உரிமையை இழந்தோம்
உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
உறவை மறக்கலாமா
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை
நினைக்கலாமா…
1986 இலே வெளியான ஊமை விழிகள் எனும் திரைக்காவியத்திலே கவிஞன் மேற்கண்டவாறு கவிபுனைய அதற்கு உயிரோட்டமும் கொடுக்கப்பட்டிருப்பது அவ்வப்போது சந்தர்ப்பத்துக்கேற்றவாறு மீட்டிப்பார்க்கச் செய்துவிடுகிறது.
தோட்டத் தொழிலாளி ஒருவனின் முழங்காலுக்கு கீழே இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் அட்டை கூட ஆன மட்டும் அதாவது ஒட்டுமொத்தமான உடல் முழுதும் இரத்தத்தை உறி ஞ்சி நிறைத்துக் கொண்டதன் பின்னர் நீங்கி கீழே விழுந்து விடுகிறது.
ஆனாலும் தொழிற்சங்கம் என்ற பெயரிலும் சந்தா என்ற போர்வையிலும் தோட்டத்தொழிலாளர்களையும் அவர்களது உடல் முழுதும் உள்ள இரத்தத்தையும் உறிஞ்சும் துர்பாக்கியம் இன்றும் அரங்கேறிக்கொண்டு தானிருக்கிறது.
இது போதாமைக்கு மேலே பாட்டிலே கூறப்பட்டுள்ளது போன்று மலையகத்திலே வாழக்கூடிய ஒவ்வொரு தொழிலாளியினதும் ஒவ்வொரு வாக்காளனதும் உணர்வுகளும் இன்று இல்லாது செய்யப்பட்டு வருகின்றது.
உரிமைகளைக் கேட்டுப்பெற முடியாத நிலையிருக்க மலையகத்தில் உணர்வுகளையும் சூறையாடுகின்ற சூட்சுமமான செயற்திட்டங்கள் மிகவும் கச்சிதமாக இடம்பெற்று வருகின்றன.
இலங்கையிலே தோட்டத்தொழிலாளர்களின் வரலாறு 200 ஆண்டுகளைக் கடந்து நிற்கின்றது. உலகத் தொழிலாளர்கள் உரிமை வென்று 60 வருடங்கள் கடந்து நிற்கின்றன. எனினும் உரிமைகள், உடமைகள், உணர்வுகள் இழக்கச் செய்யப்பட்ட சமூகமாக மலையகத்திலே தோட்டத்தொழிலாளர்கள் இன்றும் இருந்து வருகின்றனர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு சாராயப் போத்தலைக் காட்டிக் காட்டியே அவர்களது உரிமைகள், உடமைகள், உணர்வுகள் என அனைத்தும் சின்னா பின்னமாக்கப்பட்டுவிட்டன. தேர்தல் வந்தாலோ அல்லது வருடா வருடம் மே தினம் வந்தாலோ அங்கு சாராயத்துக்கு மவுசு எகிறிவிடுகிறது.
சாராயப் போத்தல் சாமியாகவும் சொல்லப்படுகின்ற கதைகள் வேதமாகவும் புலப்படுவதால் அங்கு சீர்குலைவு நிலைகொண்டுவிடுகிறது.
நாளை ஞாயிற்றுக்கிழமை சர்வதேச தொழிலாளர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. தொழிலாளர்களின் சமகாலத்து நிலைமைகள் வெளிப் படுத்தப்படுகின்ற நாளாகவும் முதலாளித்துவத்துக்கும் அதிலும் மேலாக ஆட்சி அதிகாரத்தில் வீற்றிருப்போருக்கும் செய்திகளைக் கூறுவதற்கு உரிமைகளைப் பெறுவதற்கான திடமான கோரிக்கைகளை வலியுறுத்தல்களை முன்வைப்பதற்குமே இந்த நாள் அமைந்திருக்கின்றது.
