இங்கிலாந்து வீரர் ஜோசன் ரோய் சதம் அடித்த மகிழ்ச்சியில் நடுவர் மீது முட்டிமோதியது மைதானத்திலிருந்த அனைவருக்கும் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் சவுத்தம்டனில் இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரின் 12 ஆவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இப் போட்டியில் இங்கிலாந்து அணி 106 ஓட்டங்களினால் பங்களாதேஷை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 386 ஓட்டங்களை குவித்தது. அந்த அணி சார்பில் ஜோசன் ரோய் 153 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றார்.

இப் போட்டியில் ஜோசன் ரோய் 92 பந்துகளில் சதம் அடித்திருந்தார். 27 வது ஓவரில் 96 ஓட்டங்களை ரோய் எடுத்திருந்த போது, முஸ்தபிசூர் ரஹ்மான் வீசிய பந்தை ரோய் அடித்து விட்டு களத்தடுப்பாளரை பார்த்தபடி ஓடினார். களத்தடுப்பாளர் பந்தை தவறவிட்டதால் அது நான்கு ஓட்டம் ஆனது. 

இதனால் சதம் விளாசிய சந்தேசத்தில் துள்ளிக்குதிக்க அவர் முயன்றார். ஆனால், எதிரே நடுவர் இருப்பதை அவர் பார்க்கவில்லை. நடுவரும் அவர் வருவதை பார்க்கவில்லை. இதனால் ரோய் நடுவருடன் முட்டி மோத நடுவர் கீழே விழந்தார். 

முதலில் இங்கிலாந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் ரோய் சதம் அடித்த மகிழ்ச்சியில் கைதட்டினர். ஆனால், நடுவர் கீழே விழுந்ததை பார்த்து சிரித்து விட்டனர். குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் தலையில் கை வைத்தபடி சிரித்துக் கொண்டே இருந்தார்.

மைதானம் முழுவதும் சிரிப்பொலி சத்தம் கேட்டது. ரசிகர்களும் சிரிப்பை அடக்க முடியாமல் நீண்ட நேரம் சிரித்தனர்.  பின்னர் உடனடியாக ரோய் நடுவரை தூக்கி விட்டார்.

Photo credit : ‍ICC