(இராஜதுரை ஹஷான்)

தெரிவிக்குழுவின் விசாரணைகளுக்கு சாட்சியமளிக்க சென்றால்  நிறைவேற்று அதிகாரம் செயற்படுத்தப்படும் என்று  ஜனாதிபதியும்,  சாட்சியமளிக்க சமூகம் தராவிடின் சட்டத்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று சபாநாயகர் குறிப்பிடுகின்றார். ஆகவே இரு துறையின் போட்டித்தன்மைக்கு நீதித்துறை ஒரு தீர்வை வழங்க வேண்டும் என  பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

பாராளுமன்ற தெரிவுகுழுவின் செயற்பாடுகள் தொடர்பில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையான   விமர்சனங்களையே முன்வைக்கின்றார். கடந்த காலங்களிலும் தேசிய பாதுகாப்பினை ஜனாதிபதியும், பிரதமரும் பொருட்படுத்தாமல் தமது சுய  அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டார்கள். 

ஜனாதிபதி  பிரதமரையும், அவருக்கு ஆதரவானவர்களையும் தேசிய    பாதுகாப்பு சபைக்கு வர வேண்டாம் என்று தடுத்தமையும், அதற்கு  எதிராக பிரதமர் தரப்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் பொருப்பற்ற விதமாக  இருந்தமையின் விளைவே     ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி பெறு எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.