உலகக் கிண்ண போட்டியில் நேற்று இடம்பெற்ற ஆட்டத்தின்போது அவுஸ்திரேலிய அணி வீரரான அடம் சாம்பா பந்தை சேதப்படுத்தியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரில் நேற்று இடம்பெற்ற 14 ஆவது போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதின. இதில் இந்திய அணி 36 ஓட்டத்தினால் வெற்றிபெற்றது.

இப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் சுழற் பந்து வீச்சாளர் அடம் சாம்பா 6 ஓவருக்குப் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 50 ஓட்டங்களை வாரி வழங்கினார். 

இந் நிலையில் இப் போட்டியில் அடம் சாம்பா பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ளும் போது அவர் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஒரு ஓவரில் பந்து வீசுவதற்கு முன்பாக அவர் தன்னுடைய காற்சட்டைப் பொக்கெட்டுக்குள் கையை விட்டு ஏதோ ஒன்றை எடுத்து பந்து மீது வைப்பது போன்று காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்தக் காணொளியில் அவர் பல முறை இது போல் செய்கின்றமையை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.

இந்த சம்பவம் இப்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. பந்தின் தன்மையை மாற்றுவதற்காக ஒருவகையான தாளைப் பயன்படுத்தி தேய்த்தாரா? என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுந்துள்ளன.

அவர் மீதான இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கும் அவுஸ்திரேலிய உள்ளூர் போட்டிகளில் மாத்திரமின்றி சர்வதேச போட்டிகளில் விளையாடவும் ஐ.சி.சி. தடை விதிக்கும் என்று தெரிகிறது. மேலும் உலகக்கிண்ண தொடரிலும் விளையாடமுடியாத நிலை ஏற்படும். 

ஏற்கனவே கடந்த ஆண்டு அவுஸ்திரேலிய அணி வீரர்களான டேவிட் வோர்னர் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய நிலையில் ஓராண்டு கால தடைக்குப் பின்னர் மீண்டும்  அணியில் இடம்பிடித்துள்ள நிலையில், சம்பாவின் இந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.