மீறி, காதலித்த நபரைத் திருமணம் செய்துகொண்ட குற்றத்திற்காக, இந்த தண்டனையை தனது மகளுக்கு வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆம்பூர் பகுதியில் உள்ள குப்பராஜபாளையம் என்ற பகுதியை சேர்ந்த சரவணன் என்ற குறித்த நபர், தனது மகள் அதே பகுதியைச் சேர்ந்த மணி என்பவரை, கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளதை கண்டறிந்துள்ளார். 

எனினும் தனது மகளும், அவரது காதலனும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், சரவணன் தனது மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் தனது காதலில் உறுதியாக இருந்த சரவணனின் மகள், வீட்டை விட்டு வெளியேறி, காதலனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில்  அதிர்ச்சி அடைந்த சரவணன், தனது மகள் இறந்துவிட்டதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்ததுடன், மகள் காதல் திருமணம் செய்து கொண்ட கோபத்தில், அவருக்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகளையும்  ஒட்டியுள்ளார்.

குறித்த சம்பவம் அப்பகுதியினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.