இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

37 வயதான யுவராஜ் சிங் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்தபோது, 

இந்திய அணிக்காக 400 க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடியது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகும். அத்துடன் 2011 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கைக்கு எதிராக சிறப்பாக விளையாடியதை மறக்க முடியாது. 28 ஆண்டுகள் கழித்து உலகக் கிண்ணத்தை வென்ற அணியில் இடம்பெற்றதைவிட என்ன பெருமையுள்ளது. 

கிரிக்கெட் எனக்கு அதிகமாக கற்றுக் கொடுத்துள்ளது. போராட கற்றுக்கொடுத்தது. எப்போது எல்லாம் நான் கீழே விழுந்தேனோ அப்போதெல்லாம் எழுந்து நிற்கவும், மீண்டும் முன்நோக்கி செல்ல ஊக்குவிப்பதாகவும் இருந்தது என்றார். 

டெஸ்ட் போட்டி

முதல் போட்டி    : 2003.10.16 நியூஸிலாந்து - இந்தியா

இறுதிப் போட்டி : 2012.12.9 இங்கிலாந்து - இந்தியா

இதுவரை  40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள யுவராஜ் சிங் 3 சதங்கள், 11 அரைச்சதங்கள் உட்பட 1900 ஓட்டங்களை குவித்துள்ளதுடன் ஒன்பது விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

ஒருநாள் போட்டி

முதல் போட்டி    : 2000.10.03 கென்யா - இந்தியா

இறுதிப் போட்டி : 2017.06.30 மேற்கிந்தியத்தீவுகள் - இந்தியா

இதுவரை 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள யுவராஜ் சிங் 14 சதங்கள், 52 அரைச்சதங்கள் உட்பட 8701 ஓட்டங்களை குவித்துள்ளதுடன் 111 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

இருபதுக்கு : 20

முதல் போட்டி    : 2007.09.13 ஸ்கொட்லாந்து - இந்தியா

இறுதிப் போட்டி : 2017.02.01 இங்கிலாந்து - இந்தியா

இதுவரை 58 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ள யுவராஜ் சிங் 8 அரைசதங்கள் உட்பட 1177 ஓட்டங்களை குவித்துள்ளதுடன் 28 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.