யாழ்.காரைநகர் கடற்பகுதியில் கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் காணாமல் போய் ஒருவார காலம் கடந்தும் எந்தவிதமான தகவலும் கிடைக்காமையால் உறவினர்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. 

காரைநகர் மத்தியை சேர்ந்த கோடீஸ்வரன் குகபிரியன் (வயது 23), தவராசா சத்தியராஜ் (வயது 26) ஆகிய இருவரும் கடந்த 2ஆம் திகதி காரைநகரிலிருந்து தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளனர். 

அது தொடர்பில் கடந்த 4ஆம் திகதி உறவினர்களால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. முறைப்பாட்டையடுத்து அது தொடர்பில் பொலிசார் கடற்படையினருக்கு அறிவித்தனர். 

இந்நிலையில் கடற்படையினர் மற்றும் சக மீனவர்கள் கடலில் தேடுதல் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். 

இந்நிலையில் ஒரு வார காலமாகியும் குறித்த மீனவர்கள் தொடர்பில் எந்தவிதமான தகவல்களும் கிடைக்க பெறாமையால் உறவினர்கள் மத்தியில் அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளது.