இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றையதினம் கொழும்புக்கு வருகை தருவதற்கு முன்னதாக சனிக்கிழமை இந்தியாவின் பிரபல ஆங்கில தினசரி ஒன்று "குண்டுத்தாக்குதல்களுக்கு பிறகு இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் வெளிநாட்டு தலைவர் மோடி தெரிவிக்கும் பல செய்திகள்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. 

அந்த பத்திரிகையின் மூத்த செய்தியாளர் ஒருவர் தனது நாட்டு பிரதமரின் விஜயத்தை முன்னிட்டு கொழும்பு வந்து இங்கிருந்தே அந்த கட்டுரையை எழுதியிருந்தார். இங்கு அவர் அரசியல் ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள் அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் என்று பலதரப்பினருடனும் பேசி அறிந்துகொண்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டதாக அக்கட்டுரை அமைந்திருந்தது.

மோடியின் கொழும்பு நிகழ்ச்சி நிரல் பற்றி நன்கு தெரிந்த அரசாங்க அதிகாரியொருவர் இந்த பத்திரிகையாளருடன் பேசியபோது, மோடி இலங்கை அரசாங்கத் தலைவர்களுடனும் அரசியல்வாதிகளுடனும் கலந்துரையாடக்கூடிய விடயங்களைப்பற்றி மேலோட்டமாக கருத்துக்களை வெளியிட்டிருந்தார். 

அப்போது அவர் இலங்கையில் 'தமிழர் பிரச்சினை முக்கியத்துவமற்றதாக ஒதுக்கப்பட்டுவிட்டது என்று கூறினாராம். அத்துடன் ராகுல் காந்தியும் அவரை ஆதரிக்கும் தமிழ்நாட்டு கட்சிகளும் இந்தியாவில் ஆட்சியதிகாரத்துக்கு வராமல்போனது இலங்கைக்கு எவ்வளவோ நல்லதாகப் போய்விட்டது என்று இலங்கை தலைவர்களிடம் மோடி சொன்னால் நன்றாக இருக்கும் என்றும் அந்த அதிகாரி கூறியதாக கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

ஏதோ ராகுல் காந்தி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்திருந்தால் தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழ்நாட்டு கட்சிகளின் நெருக்குதலால் இலங்கை அரசாங்கத்துக்கு அவர் தொந்தரவு கொடுக்கக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கும் என்று அந்த இலங்கை அதிகாரி எண்ணினார் போலும். அதை வாசித்தபிறகு இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து குறைந்தபட்சம் மிக அண்மைய கடந்த காலத்தையாவது ஒரு மீள்பார்வைக்குள்ளாக்கும் அக்கறை பிறந்தது.

இருவாரங்களுக்கு முன்னர் முன்னரைக் காட்டிலும் பெரிய பெரும்பான்மைப் பலத்துடன் மோடி இரண்டாவது பதவிக்காலத்துக்கு பிரதமராக வந்தபோது இலங்கையில் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் தமிழர் பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்க அவர் உதவவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததைக் காணக்கூடியதாக இருந்தது. நேற்றையதினம் மோடியை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் தமிழர் பிரச்சினையின் இன்றைய நிலையை எடுத்துக்கூறி இந்தியாவிடமிருந்து தமிழர்கள் எதிர்பார்ப்பதையும் விளக்கியிருப்பார் என்று நம்பலாம்.

இச்சந்தர்ப்பத்தில் மோடியின் முதலாவது பதவிக்காலத்தில் அவரது அரசாங்கம் இலங்கைத் தமிழர்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடித்தது என்பதை ஒருகணம் நோக்கவேண்டும். அந்த அணுகுமுறையை முன்னாள் வெளியுறவுச் செயலாளர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் கொழும்பு வந்திருந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவுடன் நடத்திய சந்திப்பில் வெளிப்படுத்திய கருத்துக்களை விட வேறு எதுவும் பிரகாசமாக விளங்கவைக்காது.

இன்று மோடியின் புதிய அரசாங்கத்தில் ஜெய்சங்கர் வெளியுறவு அமைச்சராக பதவியேற்றிருக்கிறார். மோடியின் மிகுந்த நம்பிக்கைக்குரியவரான அவர், இந்தியாவின் வரலாற்றில் வெளியுறவு அமைச்சராக வந்திருக்கும் முதல் வெளியுறவுச்செயலாளர் மாத்திரமல்ல, வெளியுறவு அமைச்சராக வந்திருக்கும் முதல் தமிழருமாவார். 

