(நா.தனுஜா)

தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு கூறும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. எனவே இவை அனைத்திற்கும் மத்தியில் அரச உத்தியோகத்தர்களே சிக்கிக்கொண்டு திணறுகின்றனர் என தேசிய ஒற்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.

தெரிவுக்குழு விசாரணைகளை பகிரங்கமாக ஊடகங்களில் வெளியிடுவதால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன. அதேபோன்று இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதியின் மீது குற்றஞ்சுமத்தும் முயற்சிகளும் இடம்பெறாமலில்லை.

அதேவேளை தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு கூறும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. எனவே இவை அனைத்திற்கும் மத்தியில் அரச உத்தியோகத்தர்களே சிக்கிக்கொண்டு திணறுகின்றனர். சுருக்கமாக இதனை ஒரு அரசியல் விளையாட்டு என்றே கூறவேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்கள் குறித்து பாராளுமன்றத் தெரிவுக்குழுவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவுக்குழுவின் விசாரணைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று கடுந்தொனியில் எச்சரித்தார்.

நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் அதிகாரம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு இருக்கின்றது. அதனை நிறுத்துமாறு கூறுகின்ற அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. எனினும் இவ்விவகாரத்தில் ஒருவித அரசியல் விளையாட்டு இடம்பெறுகின்றது என்றே கூறவேண்டும் என்றார்.