(செ.தேன்மொழி)

தம்புள்ளை ரஜமகா விகாரையின் விகாராதிபதி அம்பகஹவெவ ராகுல தேரரிடம் 10 கோடி ரூபாய் கப்பம் கோரி மிரட்டியதாக கூறப்படும் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த மே மாதம் 20 ஆம் திகதி தேரரிடம் தொலைப்பேசியின் மூலம் தொடர்பு கொண்டுள்ள சந்தேக நபர்கள் , தாம் ஜாமாஅத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் தேரரை கொலைச் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். ஆனால் திட்டமிட்டபடி கொலை செய்யப்படாமலிருப்பதற்கு 10 கோடி ரூபாய் பணத்தை கப்பமாக தருமாறும் கோரியுள்ளனர்.  

இது தொடர்பில் தேரர் தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார். முறைப்பாட்டுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையலேயே, நேற்று சனிக்கிழமை குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொதான - கிம்பிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய திஷானாயக்க முதியன்சேலாகே வெலேகெதர அதுல ஜயசாந்த திஷாநாயக்க , ரன்மல்கடுவ - இனாமலுவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய குருகே பஹ_ரேகெதர ஜானக பிரசன்ன கருனாரத்ன மற்றும் தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நாமல் கோரலலாகே மிஹிது குணரத்ன எனப்படும் சந்தேக நபர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் பயன்படுத்திய தொலைப்பேசிகள் மூன்றையும் பொலிஸார்  கைப்பற்றியுள்ளனர். இவர்கள் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.