சர்வதேச தொழிலாளர் தினத்தில் சர்வதேசத்தில் நடப்பது என்ன என்று நாம் ஆராய்வதற்கு முன்பதாக நமது மண்ணிலே அதுவும் மலையகத்திலே என்ன நடக்கிறது என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.
குறிப்பாக மலையகத்தை எடுத்துக்கொண் டால் நாளைய தினத்துக்காக அதாவது சர்வ தேச தொழிலாளர் தினத்தை அனுஷ்டிப்பதற் குப் பதிலாக அதனை கொண்டாடுவதற்கும் கூத்தாடுவதற்குமாக ஒரு கூத்து விழாவாகவே சித்திரிக்கப்பட்டு இது வரையிலும் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
உரிமைகள் பற்றி குரல்கொடுப்பதற்கும் குறைபாடுகள் பற்றி எடுத்துரைப்பதற்குமான இந்த உன்னதமான தினத்தை உதாசீனப்படுத்தும் வகையிலும் தொழிலாளரின் உரிமை களை, உணர்வுகளை தவிடுபொடியாக்கி இல்லாது செய்கின்ற வகையிலுமான செயற்பாடுகள் தற்போது நிறைவடைந்திருக்கின்றன.
மலையகத்தில் அரசியல் தொழிற்சங்க அதிகார அந்தஸ்துகளையும் இருப்புக்களையும் வெளிக்காட்டுகின்ற நாளாக இது அமைந்திருக்கிறது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனித்து நுவரெலியாவிலும் மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய தரப்புகள் இணைந்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலவாக்கலையிலும் மே தினத்தை அனுஷ்டிப்பதற்கான தாராள ஏற்பாடுகள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டுவிட்டன.
இந்த இரு தரப்புக்களும் இவ்வாறு மே தின பகிரங்க கூட்டங்களை நடத்துகின்ற அதே சந்தர்ப்பத்தில் மலையகத்தில் இயங்கிவருகின்ற சிறு சிறு தொழிற்சங்கங்களும் அரசியல், அரசியல் சாரா அமைப்புக்களும் இடது சாரிகளும் கூட மே தினத்தை அனுஷ்டிக்கத் தயாராகியுள்ளன.
இன்னும் சில தொழிற்சங்கங்கள் மே தின த்தை துக்கதினமாக அனுஷ்டிப்பதற்கும் வேறு சில அமைப்புகள் கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்துவதற்கும் ஆலய வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் தீர்மானித்திருக்கின்றன.
இங்கு நிலையான வித்தியாசங்கள் காணப்படுகின்றன. சிறு தொழிற்சங்கங்கள், அரசியல், அரசியல் சாரா சிறு அமைப்புகள், இடது சாரி அமைப்புகள் என்ற தரப்பிலே சர்வதேச தொழிலாளர் தினம் என்ற உண்மையான உணர்வு வெளிக்காட்டப்படுகின்றது.
ஆனாலும் மலையகத்தில் இரு பெரும் அமை ப்புகளின் மே தினமானது மேற்சொன்னவாறு தமது மக்கள் பலத்தையும் அதிகார பலத்தையும் வெளிக்காட்டுவதற்கே துணிந்திருக்கின்றன. களத்திலும் குதித்திருக்கின்றன.
ஆதலால் இங்கு உண்மையான தொழிலாளர் தினம் பொய்யாக்கப்படுகிறது. தொழிலாளரின் உரிமைக்குரல் வீணடிக்கப்படுகிறது. உணர்வுகள் நசுக்கப்படுகின்றன.
அது மாத்திரமின்றி அரசியல் தொழிற்சங்கத் தலைமைகளுக்கு மேடையமைத்து, மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, அழகுபார்க்கும் தொழிலாளியின் மாறா நிலை நிலைத்திருக்கவே செய்கிறது. இவை அனைத்தையும் செயலுருவாக்கம் செய்வதற்கு சாராயம் பக்க பலமாக இருக்கிறது.
இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது சாரா யத்தின் செல்வாக்கு செலுத்தலானது அரசியல் தொழிற்சங்க வாதிகளிடத்திலும் பகடைகளா கவும் அப்பாவிகளாகவும் இருந்துவருகின்ற தோட்டத் தொழிலாளர்களிடத்திலும் முரண்பட்ட கருத்துக்களை தோற்றுவித்திருக்கின்றது.
தேர்தலோ மேதினமோ இந்த முக்கியத்துவம் மிக்கதான இரு சந்தர்ப்பங்களின் போதும் அரசியல் வாதிகளும் தொழிற்சங்கத்தலைமைகளும் அவர்களது பிரதானிகளும் தொழிலாளர்களை அணுகி சாரா யத்தை மாத்திரமே பண்டமாற்றுப் பொருளாக வைத்து பேரம் பேசுவதாக தொழிலாளர்கள் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.
குறிப்பிட்ட தொகை அல்லது எண்ணிக்கையில் சாராயப் போத்தல்களைப் பெற்றுதருவதாகக் கூறியே பேரம் பேசப்படுவதாகக் கூறுகின்றனர் தொழிலாளர்கள்.
ஆனால் மறுபுறத்தில் தொழிற்சங்கத் தலைமைகள் அரசியல்வாதிகள் மற்றும் பிரதானிகள் எனப்படுவோர் கூறுகையில்,
சாராயத்தைக் காட்டி எதையும் சாதித்து விடலாம். அந்தளவு சாராயத்துக்கு சக்தி இருக்கிறது என்று கூறுகின்றனர். அது மாத்திரமின்றி தோட்டங்களில் இருக்கின்ற தோட்டக் கமிட்டித் தலைவர்களும் இன்னும் சில தரப்பினருமே எம்மைப் போன்றவர்களை அணுகி சாராயப் போத்தல்களின் எண்ணிக்கையையும் கூறி தங்களது கணக்கை முடித்துச் செல்கின்றனர் என்றும் குறித்த தினத்திற்கு தாம் சாராயப் போத்தல்களை விநியோகித்து விடுவதாகவும் கூறுகின்றனர்.
இங்கு தோட்டத் தொழிலாளர்கள் கூறுவது உண்மையா பொய்யா என்ற சந்தேகம் வலுப்பதோடு அரசியல் தொழிற்சங்கத் தலைமைகள் அல்லது பிரதானிகள் கூறுவது தான் சரியா, தவறா என்ற நிலையானதொரு முடிவுக்கே வர இயலாத நிலை தோன்றியுள்ளது.
எப்படியிருப்பினும் சாராயப் போத்தலை கருவாக வைத்து அல்லது துரும்புச் சீட்டாக வைத்து மலையகத் தொழிலாளர்களிடத்தில் சூதாட்டம் நடத்தப்படுகிறது. முழுப் பூசணியை சோற்றில் மறைத்து விடும் அளவில் இங்கு பொய் ஒன்று சோடிக்கப்பட்டிருப்பது புலனாகின்றது.
தோட்டத் தொழிலாளர்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தி வருகின்ற மலையகத் தலைமைகள் காலத்துக்கு காலம் சந்தர்ப்பத்துக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள், உறுதி மொழிகள் கிடப்பில் போடப்படுகின்றன. இல்லாவிட்டால் காற்றில் பறக்க விடப்படுகின்றன.
ஆசைகாட்டி மோசமிழைத்த கதையாக 1000 ரூபா சம்பள உயர்வு அமைந்ததைப் போன்று தான் தீபாவளி முற்பணம் இல்லாது போய் தைப் பொங்கல் முற்பணமாக பேசப்பட்டு இறுதியில் ஏமாற்றமே எஞ்சியது. அதுமட்டுமல்லாது அந்த உறுதிமொழிகள் மறக்கடிக்கவும் செய்யப்பட்டுவிட்டன.
