(எம்.ஆர்.எம்.வஸீம்)

அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்குமிடையில் மீண்டும் தலைதூக்கியுள்ள பிரச்சினை நாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல. அத்துடன் தேர்தலை பிற்படுத்துவதற்காக மேற்கொள்ளும் திட்டமாகவும் இது இருக்கலாம் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

மேலும் நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலையில் ஜனாதிபதி, பிரதமர் இணைந்து செயற்பட்டாலே இதற்கு முகங்கொடுக்கலாம். இல்லாவிட்டால் இன்னும் பாரிய நெருக்கடியான நிலையே ஏற்படும். 

தற்போது நாட்டில் இனங்களுக்கிடையில் ஏற்பட்டிருக்கும் சந்தேகப்போக்கை அகற்றி இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த பாராளுமன்றத்தினால் அங்கிகரிக்கப்பட்ட மத நல்லிணக்க சபை ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என கர்தினால் மல்கம் ரன்ஜித் தெரிவித்திருந்தார். இந்த கோரிக்கையை பிரதமர் ஏற்றுக்கொண்டு அவ்வாறானதொரு சபையை ஏற்படுத்துவதை வரவேற்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.