சென்னை இந்து ஆங்கிலப் பத்திரிகையின் கொழும்பு செய்தியாளராக சில வருடங்களுக்கு முன்னர் பணியாற்றிய தி.ராமகிருஷ்ணன் கடந்த வருட ஆரம்பத்தில் " ஓர் இனப்பிரச்சினையும் ஓர் ஒப்பந்தமும் " என்ற தலைப்பில் 1987 இந்திய -- – இலங்கை சமாதான உடன்படிக்கை பற்றி ஒரு நூலை எழுதிவெளியிட்டார். அவர் அந்த நூலின் முதல் அத்தியாயத்தை தொடங்கும்போது 2017 முற்பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களிடம் ஜெய்சங்கர் கூறிய கருத்துக்களை தவிர்க்கமுடியாமல் குறிப்பிடவேண்டியிருந்தது.ஏனென்றால் சமாதான உடன்படிக்கை பற்றிய மோடியின் முதல் அரசாங்கத்தின் மனநிலையை மாத்திரமல்ல தமிழர் பிரச்சினையை அது எவ்வாறு பார்க்கிறது என்பதையும் அந்த கருத்துகள் வெளிச்சம் போட்டுக்காட்டின.

சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் தூதுக்குழு ஜெய்சங்கருடன் நடத்திய அந்த சந்திப்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு விவகாரம் குறித்து அவரின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். சமாதான உடன்படிக்கையின் அடிப்படையில் இந்தியாவுக்கு ஒரு கடப்பாடு இருப்பதால் இரு மாகாணங்களையும் மீண்டும் இணைப்பதற்கான ஏற்பாட்டைச் செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் புதுடில்லி கேட்கவேண்டும் என்று பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், "இணைப்பை மீண்டும் செய்யுமாறு இலங்கையை இந்தியா இனிமேல் வற்புறுத்தப்போவதில்லை.1987 சமாதான உடன்படிக்கைக்குப் பிறகு இதுவரையான காலகட்டத்தில் பெருமளவு நிகழ்வுப்போக்குகள் நடந்தேறிவிட்டன.  இணைப்பை மீண்டும் செய்வது இக்கட்டத்தில் கஷ்டமானது. கடந்த காலத்துக்கு திரும்பிச்செல்லமுடியாது. அரசியல் தீர்வுடன் சம்பந்தப்பட்ட ஏனைய சகல விவகாரங்களையும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்ற பிரச்சினைக்கு பணயமாக வைத்திருப்பது விவேகமான செயலாக இருக்காது. இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில்  இணைப்பு விவகாரத்தை தமிழர்கள் தொடர்ந்து முக்கியத்துவப்படுத்தினால் இந்தியாவுக்கு ஆட்சேபனை இல்லை.காலத்துக்கு காலம் வரலாறு புதிய வாய்ப்புக்களைத் தருகிறது.அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் இறுதியில் தமிழர்கள் எதையும் பெறமுடியாத நிலையே ஏற்பட்டுவிடவும் கூடும்" என்று கூறினார்.

ஜெய்சங்கர் அன்று இலங்கை வந்தபோது அரசாங்கம் புதிய அரசியலமைப்பு  உருவாக்கச்  செயன்முறைகளை முன்னெடுத்திருந்தது. அதை ஒரு வாய்ப்பு என்று வர்ணித்த அவர் தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு இயன்றவரை அதைப் பயன்படுத்தவேண்டும் என்றும் கூட்டமைப்பினரிடம் வலியுறுத்தினார். இப்போது அந்த அரசியலமைப்பு உருவாக்கச்செயன்முறைகள் தடைப்பட்டுப்போயிருக்கின்றன. தமிழர்கள் பயன்படுத்தக்கூடியது என்று ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்த அந்த வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது. இப்போது அவர் தமிழர்களுக்கு என்ன சொல்வாரோ? 

தமிழர் பிரச்சினை என்று வரும்போது இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா எந்தவொரு நெருக்குதலையும் இனிமேல் பிரயோகிக்கப்போவதில்லை அல்லது நெருக்குதலைப் பிரயோகிக்கவேண்டும் என்று தமிழர்கள் இனிமேல் எதிர்பார்க்கக்கூடாது என்பதே ஜெய்சங்கரின் அன்றைய செய்தியாக இருந்தது. தங்களது பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்தவரை இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்கக்கூடியவற்றின் மட்டுப்பாடுகளை தமிழர்கள் புரிந்துகொண்டுதான் தங்களது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என்பதே ஜெய்சங்கரின் தெளிவான செய்தி. வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் தமிழர் பிரச்சினை குறித்து கருத்தை வெளியிடுவதற்கான சந்தர்ப்பம் அவருக்கு இன்னமும் ஏற்படவில்லை.

வீ.தனபாலசிங்கம்