(லியோ நிரோஷ தர்ஷன்)

இன்று காலை இலங்கைக்கு குறுகிய விஜயமொன்றை மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்னர் மீண்டும் இந்தியா நோக்கி பயணமாகியுள்ளார்.இந்தியாவிற்கும் இலங்கைக்குமான கூட்டு அச்சுறுத்தலாகவே பயங்கரவாதம் காணப்படுகின்றது. அந்த சவாலை ஒண்றிணைந்து எதிர்க்கொள்ள உறுதிப்பூணுவோம் என தெரிவித்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி , பாரத இதயத்தில் இலங்கைக்கு என்றும் சிறப்பிடம் உண்டு. குறுகிய விஜயம் என்றாலும் மிகவும் பலனுள்ளதாகவே அமைந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை விஜயம் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது உத்தியோகப்பூர்வ டூவிட்டர் தளத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும், இலங்கைக்கு மீண்டும் வர கிடைத்ததையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். எனது இந்த விஜயம் இந்த அழகா தீவிற்கான மூன்றாவது விஜயமாக அமைந்துள்ளது. உதவி - ஒத்துழைப்புகள் இலங்கைக்கு தேவைப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதனை வழங்க இந்தியா ஒருபோதும் மறந்தில்லை . நண்பனின் தேவையை மறந்து செயற்பட்டதில்லை. 

சரியாக 10 நாட்களுக்கு பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் சந்தித்துள்ளேன். பயங்கரவாதம் இலங்கைக்கும் - இந்தியாவிற்கும் கூட்டு அச்சுறுத்தல் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவும் நானும் ஒப்புக்கொண்டுள்ளோம்.  எனவே ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பானதும் வளமானதுமான எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்து செயற்பட உறுதிப்பூண்டுள்ளோம். 

மிக விரைவில் இலங்கை மீள் செயற்பட்டு அபிவிருத்தி இலக்குகளை அடையும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

பயங்கரவாதத்தின் கொடூரமான செயல்களினால் இலங்கையின் எழுச்சியை தோல்வியடைய செய்ய இயலாது. இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கான கொச்சிக்கடை - புனித அந்தோனியார் திருத்தலத்திற்கு விஜயம் செய்து உயிரிழந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்தினேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் காயமடைந்தவர்களுக்கும் எனது இதயப்பூர்வமான கவலையை தெரிவித்துக்கொள்கின்றேன். 

பாரத இதயத்தில் இலங்கைக்கு என்றும் சிறப்பிடம் உண்டு. குறுகிய விஜயம் என்றாலும் மிகவும் பலனுள்ளதாகவே அமைந்தது. நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கைளில் இலங்கைக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் இந்தியா வழங்கும் . மறக்க முடியாத வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சற்றுமுன்னர் பிரதமர் மோடி தனது விஜயத்தை முடித்துக்கொண்டு, மீண்டும் இந்தியா நோக்கி பயணமாகியுள்ளார்.