தற்போது தனியார் ஊழியருக்கு விதந்துரைத்த 2500 ரூபா என்ற அடிப்படைச் சம்பளத் துடனான அதிகரிப்பு தோட்டத்தொழிலாளர்களுக்கும் கிடைக்கப் பெறுவதாகவும் அது பாராளுமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
அந்தத் தொகை கையில் கிடைத்தால் மட்டுமே மகிழ்ச்சி. எனினும் அதன் சாத்தியக் கூற்றுத் தன்மைகள் கேள்விக்குறிகளுக்குள் பொதிந்து கிடப்பதாகவும் தோன்றுகிறது.
இவ்வாறான நிலையில் தான் மலையகத்தில் சாராயத் தவறணைகளை வைத்து தோட்டத் தொழிலாளர்களை குறிவைத்து வியாபாரம் செய்யும் அரசியல்வாதிகள் தோட்டத்தொழிலாளர்களின் குறை வருமானத்தின் மிகுதிகளை யும் சூறையாடிக்கொண்டிருக்கின்றனர்.
இன்றைய நிலையில் மலையகத்தில் தோட்டத்தொழிலாளர்கள் வர்க்கத்தின் உணர்வுகளுடன் விளையாடும் போக்கு மேம்படுத்தப்பட்டு வருகிறது. உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படுவது கிடையாது.
தொழிலாளியானவன் மரியாதை செலுத்தி நடந்து கொள்வதை அவதானிக்கும் அரசியல் தலைமைகள் அவர்களை அடிமைகளாக நடத்துவதற்கு முற்படுகின்றன.
இந்நிலை மாற வேண்டும். நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கென மலையகமும் கணிசமான பங்களிப்பினை பெற்றுக்கொடுத்திருக்கின்றது என்பதை மறைக்க முடியாது. அந்தவகையில் ஆட்சி மாற்றியமைக்கப்பட்டது. ஆட்சி தான் மாறியதே தவிர மலையகத்தில் மக்களின் அவலக்காட்சிகள் எதுவும் இன்னும் மாறியதாக இல்லை.
ஆட்சி மாற்றத்திற்கு உதவிய மலையக சமூகத்துக்கு அரசாங்கம் உரிய மரியாதையை அல்லது கைமாறை இன்னும் காட்டவில்லை என்று கூறமுடியும். ஒவ்வொரு மேதினத்தின் போதும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றனவே தவிர அவை நடைமுறையோடு எத்தகைய சாத்தியத்தை உண்டுபண்ணியிருக்கின்றன அல்லது நடைமுறைத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின் றன என்பது கேள்வி தான்.
மேதினத்தை கருவாக வைத்து அரசியல் மேடையமைக்கும் தலைமைகள் குறித்து பின்னணி தொடர்பிலும் மலையகசமூகம் குறிப்பாக இளைய சமூகம் சிந்திக்க வேண்டும்.
மலையகம் உருப்படவேண்டுமானால், முன்னேற வேண்டுமானால், எதிர்காலம் சிறக்க வேண்டுமானால் தோட்டத் தொழிலாளர்களுக்கான உரிய அந்தஸ்து, நிலையான பொருளாதாரம் நீடித்து நிலைக்க வேண்டுமானால் “நான் யாருக்கும் அடிமை இல்லை” என்ற வாதத்தை மலையகத்தின் ஒவ்வொரு மைந்தனும் நெஞ்சுறுதியோடு கூறவேண்டுமானால், ஏமாற்றுக்காரர்களை எதிர்த்து நிற்கும் துணிவு பிறக்க வேண்டுமானால் இன்றைய இளைஞர், யுவதிகளின் சிந்தனையிலும், செயலிலும் மாற்றம் ஏற்படவேண்டும்.
அந்த சிந்தனையும் மாற்றமும் மலையகத் தில் செய்ய வேண்டிய முதற்காரியம் கள்ளச்சாராயத்தை ஒழித்துக் கட்டுவதாக இருக்கவேண் டும்.
மலையகத்தில் கள்ளச்சாராயம் ஒழித்துக்கட்டப்பட வேண்டும் அடுத்ததாக சாராயக்கடைகளை நிரந்தரமாக மூடுவதற்கு திட்டம் தீட்டி செயற்பட வேண்டும். புதிதான அனுமதிப்பத்திரங்களுக்கு எதிராக நிற்கவேண்டும்.
அரசியல், தொழிற்சங்க வாதிகளின் பகட்டு வார்த்தைகளின் அர்த்தங்களை எடுத்துரைக்க வேண்டும். இவ்வாறான உறுதிமொழிகளே நாளைய மே தினத்தில் இளைஞர் சமுதாயம் எடுத்துக்கொள்ளவேண்டும்.
இத்தகையதோர் பாரிய நீடிய வேலைத்திட்டம் வெற்றிக் கொடியைக் கட்டவேண்டுமானால் ஊருக்கு ஊரும் பிரதேசத்துக்கு பிரதேசமும் மாவட்டத்துக்கு மாவட்டமும் மாகாணத்துக்கு மாகாணமும் இளைஞர் சமுதாயம் ஒருவலைப்பின்னலுடனான இணைப்பினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஒட்டுமொத்த மலையகத்தின் இளைஞர் சமு தாயமும் ஒரே வலையமைப்பின் கீழ் ஒன்றி ணைந்தால் மலையகத்தை மாற்றிய மைக்க முடியும். 200 வருடகால மலையக மக்களின் வரலாறு இன்றைய இளைஞர் சமூகத்தில் மாற்றிய மைக்கப்பட்டது என்று வரலாறு கூறுவதற்கும் அது வழிவகுக்கும்.
எமது மூத்தோரின் காலம் கடந்து நிற்கிறது.
எனவே இன்றைய இளைஞர்கள் நாளைய சமுதாயத்துக்காக ஏதேனும் சாதிக்காவிடின் அது பழிபாவமாக மாறிவிடும். நாளை நமது சமூகம் நம்மை குறை கூறாதிருக்க நாம் சமகாலத்தில் சிந்திக்க வேண்டியது அவசிய மாகிறது. எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பதற்கு இன்றைய தலைமைகளும் தலை முறைகளும் நாளைய தலைமைகளுக்கும் தலை முறைகளுக்கும் சிறந்த உதாரணங்களாக இருக்க வேண்டும்.
சமூகத்தின் பாலான உண்மையான மனது டன் மேதினம் என்ற உன்னதமான தினத்தில் குறிப்பாக மலையகத்தின் இளைஞர், யுவதி கள் சிந்தித்து உறுதிமொழியெடுத்து தங்களு க்கு தாங்களே தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிப்பது சிறப்பாகும்.
இளைஞர் வலையமைப்பை கட்டியெழுப்புவ தற்கு இன்றைய நவீன உலகில் பல வழிகள் உள்ளன. இளைஞர் சமுதாயம் ஒன்றிணையும் பட்சத்தில் வழி நடத்துவதற்கு மலையகத்தை நேசிக்கின்ற புத்திஜீவிகள் பலர் இருக்கின்றனர்.
எமது முன்னோர்களும் மூத்தோர்களும் சொல்லி வைத்ததையும் கல்விமான்களும் எழுத்தாளர்களும் ஏடுகளில் வடித்ததையும் அவற்றுக்கு செயல் வடிவம் கொடுத்து உயிர் கொடுக்க உறுதிபூணுங்கள். 2016 இன் மே தின உறுதிபூணல் மலையகத்தில் உயிருள்ளதாக அமையட்டும்.
(ஜே.ஜி.ஸ்டீபன் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM